துணிவிருந்தால் மதுவை விட்டொழிக்கலாம்! - ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ சேவகர்

கருத்துப்பேழை சந்திப்பு
துணிவிருந்தால் மதுவை விட்டொழிக்கலாம்! - ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ சேவகர்
Updated on: 
3 min read

தமிழ்நாட்டில் மதுப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் நாளுக்குநாள் அதிகரித்துவரும் சூழலில், மதுப்பழக்கத்தில் இருந்து மீள்வதற்கு வழிகாட்டும் ‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ [Alcoholics Anonymous (A.A.)] அமைப்பின் செயல்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

உலகம் முழுவதும் 180 நாடுகளில் செயல்பட்டுவரும் இந்த அமைப்பின் சார்பில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான குழுக்கள் செயல்பட்டுவருகின்றன.

இந்த அமைப்பின் கிழக்கு மெட்ராஸ் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த சேவகர் சுந்தருடன் (அடையாளம் காப்பது இந்த அமைப்பின் கோட்பாடு என்பதால் பெயர் மாற்றப்பட்டுள்ளது) உரையாடியதில் இருந்து...

Q

‘ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்’ தமிழ்நாட்டில் எப்போது நிறுவப்பட்டது?

A

குடிநோயால் பாதிக்கப்பட்டவர்களை அதிலிருந்து மீட்பதற்காக 1930களில் அமெரிக்காவில் தொடங்கப்பட்ட அமைப்பு இது. இந்தியாவுக்குள் 1950களின் இறுதியில் நுழைந்தது. எனினும், சென்னையில் அதன் முதல் ஒருங்கிணைப்புக் குழு 1981இல்தான் தொடங்கப்பட்டது.

குடி என்பது ஒரு நோய் என்கிற எண்ணம் பரவலாக ஏற்படாத அந்தக் காலக்கட்டத்தில், டிடிகே மருத்துவமனையின் சாந்தி ரங்கநாதன், எழுத்தாளர் சிவசங்கரி, அருட்சகோதரர்கள் ஏபல், அசரீயா ஆகியோர் இதன் வளர்ச்சிக்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உதவினர்.

Q

ஏ.ஏ. அமைப்பு கிறிஸ்துவ மதத்தைப் பரப்புகிறது என்று பேசப்படுகிறதே?

A

அமெரிக்காவில் தொடங்கப்பட்டது என்பதற்காகவே, அதை இப்படிக் குறுகிய நோக்கதோடு அணுகுவது மிகத் தவறு. இந்த அமைப்பு சாதி, மதம், இனம், மொழி, அரசியலைக் கடந்தது. குடியில் இருந்து ஒருவர் விடுபடுவதுதான் எங்களது அடிப்படை நோக்கம்.

Q

இந்த அமைப்பின் பொதுவான செயல்பாடு என்ன?

A

ஏ.ஏ.வில் சேர்வதற்குக் கட்டணமோ கல்வித் தகுதியோ பொருளாதார வசதியோ தேவையில்லை. குடியில் இருந்து விடுபட வேண்டும் என்று ஒருவர் நினைத்தாலே போதும். அடித்தட்டு மக்கள் முதல் உயர் பொறுப்பில் இருக்கிறவர்கள்வரை எங்கள் அமைப்பில் உறுப்பினர்கள். இதில் சேர்க்கைக் கட்டணம், சந்தா எதுவும் இல்லை.

நாங்கள் யாரிடம் இருந்தும் நன்கொடை பெறுவதும் இல்லை, யாருக்கும் பணம் அளிப்பதும் இல்லை. ஒவ்வொரு உறுப்பினரும் சுயேச்சையாகச் செயல்படுவார். ஒருவர் எங்களிடம் வந்தால் இரவு 7 முதல் 8.30 மணிவரை நடைபெறும் கூட்டத்தில் தொடர்ந்து 90 நாள்கள் பங்குபெற வேண்டும்.

பொதுவாக, ஒருவர் குடிப்பதற்காக வெளியே செல்லும் நேரம் அது. கிராமங்களில் 6 மணி முதல் 7.30 மணிவரை. யாரும் உடனடியாகக் குடியை நிறுத்திவிட மாட்டார்கள். தொடர்ச்சியாகக் கூட்டத்துக்கும் வர மாட்டார்கள். புதிதாக வரும் நபர்தான் எங்களுக்கு முக்கியம்.

ஒவ்வொரு நாளும் அவரைத் தொடர்புகொண்டு கூட்டத்துக்கு வருவதை உறுதிப்படுத்துவோம். ஆனால், யாரையும் எதற்கும் கட்டாயப்படுத்த மாட்டோம். சேர்வதும் விலகுவதும் அவரவர் விருப்பம்.

Loading content, please wait...

X