

ஒவ்வொரு தேசமும் புனையப்பட்ட அழகான கதைகளைக்கொண்டே தன்னைத்தானே தேற்றிக்கொள்கிறது. சிறுவயதிலிருந்தே நமது வரலாற்றை ஒருவிதக் கவர்ச்சிகரமான, உணர்ச்சிமயமான கண்ணாடியின் வழியே பார்க்கவே நாம் பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். நமது வரலாற்று நாயகர்களை எவ்விதக் குறையுமற்ற புனிதர்களாகவே சித்திரிக்கிறோம். ஒரு தலைவரின் வெளிப்படையான நன்மைகளைக் கொண்டாடும் அதே வேளையில், அவர்களின் ஆழமான முரண்பாடுகளை முற்றிலுமாகப் புறக்கணிக்கும் ‘சாம்பல் மண்டலம்’ (Gray zone) எனும் சவுகரியமான இடைவெளியிலேயே வாழ முற்படுகிறோம். இந்தச் சாம்பல் மண்டலம் என்பது சோம்பேறித்தனமான ஒரு சமரசமாகும். ஒரு தலைவரின் வெளிச்சமான பக்கத்தை மட்டும் வழிபடவும், அவரின் இருண்ட, போலித்தனமான பக்கங்களை அமைதியாகப் புதைத்துவிடவும் இது நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
ஆனால், புதைக்கப்பட்ட உண்மைகளின் மீது எழுப்பப்பட்ட ஒரு தேசத்தால் ஒருபோதும் நிமிர்ந்து நிற்க முடியாது. மெய்யான தேசப்பற்று என்பது குருட்டுத்தனமான வழிபாட்டைக் கோரவில்லை; மாறாக, அது அஞ்சாமையையும் நேர்மையான தெளிவையுமே கோருகிறது.
இன்று, அந்தச் சவுகரியமான மூடுபனியிலிருந்து நாம் வெளியே வர வேண்டியிருக்கிறது. நமது குடியரசின் உச்சகட்ட அரசியல் விதியான ‘தேசத்தந்தை’ எனும் பட்டத்துக்குச் சவால் விடுக்க வேண்டியிருக்கிறது. ஏறத்தாழ ஒரு நூற்றாண்டாக, மகாத்மா காந்தி மட்டுமே நமது தேசிய அடையாளத்தை உருவாக்கிய ஒரே சிற்பி என்று பாடப்புத்தகங்கள் போதித்து வருகின்றன. ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கு எதிராக வெகுஜன மக்களை அவர் வழிநடத்தியதால், அந்தப் பட்டம் இயல்பாகவே அவருக்குச் சொந்தமானது என்று அந்த வரலாற்று விவரிப்பு கூறுகிறது.
ஆனால், ஒரு ‘தேசம்’ என்றால் உண்மையில் என்ன என்பதைச் சற்று நிதானித்து யோசிப்போம். தேசம் என்பது வெறும் நிலப்பரப்புதானா? 1947-இல் வெளியேறிய ஆங்கிலேய ஆட்சியாளர்களால் வரைபடத்தில் வரையப்பட்ட எல்லைக்கோடுகளின் தொகுப்புதானா? அந்நிய ஆட்சியிடமிருந்து மீட்டெடுக்கப்பட்ட வெறும் அசையாச் சொத்துதான் தேசம் என்றால், அந்தப் பழைய கதை செல்லுபடியாகலாம்.
ஆனால், ஒரு மெய்யான தேசம் என்பது அதன் எல்லைகளால் வரையறுக்கப்படுவதில்லை; மாறாக, அது தனது குணநலன்களாலேயே வரையறுக்கப்படுகிறது. தேசம் என்பது ஒரு சமூக ஒப்பந்தம். அது தன் வீதிகளில் நடமாடும் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படைத் தன்னாட்சி, சம உரிமை மற்றும் உடைக்க முடியாத நீதியை உறுதிசெய்யும் ஒரு அறநெறி வாக்குறுதியாகும்.
ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, நமது சமூகம் இரண்டு விதமான கொடுங்கோன்மைகளால் சிதைந்திருந்தது. ஒன்று, வெளிப்படையாகத் தெரிந்த அந்நிய அடக்குமுறையாளனின் கொடுங்கோன்மை. ஆனால், அதற்கு அடியில் மிகப்பழமையான, மறைக்கப்பட்ட, பேரழிவை விளைவிக்கும் உள்நாட்டுக் கொடுங்கோன்மை ஒன்று வாழ்ந்துகொண்டிருந்தது: அதுவே தீண்டாமை மற்றும் சாதியமைப்பின் நிறுவனமயமாக்கப்பட்ட கொடூரம். சக மனிதனின் நிழல் பட்டாலே தீட்டு என்று நம்பும் ஒரு சமூகம் தேசமே அல்ல; அது ஒருங்கமைக்கப்பட்ட ஒடுக்குமுறை அமைப்பு. எனவே, இந்தியாவுக்கான மெய்யான போர் என்பது ஆட்சியாளர்களின் நிறத்தை வெள்ளையிலிருந்து பழுப்பாக மாற்றுவது மட்டும் அல்ல. இந்திய சமூகத்தின் உள் கட்டமைப்பை முற்றிலுமாக மறுசீரமைப்பதே அந்த மெய்யான போராக இருந்தது.
பிம்பங்களை உடைத்தெறிதல்: தீவிரமான அம்பேத்கரை மீட்டெடுத்தல்
இந்த மெய்யான போரைப் புரிந்துகொள்ள, முதலில் நாம் பாபாசாகேப் அம்பேத்கரைப் பற்றிய ஓர் ஆபத்தான பொய்யை உடைத்தெறிய வேண்டும். டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரை அமைதியான, சாதுவான ஒரு சிலையாகப் பார்ப்பதை நிறுத்துங்கள் - அவர் அமைதி உருவமல்ல, ஆதிக்கம் செலுத்தும் கட்டமைப்புகளைத் தகர்த்தெறிந்த பேரதிர்வு!
இன்றைக்கு அவரை ஒரு சாதுவான, மென்மையான சீர்திருத்தவாதியாகக் சுருக்கிவிடும் சூழ்ச்சி ஒன்று நடக்கிறது. ஆனால் அம்பேத்கர், சீர்கெட்டுப்போன அமைப்பில் சிறு சிறு பழுதுகளைப் பார்க்க வரவில்லை; அந்தப் பிற்போக்கு அமைப்பையே அடியோடு தகர்த்தெறிய வந்தவர்! சீர்திருத்தவாதிகள் சிறிய மாற்றங்களைக் கெஞ்சிக் கேட்பார்கள், ஆனால் புரட்சியாளர்களோ முழுமையான விடுதலையைக் கோருவார்கள் - அம்பேத்கர் தன் ஆன்மாவின் ஆழம் வரை ஒரு தீப்பொறி பறக்கும் புரட்சியாளர்.
‘தீவிரமான அம்பேத்கரை மீட்டெடுப்பது’ (Reclaim the Radical Ambedkar) என்பது அவரைச் சுற்றி எழுப்பப்பட்டுள்ள பாதுகாப்பான, புனிதமாக்கப்பட்ட பொய்களை அடித்து நொறுக்குவதாகும்; அவரது மெய்யான தரிசனத்தின் அடக்க முடியாத, அணைக்க முடியாத புரட்சித் தணலை நம் கைகளில் ஏந்துவதாகும்!
அந்தப் புரட்சித் தணலை விளங்கிட, மகாத்மா காந்தியும் டாக்டர் பீமராவ் ராம்ஜி அம்பேத்கரும் பயணித்த இணைப் பாதைகளை நாம் ஆராய வேண்டும். மனித சமத்துவத்தை எண்ணிப் பார்ப்பது, வாழ்வது மற்றும் அதைச் சட்டமாக உருவாக்குவது ஆகிய ஆழமான கட்டங்களின் வழியே இந்தப் பயணம் நகர்கிறது.
கட்டம் 1: குறிப்பிட்ட எல்லையின் வரம்புகள் (பிரிக்கப்பட்ட பாரம்பரியம்)
சமத்துவத்தின் முதல் கட்டத்தை அளவிடக்கூடிய சமத்துவம் (Measurable Equality) என்று அழைக்கலாம். இது குறிப்பிட்ட பிரிவுகள் சார்ந்த சமத்துவமாகும். இது புள்ளிவிவர ரீதியிலானது, நடைமுறையானது மற்றும் தெளிவான விதிகளுக்கு உட்பட்டது. பொருளாதாரச் சமத்துவம், சமூகப் பிரதிநிதித்துவம் அல்லது கல்வி வாய்ப்புகள் பற்றி நாம் பேசும்போது, இந்த அளவிடக்கூடிய விஷயங்களையே குறிப்பிடுகிறோம். நமது சட்ட அமைப்பில், இடஒதுக்கீடு போன்ற வழிமுறைகள் இந்த எல்லைகளுக்குள் வரலாற்று அநீதிகளைச் சரிசெய்ய வடிவமைக்கப்பட்ட அளவிடக்கூடிய கருவிகளாகும்.
