

மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ‘எவிடன்ஸ்’ அமைப்பின் மூலம் 30 ஆண்டுகளைக் கடந்து, ஒடுக்கப்பட்ட, விளிம்புநிலை மக்களின் மீட்புக் குரலாக ஒலித்துவருபவர் ஏ.கதிர்.
மிக உயரிய ‘ரவுல் வாலன்பெர்க்’ (Raoul Wallenberg) சர்வதேச விருது இவருக்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் இறுதிவரை நின்று நீதியைப் பெற்றுத் தருவதில் சளைக்காத கதிருடன் நடத்திய உரையாடலின் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதி:
ஆணவப் படுகொலைகளைத் தடுக்க 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கும் தனிச் சட்டத்தை கர்நாடக அரசு கொண்டுவந்துள்ளது. தமிழகத்தில் இதற்கான அவசியம் குறித்து ஏற்கெனவே பேசியவர் நீங்கள்...
உண்மையில் கர்நாடகத்தைவிடத் தமிழ்நாட்டில்தான் ஆணவக்கொலைகள் அதிகமாக நடக்கின்றன. ஆணவக் குற்றங்களுக்குத் தனிச்சட்டம் கொண்டு வாருங்கள் என்று 20 ஆண்டு காலமாகப் பேசிவருகிறேன். 2022ஆம் ஆண்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து, ஆணவக் குற்றங்கள் சட்டத்தின் மாதிரி வரைவினையும் கொடுத்தேன்.
ஆனால், தனிச்சட்டம் கொண்டுவருவதில் சுணக்கம் இருந்துகொண்டுதான் இருக்கிறது. ஆதிக்கச் சாதியினரின் எதிர்ப்புக்கு ஆளாவோம் என்று தமிழக அரசு அஞ்சுகிறதோ என்கிற சந்தேகமும் எழுகிறது.
தென் மாவட்டங்களில் வன்கொடுமைகள் தொடர்ந்துவருவதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத் தரவுகள் காட்டுகின்றன. கல்வியறிவில் முன்னேறிய பின்னரும், இது தொடர்வது ஏன்?
சாதிப் பெருமிதங்கள், ஆண்ட பரம்பரை நம்பிக்கைகள், ஆதிக்கப்போக்கு எனப் பல காரணங்கள் இருக்கின்றன. ஆளுகின்ற கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் ஆதிக்கச்சாதியைச் சேர்ந்தவர்களாக இருப்பதால் தங்கள் சாதியை அவர்கள் பகைத்துக்கொள்ளவும் முடியாது. ஒவ்வொரு சாதியின் பெயரிலும் சின்ன சின்ன லெட்டர்பேடு இயக்கங்களும் உள்ளன.
அந்த இயக்கங்களும் சமூக வலைத்தளங்களில் மீசையை முறுக்கி அப்பாவி இளைஞர்களை உசுப்பேற்றிவிடுகிற வேலையையும் செய்கின்றன. இளைஞர்களின் முன்னேற்றத்துக்கும் வேலைவாய்ப்புக்கும் உருப்படியான செயல்திட்டங்களைக் கொண்டு வராமல் இருப்பதும் சாபக்கேடு.