

காவிரி, முல்லைப் பெரியாறு விவகாரங்கள் தலைதூக்கும்போதெல்லாம் தமிழகத்தின் குரலாக ஆணித்தரமான கருத்துகளை முன்வைப்பவர், தமிழ்நாடு பொதுப்பணித் துறை மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் அ.வீரப்பன்.
அரசுக்குப் பல்வேறு திட்டங்கள், ஆலோசனைகளைத் தொடர்ந்து வழங்கிவரும் அவருடன், மீண்டும் வெடித்திருக்கும் மேகேதாட்டு அணை விவகாரத்தின் பின்னணியில் நடத்திய உரையாடலில் இருந்து...
காவிரி விவகாரத்தில் உங்களுடைய அனுபவத்தில் அரசுக்கு என்ன ஆலோசனையை முன்வைக்க விரும்புகிறீர்கள்?
கர்நாடகத்தில் எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், 1974க்குப் பிறகு தமிழகத்துக்கு உரிய பங்கைக் கொடுப்பதில்லை. அணைகள் நிரம்பி உபரி நீர் வந்தால் ஒழிய, சொட்டு நீர்கூட நமக்குத் தருவதில்லை.
காவிரி நடுவர் மன்றம் அமைக்கும் முன்பு பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே யாருடைய அனுமதியும் இன்றி ஐந்து அணைகளைக் கட்டி, காவிரிப் படுகையிலிருந்து வருகிற 70 டிஎம்சி தண்ணீரைக் கர்நாடகம் தானாகவே எடுத்துப் பயன்படுத்திக்கொண்டது.
இது 1892, 1924 காவிரி ஒப்பந்தங்களுக்கு எதிரானது. தமிழகத்தின் ஆட்சியாளர்கள் யாருமே காவிரிப் பிரச்சினையைச் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை. இதை டெல்டா பகுதியின் பிரச்சினையாகவே பார்க்கிறார்கள். காவிரியிலிருந்து 15-20 மாவட்டங்களுக்குக் கூட்டுக் குடிநீர்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
வீராணம் வழியாகச் சென்னைக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது. காவிரி தமிழகத்துக்குக் கிடைத்த வரப்பிரசாதம். காவிரியைப் பாதுகாக்க வேண்டும் என்கிற விஷயத்தில் தமிழகத்தில் அமைந்த அரசுகள் முனைப்பாக இல்லை.
காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பில் 205 டிஎம்சி என்கிற உத்தரவைப் பெற்றோம். இறுதி உத்தரவில் அது 192 டிஎம்சி ஆனது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் 177.25 டிஎம்சி தண்ணீர் என்று ஆனது.
காவிரி மேலாண்மை வாரியம் மாதா மாதம் கூடி உத்தரவிட்டாலும் கர்நாடகம் அதை மதிப்பதில்லை. மத்திய அரசும் கேட்பதில்லை. இந்தச் சிக்கலைத் தமிழக அரசு சரியாகப் புரிந்துகொள்ளவில்லை!