1920-கள் மற்றும் 1930-களில், இந்தியாவில் இத்தகைய சமத்துவத்துக்கான போர் வழிபாட்டுத் தலங்கள் மற்றும் பொதுப் பாதைகளுக்கான உரிமைக் களத்தில் நிகழ்ந்தது. ஒடுக்கப்பட்ட சாதிகள் இந்து கோயில்களுக்குள் நுழைவதற்கு மட்டுமின்றி, கோயில்களுக்குச் செல்லும் பொதுச் சாலைகளில் நடப்பதற்குக் கூடத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
மகாத்மா காந்தி இந்தச் குறிப்பிட்ட சீர்திருத்தத்தில் தீவிரமாக ஈடுபட்டார். காந்தி ஒரு பாரம்பரிய இந்துவாக இந்த நெருக்கடியை அணுகினார். இந்து மதம் தன்னைத்தானே சீர்திருத்திக் கொண்டு, ஒதுக்கப்பட்ட மக்களைத் தன் கரங்களுக்குள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார். அம்மக்களை அவர் வாஞ்சையோடு ‘ஹரிஜனங்கள்’ என்று அழைத்தார். உண்ணாவிரதங்கள் இருந்தார்; கோயில் நுழைவை அனுமதிக்குமாறு பழமைவாதப் பூசாரிகளுக்கு அறநெறி அழுத்தத்தைக் கொடுத்தார்.
காந்தியின் அணுகுமுறை கடந்த காலத்தைப் பழைய நினைவுகளோடு கற்பனை நவிற்சியாகப் பார்த்தது; அவர் பாரம்பரிய இந்தியக் கிராமங்களை ஒரு தூய்மையான, அறநெறி மையமாக உருவகித்தார். சாதியமைப்பு எனும் நோயை அவர் அழிக்கப்பட வேண்டிய முழுமையான தீமையாகப் பார்க்காமல், ஒரு சிறிய முகநூல் மாற்றத்தின் மூலம் சரிசெய்யப்பட வேண்டிய கெட்டுப்போன ஒரு கொள்கையாகவே பார்த்தார்.
ஆனால், மஹார் சாதியின் கொடூரமான யதார்த்தத்தில் பிறந்த பாபாசாகேப் அம்பேத்கரின் பார்வை முற்றிலும் வேறாக இருந்தது. இந்தியக் கிராமங்களை கற்பனை நவிற்சியாகப் பார்க்கும் சொகுசு அவருக்கு இருக்கவில்லை. அவர் கிராமப்புற இந்தியாவைப் பார்த்து அதை ஆன்மிகச் சொர்க்கமாகக் கருதவில்லை; மாறாக, அது அறியாமையின் குகை, பாகுபாட்டின் கோட்டை மற்றும் மனிதச் சீரழிவின் தொழிற்சாலை என்பதை நேரடியாகக் கண்டார். குழந்தைப் பருவத்தில், அம்பேத்கர் பாகுபாட்டைப் புத்தகங்களில் படிக்கவில்லை; பள்ளியில் குடிநீர் மறுக்கப்பட்டபோதும், தன்னைச் சுற்றிலும் மனிதர்கள் கல்லாக மாறியபோதும் அதன் கசப்பான நஞ்சைத் தன் நாவிலேயே சுவைத்தார்.
காந்தியின் குறுகிய பார்வையின் வரம்புகளை அம்பேத்கர் தெளிவாக உணர்ந்தார். வெறும் கோயில் நுழைவுக்காக மட்டும் தங்கள் புரட்சி ஆற்றலை வீணடிக்க வேண்டாம் என்று அவர் தன் ஆதரவாளர்களைக் கேட்டுக்கொண்டார். ஏன்? ஏனெனில், கோயில் நுழைவு ஒடுக்கப்பட்டவருக்கு நிலத்தையோ, பொருளாதார சுதந்திரத்தையோ, தரமான கல்வியையோ, அரசியல் அதிகாரத்தையோ தரப்போவதில்லை. தங்களை மனிதர்களாகவே மதிக்காத புனித நூல்களைக் கொண்ட தெய்வங்களின் முன் முழங்காலிட மட்டுமே அது அனுமதிக்கும்.
