

சுதா
கடந்த 32 ஆண்டுகளாகத் திருநங்கைகள் மத்தியில் சமூகப் பணியாற்றிவருபவர் கலைமாமணி சுதா. தமிழ்நாடு அரசின் திருநங்கைகள் நலவாரியத்தில் பணியாற்றி, அவர்களுக்கான அரசின் நலத்திட்டங்களைக் கொண்டு சேர்த்தவர்களில் முக்கியமானவர்.
திருநர் உள்ளிட்ட பால் புதுமையர் சமூகத்துக்கான (LGBTIQA+) மாநில அரசின் முதல் கொள்கை வரைவுக் குழுவில் இடம்பெற்றவர். தற்போது லோக் அதாலத் உறுப்பினராகவும் செயலாற்றிச் சட்ட அறிவிலும் சிறந்து விளங்கும் அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி.
மாற்றுப் பாலினம் என்கிற அங்கீகாரத்தை வழங்கும் வகையில் உச்ச நீதிமன்றம் 2014இல் வழங்கிய தீர்ப்பு சமூகத்தில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது?
மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தத் தீர்ப்பும் வழிகாட்டலும் அதற்கு முன்பு இல்லை. தமிழகத்தில் மட்டும் திருநங்கை என அழைக்க வேண்டும் என்கிற அரசாணையும், திருநங்கைகள் நலவாரியமும் இருந்தன.
‘மூன்றாம் பாலினம்’ என அழைக்கப்பட வேண்டும் என்றவுடன், சமூகத்தில் திருநர் குறித்துப் புரிதலும் தேடலும் அதிகரித்தன. எனினும், இப்படி ஒரு தீர்ப்பு உள்ளது என வெகுமக்களுக்குத் தெரியாது. திருநரோடு பிரச்சினை என்று வரும்போதுதான் இந்தத் தீர்ப்பு குறித்து அறியக் காவல் துறையினரில் பலரும் முயல்கின்றனர்.
திருநர் சார்ந்து பணி செய்பவர்கள், பாலின உறுதி அறுவைசிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவர்கள், இவர்களுக்காக வழக்காடுபவர்கள் ஆகியோர் இந்தத் தீர்ப்பு குறித்துத் தெரிந்துவைத்துள்ளனர்.
அதேவேளையில், தமிழகத்தில் திருநங்கைகள் நலவாரியம், அர்த்தநாரீஸ்வரர் கோயில், கூவாகம் திருவிழா, திருநர் தொண்டு நிறுவனப் பணிகள் ஆகியவற்றால் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
எல்லாரையும்போல் திருநர் சமூகம் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு மாநகரங்கள் எந்த அளவுக்கு ஏற்றதாக இருக்கின்றன?
திருநர் மக்கள் சுயமரியாதையோடு வாழ்வதில் பெருநகர மாவட்டங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, சென்னையில் ஸ்டெல்லா மேரிஸ், லயோலா போன்ற கல்வி நிறுவனங்கள் இவர்களுக்குக் கட்டணமில்லா உயர் கல்வியை வழங்கிவருகின்றன.
பல தனியார் நிறுவனங்கள் தயக்கமின்றி வேலைவாய்ப்பு கொடுக்கின்றன. சென்னையில் சிஜிஐ (CGI), ஆர்ஆர்டி (RRD) போன்ற நிறுவனங்கள் தொழில் பயிற்சி, சுய தொழில் செய்திட ஊக்குவித்தல் ஆகிய சேவைகளைச் செய்துவருகின்றன. ஆனால், மற்ற மாவட்ட நகரங்களில் புரிதலும் குறைவு, முன்னேறும் வாய்ப்புகளும் திருநர்களுக்குக் குறைவாகவே இருக்கின்றன.