

தமிழ் மண்ணில் தடம் பதித்த பேராளுமைகளின் அறிவார்ந்த வரலாற்றை உலக அரங்கில் அடையாளப்படுத்திவருபவர் ஆ.இரா.வேங்கடாசலபதி. சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவன (எம்ஐடிஎஸ்) பேராசிரியரும், வரலாற்றாளருமான இவர் தமிழிலும் ஆங்கிலத்திலும் 30க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார்.
ஆ.இரா.வேங்கடாசலபதி தொகுத்து (இணைத் தொகுப்பாசிரியர்: கார்த்திக் ராம் மனோகரன்) கொண்டுவந்திருக்கும் ‘The Cambridge Companion to Periyar’ நூலை ஒட்டி அவருடன் உரையாடியதிலிருந்து...
புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் யுனிவர்சிட்டி பிரஸ் மூலம் பெரியாரை அணுகும் நூலை நீங்கள் கொண்டுவந்தது எப்படி?
அரை நூற்றாண்டுக்கு முன்புவரை பெரியார், திராவிட இயக்கம் தொடர்பான ஆங்கில ஆய்வுகளைப் பெரும்பாலும் அயல்நாட்டுப் பல்கலைக்கழகத்தினரே மேற்கொண்டுவந்துள்ளனர்.
அதாவது, மண்டல் பரிந்துரைத்த பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு, பாபர் மசூதி இடிப்பு, டாக்டர் அம்பேத்கர் நூற்றாண்டு ஆகியவற்றுக்குப் பிறகு, இந்தியக் கல்விப்புலத்திலும் வெளியிலுமாக ஆங்கிலத்தில் நூல்கள் வெளிவரலாயின. இந்திய அரசியல், சமூகச் சூழலில் பெரியார் சிந்தனைகளின் பொருத்தப்பாடு உணரப்பட்டதே இதற்குக் காரணம்.
பெருந்தொற்றுக்கு முன்பு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகப் பதிப்பகத்தின் தலைமைப் பதிப்பாசிரியர் இந்நூலை உருவாக்க வேண்டும் என என்னை அணுகினார். பெரியாருடைய சிந்தனைகளின் முக்கியத்துவத்தைக் கல்விப்புலத்தினர் உணரத் தொடங்கிவிட்டதை அறிந்து, இப்பொறுப்பை ஏற்றுக்கொண்டேன்.