காந்தியின் வார்த்தைகளில் இருந்த ஆழமான அறிவுசார் இரட்டை நிலையை அம்பேத்கர் தோலுரித்துக் காட்டினார் - நமது வரலாற்று ஆசிரியர்கள் தசாப்தங்களாக மறைக்க முயன்ற உண்மை அது. ஆங்கிலேய ஆட்சியாளர்களாலும் உலகளாவிய தாராளவாதிகளாலும் படிக்கப்பட்ட ‘யங் இந்தியா’ (Young India) போன்ற ஆங்கில இதழ்களில் எழுதும்போது, காந்தி தீண்டாமையின் கொடூரங்களைக் கண்டிக்கும் அறிவொளி பெற்ற ஜனநாயகவாதியின் முகமூடியை அணிந்தார். ஆனால், ‘நவஜீவன்’ (Navajivan) எனும் குஜராத்தி இதழில் எழுதும்போது, அந்த முகமூடி நழுவியது. அப்பக்கங்களில், பாரம்பரிய சாதியமைப்பைப் பாதுகாத்துப் பேசிய காந்தி, அது சமூக ஸ்திரத்தன்மையைப் பராமரிக்கும் அவசியமான ஆன்மிகக் கட்டமைப்பு என்றார்.
என்.ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி
இந்த அரசியல் பிம்பத்தின் முன் பணிய அம்பேத்கர் மறுத்துவிட்டார். “நான் திரு. காந்தியுடன் வேறுபடுகிறேன் என்றால், அதற்கு நான் இந்தியாவை அதிகமாக நேசிப்பதே காரணம்” என்று அவர் புகழ்பெற்ற முறையில் அறிவித்தார். காந்தி ஒடுக்குபவனின் மனசாட்சியைத் தேற்ற விரும்பினார்; ஆனால் அம்பேத்கரோ, ஒடுக்கப்பட்டவனின் மனதை விடுவிக்க விரும்பினார்.
கட்டம் 2: அகில உலகப் பாய்ச்சல் (மகத் சத்தியாகிரகம்)
சிறு சிறு தனிப்பட்ட உரிமைகளுக்காகப் போராடுவது ஒடுக்கப்பட்ட மக்களைச் சமூகத்தின் அனுமதிக்காகக் கெஞ்சும் சுழற்சியிலேயே வைத்திருக்கும் என்பதை உணர்ந்த அம்பேத்கர், போராட்டத்தின் பரிமாணத்தை உயர்த்தினார். அவர் அளவிடக்கூடிய சமத்துவத்திலிருந்து சுய-தெளிவான சமத்துவத்திற்கு (Self-Evident Equality) நகர்ந்தார்.
சுய-தெளிவான உண்மை என்பது எவ்வித நிரூபணமும் தேவையில்லாத ஒரு தொடக்கப் புள்ளியாகும். அதை நிரூபிக்குமாறு கேட்கப்படும் நிபந்தனைகளுக்குப் பணயம் வைக்க முடியாது. ஒரு சமத்துவமற்ற சமூகத்தில், ஆளும் வர்க்கம் எப்போதும் ஒடுக்கப்பட்டவர்களிடம் தங்கள் தகுதியை நிரூபிக்குமாறு கேட்கிறது: “நீங்கள் போதுமான அளவு கல்வி கற்றுவிட்டீர்களா? தூய்மையாக இருக்கிறீர்களா? சமமான அந்தஸ்தைப் பெற நாகரிகமடைந்துவிட்டீர்களா?”
927 மார்ச் 20 அன்று, மகத் நகரில் உள்ள சௌதார் குளத்தில், அம்பேத்கர் இந்த வற்புறுத்தலுக்கு எதிராக நேரடிப் புரட்சியை மேற்கொண்டார். ஆயிரக்கணக்கான ஒடுக்கப்பட்ட மக்களை அழைத்துச் சென்று ஒரு மிக எளிய செயலைச் செய்தார்: பொதுக் குளத்திலிருந்து நீரை அள்ளிப் பருகினார். ஒடுக்கப்பட்டவனின் தொடுதல் நீரையே தீட்டுப்படுத்திவிடும் என்ற மேல்சாதி விதிகளுக்கு எதிரான கடுமையான சமூக சவால் அது.
ஆனால், மகத்தின் மெய்யான மேதைமை அம்பேத்கர் அங்கு ஆற்றிய உரையில் இருந்தது. அவர் கூட்டத்தைப் பார்த்துக் கூறினார்:
“நாம் வெறும் நீரைக் குடிப்பதற்காக மட்டும் இந்தக் குளத்திற்கு வரவில்லை. இந்த நீர் இல்லாமலேயே நாம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவிட்டோம். நாம் இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, ‘சமத்துவமே நமது தொடக்கப் புள்ளி’ என்பதை அறிவிப்பதற்காகவே இங்கு வந்திருக்கிறோம்.”
