

தமிழ்நாட்டின் வரலாற்று ஆய்வாளர்களில் முக்கியமானவரான இரா.கலைக்கோவன், திருச்சியில் இருந்து இயங்கிவருபவர். ‘கலை வளர்த்த திருக்கோயில்கள்’, ‘சோழர் கால ஆடற்கலை’ உள்ளிட்ட நூல்களை எழுதியவர்.
‘வரலாறு’ என்னும் ஆய்விதழின் ஆசிரியரான இவர், தனது தந்தையும் வரலாற்று ஆய்வாளருமான மா.இராசமாணிக்கனாரின் பெயரில் வரலாற்று ஆய்வு மையத்தையும் நடத்திவருகிறார். கலைக்கோவனுடன் உரையாடியதிலிருந்து...
உங்கள் தந்தை புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் என்றாலும், நீங்கள் அடிப்படையில் ஒரு கண் மருத்துவர். நீங்களும் வரலாற்று ஆய்வின் பக்கம் வந்தது எப்படி?
1980இல் என்னிடம் கண் அறுவைசிகிச்சை செய்துகொண்ட உறையூர் பஞ்சவர்ணேஸ்வரர் கோயில் சிவாச்சாரியார், கோயிலைப் பார்க்க வருமாறு அழைப்புவிடுத்தார். நான் அங்கு சென்றிருந்தபோது ஒரு தூணில், ஒருவர் சைக்கிள் ஓட்டிக்கொண்டு செல்வது போன்ற சிற்பம் ஒன்றைப் பார்த்து ஆச்சரியப்பட்டேன்.
ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயிலில் சைக்கிள் சிற்பமா என்கிற வியப்புடன் சிவாச்சாரியாரிடம் அது பற்றி விசாரித்தேன். அவர் உட்பட பலருக்கும் அதைப் பற்றித் தெரியவில்லை.
பின்னர், கோயிலின் தல வரலாறு புத்தகத்தைக் கேட்டு வாங்கி வாசித்தேன். 1921இல் அந்தக் கோயிலில் திருப்பணி நடந்தது தெரியவந்தது. அந்தக் காலக்கட்டத்தில்தான் ஒரு சிற்பி சைக்கிளைச் சிற்பத்தில் சேர்த்திருக்கிறார் எனப் புரிந்துகொண்டேன். வரலாறு தொடர்பான தேடல் தொடங்கிய புள்ளி அதுதான்!
உங்களுக்கு ஊக்கம் தந்த வரலாற்று ஆய்வாளர்களைப் பற்றிச் சொல்லுங்கள்...
புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் கே.ஆர்.சீனிவாசன் போன்றோர் எனக்குப் பெரும் ஊக்கம் தந்தனர். கேள்விகள் மூலம் என்னைச் செதுக்கியவர்கள் என் மாணவர்கள்தான். குறிப்பாக வரலாற்று ஆய்வில் சிறந்து விளங்கும் பேராசிரியர் நளினி, பேராசிரியர் அர.அகிலா ஆகியோர் என் பணிகளுக்குப் பெரிதும் துணைநிற்கின்றனர்.
மன்னர்கள் காலத்தில் இருந்த நிர்வாக நடைமுறைகளின் தொடர்ச்சியை இன்றைய நவீனக் காலக்கட்டத்தில் பார்க்க முடிகிறதா?
அறிவியல் வளர்ச்சியால் இன்றைக்கு நடைமுறைகளில் புதிய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், அடிப்படையில் மாற்றம் இல்லை. அரசாணை வாய்மொழியாக உத்தரவிடப்படுவது, அதை அதிகாரிகள் எழுதிக்கொள்வது, உடன் இருப்பவர்கள் அதைச் சரிபார்ப்பது, நடைமுறைப்படுத்துவது என எல்லாமே பண்டைய காலத்தில் இருந்ததைப் போலவே தொடர்கின்றன.
அந்தக் காலத்தில் வரி வசூலுக்கு என ‘திணைக் களம்’ என்று வருவாய்த் துறை இருந்தது. கைத்தடிப் புத்தகம், வரிப் புத்தகம் என எல்லா ஏற்பாடுகளும் அப்போது இருந்தன. வேளாண்மை தொடங்கி எல்லாத் துறைகளிலும் அப்படித்தான்.