ஏ.ஐ.: மொழிபெயர்ப்பாளர்களுக்கு நெருக்கடியா? - மொழிபெயர்ப்பாளர் பி.எஸ்.வி.குமாரசாமி
முப்பது ஆண்டுகளைக் கடந்த எழுத்துப் பயணம், நூற்றுக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் எனத் தமிழ் அறிவுலகின் மிக முக்கியமான பாலமாகத் திகழ்பவர் பி.எஸ்.வி.குமாரசாமி.
மூல மொழியின் ஆன்மா சிதையாமல், எளிய தமிழ் வாசகருக்கும் இலக்கிய ரசனை மிகுந்த வாசகருக்கும் உலகளாவிய படைப்புகளையும் சிந்தனைகளையும் கடத்துவதில் நேர்த்தியான ரசவாதி.
இவருடைய மனைவி நாகலட்சுமி சண்முகமும் மொழிபெயர்ப்பாளர். மொழிபெயர்ப்பு அனுபவங்கள் தொடர்பாக பி.எஸ்.வி.குமாரசாமியிடம் உரையாடியதிலிருந்து...
உங்கள் முதல் மொழிபெயர்ப்பு அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்...
புற்றுநோய்ப் பாதிப்புக்கு உள்ளான கீதாஞ்சலி கெய் என்கிற சிறுமி (1961-1977) எழுதியிருந்த கவிதைகள், அவரது இறப்புக்குப் பின்னர் அவருடைய தாயாரால் கண்டெடுக்கப்பட்டன.
அக்கவிதைகளில் சில, ‘தி இல்லஸ்ட்ரேட்டடு வீக்லி’ இதழில் 1982இல் வெளியாகியிருந்தன. அவற்றை மொழிபெயர்த்தேன். அதற்கு முன்பு நிறையத் தமிழ்க் கவிதைகளை நான் எழுதியிருந்தாலும், அதுதான் என்னுடைய முதல் மொழிபெயர்ப்பு அனுபவம்.
ஒரே வீட்டில் இரண்டு சிறந்த மொழிபெயர்ப்பாளர்கள் இருப்பது எந்த வகையில் நன்மை?
என் மனைவி நாகலட்சுமிக்கு முன்பே நான் மொழிபெயர்ப்புப் பணியைத் தொடங்கிவிட்டபோதிலும், அவர் என்னைவிடச் சிறந்த மொழிபெயர்ப்பாளர் என்றே சொல்வேன். அவருடைய செப்பனிடுதல் காரணமாக, என் மொழிபெயர்ப்பு மெருகேறியது.
அதேபோல, என்னுடைய பரந்து விரிந்த உலக அனுபவம், தன்னை மேலும் பட்டை தீட்டிக்கொள்ள நாகலட்சுமிக்குக் கைகொடுத்தது. எனினும், சில வார்த்தைகளின் மொழிபெயர்ப்பு குறித்து நாங்கள் கடுமையாகச் சண்டையெல்லாம் போட்டுக்கொள்வோம்.