அந்த வார்த்தைகளால், அம்பேத்கர் களத்தையே மாற்றினார். குடிநீர் ஆதாரத்தைப் பயன்படுத்தும் ஒரு குறிப்பிட்ட, பௌதிகத் தேவையை மனித கண்ணியத்தின் உலகளாவிய அறிவிப்பாக அவர் உயர்த்தினார். மனித மதிப்பை ஒரு புள்ளிவிவரமாகக் குறைக்க முடியாது; அதை மேல்சாதியினரின் தாராளக் கொடையாகப் பெறவும் முடியாது என்று பிரகடனம் செய்தார். தலித்துகளின் மனிதத்தன்மைக்கான சான்றுகளை வழங்க அவர் மறுத்தார்; அதை மறுக்க முடியாத உண்மையாக அமல்படுத்தினார். 1927-இல் நிகழ்ந்த மகத் சத்தியாகிரகமே நவீன இந்தியாவின் சமத்துவப் புரட்சி தொடங்கிய கணமாகும் - சமத்துவம் என்பது எட்டப்பட வேண்டிய தூரத்து இலக்கு அல்ல, அது மனித நாகரிகத்தின் அடிப்படைத் தொடக்கப் புள்ளி என்று அறிவித்த வரலாற்றுப் பிளவு அது.
கட்டம் 3: அரசியலமைப்புச் சட்டத்தின் கட்டமைப்பு (முரண்பாடுகளின் வாழ்க்கை)
தெருக்களில் பிரகடனப்படுத்தப்பட்ட இந்த உண்மை, அரசின் சட்டங்களில் எழுதப்பட வேண்டியிருந்தது. இது மூன்றாவது கட்டத்துக்கு நம்மை அழைத்துச் செல்கிறது: கட்டமைப்புச் சமத்துவம் (Structural Equality).
கட்டமைப்புச் சமத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட சட்ட ஆவணத்தின் மூலம் உலகளாவிய உண்மையைப் பாதுகாக்கும் செயல்முறையாகும். அம்பேத்கர் வரைவுக் குழுவின் தலைவராக மாபெரும் திறமையுடன் வழிகாட்டிய இந்திய அரசியலமைப்புச் சட்டமே இதற்குச் சிறந்த உதாரணம். இந்தியாவின் தனித்துவமான வரலாற்றுக்காக எழுதப்பட்ட அது, உலகளாவிய சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் எனும் முடிவில்லாத வாக்குறுதியின் மீது கட்டப்பட்டுள்ளது.
ஒடுக்குபவர்களின் மனசாட்சிக்கு முறையிடுவது ஒரு தோல்வி உத்தி என்பதை அம்பேத்கர் புரிந்திருந்தார். கொடூரம் என்பது அன்பான வேண்டுகோள்களுக்கோ அல்லது ஆத்மாவைப் பற்றிய கவித்துவமான பேச்சுகளுக்கோ வழிவிடாது; அது நிறுவன அதிகாரத்திற்கு மட்டுமே பணியும். எனவே, அவர் எழுதப்பட்ட சட்டத்தின் ஆயுதத்தைத் தேர்ந்தெடுத்தார். தன் பேனாவின் ஒரே வீச்சில், அம்பேத்கர் ஒரு குருதியற்ற புரட்சியை நடத்தினார்.
மூவாயிரமாண்டு கால சமூக ஏணியைத் தகர்த்து, அதற்குப் பதிலாக முழுமையான சமத்துவத்துக்கான தீவிரமான வரைபடத்தைப் பொருத்தினார். இந்திய வரலாற்றிலேயே முதன்முறையாக, நாட்டின் கடைக்கோடி ஏழை, ஒடுக்கப்பட்ட குடிமகனின் வாக்குக்கும், மிகப் பணக்கார தொழிலதிபர் அல்லது தலைமைப் பூசாரியின் வாக்குக்கும் அதே சமமான மதிப்பை வழங்கும் அமைப்பை அவர் உருவாக்கினார்.
இருப்பினும், அம்பேத்கர் ஒரு கனவு காண்பவர் அல்ல; அவர் ஒரு யதார்த்தவாதி. 1949 நவம்பர் 25 அன்று, அரசியலமைப்புச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு முன்பு நிர்ணய சபையில் தன் இறுதி உரையை ஆற்றியபோது, அவர் சுயபுகழ்ச்சி செய்யவில்லை. மாறாக, ஒரு நடுங்க வைக்கும் எச்சரிக்கையை விடுத்தார்.
புதிய குடியரசைப் பார்த்த அவர், இந்தியா ஒரு ‘முரண்பாடுகளின் வாழ்க்கைக்குள்’ நுழையப் போகிறது என்று அறிவித்தார். 1950 ஜனவரி 26 முதல், ‘ஒரு மனிதன், ஒரு வாக்கு’ எனும் கொள்கையின் மூலம் இந்தியா முழுமையான அரசியல் சமத்துவத்தை அடையும். ஆனால், நமது அன்றாட சமூக மற்றும் பொருளாதார அமைப்புகளில், ஆழமாக வேரூன்றியுள்ள சாதி மற்றும் வர்க்கப் பிளவுகள் நாம் முழுமையான சமூக சமத்துவமின்மையில் தொடர்ந்து வாழ்வதை உறுதி செய்யும் என்று எச்சரித்தார்.
அம்பேத்கர் ஒரு தீர்க்கதரிசன எச்சரிக்கையை விடுத்தார்:
“நாமாகவே இந்த முரண்பாடுகளின் வாழ்க்கையில் தொடர்ந்து வாழ முடியாது. நமது குடிமக்களுக்குச் சமூக மற்றும் பொருளாதார சமத்துவத்தை நீண்டகாலத்துக்கு மறுத்துக்கொண்டே இருந்தால், நமது அரசியல் ஜனநாயகம் பேராபத்துக்கு உள்ளாகும். இந்தச் சபை பாடுபட்டு உருவாக்கிய ஜனநாயக அமைப்பையே ஒடுக்கப்பட்ட மக்கள் ஒருநாளில் தகர்த்து எறிவார்கள்.”
சமத்துவத்தின் இந்த மாபெரும் வாக்குறுதியை ஒரு சட்ட ஆவணத்தில் வைப்பதன் மூலம், இந்திய அரசியலமைப்பு ஒருபோதும் உயிரற்ற, உறைந்த உரையாக மாறாது என்பதை அம்பேத்கர் உறுதி செய்தார். அது இயங்குதன்மை கொண்டதாக, உயிருள்ள ஒன்றாக, மாற்றங்களுக்கும் திருத்தங்களுக்கும் திறந்திருப்பதாக அவர் வடிவமைத்தார். ஏனெனில் சட்டங்களுக்கு வரம்புகள் உண்டு, ஆனால் சுதந்திரத்துக்கான மனிதத் தேடலுக்கு எவ்வித வரம்பும் இல்லை என்பதை அவர் அறிந்திருந்தார்.
கட்டம் 4: பழக்கவழக்கங்களின் மாற்றம் (புத்தரை நோக்கிய பயணம்)
ஆனால், சட்ட அமைப்புகளும் கருத்தியல் சட்டங்களும் எவ்வளவுதான் சிறப்பானதாக இருந்தாலும், அவை ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே செல்ல முடியும். ஒரு அரசு நீதிமன்றங்களில் சமத்துவத்தைப் பிரகடனப்படுத்தலாம், ஆனால் மனிதர்கள் நீதிமன்றத்தை விட்டு வெளியேறும்போது ஒருவரையொருவர் எவ்வாறு நடத்துகிறார்கள்? இது பாபாசாகேப்பின் தத்துவத்தின் இறுதி, மிகவும் தனிப்பட்ட அடுக்குக்கு நம்மை அழைத்துச் செல்கிறது: வாழும் சமத்துவம் (Living Equality).
வாழும் சமத்துவம் என்பது சமத்துவம் என்பது மனித உடலுக்குள்ளும், நமது அன்றாட பழக்கவழக்கங்களிலும், நமது எதிர்வினைகளிலும் வாழ வேண்டும் என்பதை உணர்வதாகும். “மற்ற மனித உடல்களின் முன்னிலையில் நாம் எவ்வாறு நடந்துகொள்கிறோம்?” என்ற கேள்விக்கான பதில் இது. சட்டங்களில் மட்டுமன்றி, ஒரு பார்வையைக் கடத்தும் அலட்சியத்தில், ஓர் இடத்தை விட்டு ஒதுக்குவதில், பாலினம் மற்றும் சாதியின் பெயரால் நமது அன்றாட நடைமுறைகளில் புதைந்துள்ள அமைதியான வன்முறையில்தான் சமத்துவமின்மை மிகவும் சக்திவாய்ந்ததாக இருக்கிறது.
தன் வாழ்வின் இறுதி ஆண்டான 1956-இல், கடுமையான நோயுடன் போராடியபோதும் அவசரமான ஆற்றலுடன் உழைத்த அம்பேத்கர், மனித சுதந்திரத்துக்காகக் கிடைக்கக்கூடிய பாதைகளை மதிப்பிட்டார். அவர் தன் முக்கியமான கட்டுரையான ‘புத்தரா அல்லது காரல் மார்க்ஸா’ (The Buddha or Karl Marx) என்பதை எழுதினார். அவர் மார்க்ஸை ஆழமாக மதித்தார்; மனித வரலாற்றில் பொருளாதாரச் சுரண்டல் மற்றும் வர்க்கச் சமத்துவமின்மை பற்றிய மிகத் துல்லியமான விமர்சனத்தை மார்க்சியம் வழங்கியது என்பதை ஒப்புக்கொண்டார்.
இருப்பினும், மார்க்சிய அமைப்பில் ஒரு பெரிய விடுபட்ட புள்ளியை அம்பேத்கர் கண்டார். அவர் கேட்டார்: முதலாளித்துவத்தின் பௌதிக அமைப்பை நீங்கள் அழித்துவிட்ட பிறகு, மனிதர்கள் சமமாக வாழ்வதற்கான உள் ஆசையையும், அன்றாடப் பழக்கத்தையும் எங்கிருந்து பெறுவார்கள்? உங்கள் சமத்துவம் முழுமையாக அரசின் அதிகாரத்தாலோ அல்லது பொருளாதார அவசியத்தாலோ மட்டுமே திணிக்கப்பட்டால், அது வெளிப்புறமாகவே இருக்கும். அது உடலின் பழக்கமாக மாறாது.
வாழும் சமத்துவத்தின் அந்த விடுபட்ட புள்ளியை கௌதம புத்தரின் பழமையான, பகுத்தறிவுத் தத்துவத்தில் அம்பேத்கர் கண்டார். பௌத்தம் மனித நடத்தையை ஒரு கோபமான இறைவனின் பயத்தின் மூலம் அணுகவில்லை; மாறாக மனித பழக்கவழக்கங்களை சுயநினைவோடு மறுபயிற்சி செய்வதன் மூலம் - மைத்ரி (அன்பு) மற்றும் சகோதரத்துவத்தின் தீவிரப் பயிற்சியின் மூலம் அணுகியது.
1956 அக்டோபர் 14 அன்று, நாக்பூரில், அம்பேத்கர் தன் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கானோரை இந்து மதத்திலிருந்து பௌத்தத்தை நோக்கி அழைத்துச் சென்றார். இது ஏதோ மதக் கதைகளுக்குள் ஓடிய ஓட்டம் அல்ல; அது ஒரு மகத்தான, கணக்கிடப்பட்ட முடிவு. அது மனித பழக்கவழக்கங்களின் மாபெரும் மதமாற்றம். இந்த புதிய வாழ்க்கை முறையை உறுதிப்படுத்த, அம்பேத்கர் பழங்கால பௌத்த நூல்களை அப்படியே நகலெடுக்கவில்லை; தன் ஆதரவாளர்களுக்காக 22 தனித்துவமான உறுதிமொழிகளை உருவாக்கினார். சாதிப் பணிவு மற்றும் மேலாதிக்கத்தின் பழைய, ஆழமாகப் பதிந்த பழக்கங்களை அகற்றி, அன்றாட நடத்தை சமத்துவத்தில் வேரூன்றிய புதிய வாழ்க்கையை பிரதியமைக்க வடிவமைக்கப்பட்ட மன மற்றும் பௌதிக மறுசீரமைப்புகள் அவை. எண்ணம் உடலில் வாழ வேண்டும், உடல் அந்த எண்ணத்தைப் பௌதிக உலகில் செயல்படுத்த வேண்டும் என்பதற்கான பிரகடனம் அது.
பாபாசாகேப் தீர்க்கதரிசனமாகக் கூறிய அந்த முரண்பாடுகளின் வாழ்க்கையிலிருந்து வெளியேறத் தவிக்கும் ஓர் இந்தியாவில்தான் நாம் இன்று நிற்கிறோம். பிஞ்சுக் குழந்தைகள் பேசக் கற்பதற்கு முன்பே அவர்களின் மதம் மற்றும் சாதியின் அடிப்படையில் லேபிள் ஒட்ட முயலும் சமூகத்திலேயே நாம் இன்றும் வாழ்கிறோம். தெளிவான, முழுமையான மனித உரிமைகளுக்காக நிற்பதை விட, சவுகரியமான, ஏமாற்று வேலைகள் நிறைந்த சாம்பல் மண்டலங்களுக்குள் பின்வாங்கும் ஊடகங்களையும் அரசியல் வகுப்பினரையுமே நாம் இன்றும் பார்க்கிறோம்.
நமது தேசத்தின் பிறப்பை நாம் திரும்பிப் பார்க்கும்போது, ஒரு தீர்க்கமான தேர்வை எதிர்கொள்கிறோம்.
நமது உணர்ச்சிப்பூர்வமான சவுகரியத்தை மட்டுமே பராமரித்த - நமது வரலாற்றுச் சமரசங்களைச் சரியென ஏற்றுக் கொண்டு, நமது பழங்கால சமூகப் பாகுபாடுகளை அங்கீகரித்து, குறியீட்டு உணர்வுகளைச் சுற்றி அரசியலை அமைத்த ஒரு தலைவரிடமிருந்தா நமது இறுதிப் பேரூக்கத்தைப் பெறப்போகிறோமா?
அல்லது, நமது கூட்டுச் சிந்தனையை மறுசீரமைத்த மாமனிதருடன் நிற்கப் போகிறோமா - ஆழமான சிதைந்த, சமத்துவமற்ற சமூகத்தின் கண்களை நேரடிப் பார்வையைப் பார்த்து, சமத்துவத்தை மறுக்க முடியாத உண்மையாக அமல்படுத்தி, அதை முதன்மைச் சட்டமாக எழுதி, அன்றாட மனிதப் பழக்கமாகப் பயிற்சி செய்யத் துணிந்த அந்தப் புரட்சியாளருடன் நிற்கப் போகிறோமா?
ஒரு நாட்டின் கொடியையும் அதன் பௌதிக எல்லைகளையும் கையளிப்பவர் மட்டுமே தேசத்தின் தந்தை என்றால், வரலாறு தன் பழைய, கற்பனை நவிற்சியான வரையறைகளை வைத்துக்கொள்ளட்டும். ஆனால், ஒரு தேசத்தின் மெய்யான தந்தை என்பவர் அதற்கு அறநெறி முதுகெலும்பையும், கட்டமைப்பு மனசாட்சியையும், சட்டப் பாதுகாப்பையும், உண்மையான மனித சுதந்திரத்துக்கான பாதையையும் வழங்கிய அறிவுச் சிகரம் என்றால் - வரலாற்று உண்மையோடு, முழுமையான நம்பிக்கையோடு அதை உரக்கப் பேசுவோம்:
“நவீன, ஜனநாயக மற்றும் முற்போக்கு இந்தியாவின் மெய்யான தேசச்சிற்பி பாபாசாகேப் பீமராவ் ராம்ஜி அம்பேத்கர் மட்டுமே.”
தன் வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் சந்தித்த அனைத்து அவமானங்களுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும், அவர் வன்முறையாகப் பதிலளித்திருந்தால் கூட நியாயமானதாக இருந்திருக்கும்; ஆனால் ஒருமுறை கூட அவர் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்கவில்லை. எனவே என்னைப் பொறுத்தவரை, அஹிம்சையின் பாதையை அதன் எழுத்திலும் ஆன்மாவிலும் மற்ற யாரைக் காட்டிலும் உண்மையாகப் பின்பற்றிய தலைசிறந்த புரட்சியாளர் அவரே.
வாசகர்களாகிய நீங்கள் எனது கருத்துகளை எந்த அளவுக்கு ஏற்பீர்கள் என்று என்னால் சொல்ல முடியாது. ஆனால் இவற்றைப் பற்றி நீங்கள் ஆழமாகச் சிந்திப்பீர்கள் என்று நம்புகிறேன். மற்றவர்களை மகிழ்வித்து நன்மதிப்பைப் பெறுவதற்காகப் பேசாமல், எது நல்லது, எது கெட்டது என்பதை மக்களுக்கு அஞ்சாமல் எடுத்துரைத்த, நான் மிகவும் மதிக்கும் ஒரு மாபெரும் தலைவரைப் பற்றி இந்தக் கட்டுரையில் எழுதியிருக்கிறேன். கருப்பு வெள்ளையில் உள்ள உண்மையை உங்களுக்கு எடுத்துரைப்பதன் மூலம் என் கடமையைச் செய்துள்ளேன்; இனி எந்தப் பாதையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
- என்.ஆனந்த் வெங்கடேஷ், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி | தொடர்புக்கு: anaushram44@gmail.com