சம்பத்தின் உண்ணாவிரதமும், புது கட்சி தொடக்கமும்... - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 100

உண்ணாவிரத மேடையில் ஈவிகே சம்பத்துடன் அண்ணா.

உண்ணாவிரத மேடையில் ஈவிகே சம்பத்துடன் அண்ணா.

Updated on
4 min read

ஈவிகே சம்பத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் பங்கேற்ற மதுரை பொதுக்கூட்டத்துக்கு விடப்பட்ட மிரட்டல், மற்றும் திருச்சி பொதுக்கூட்டத்தில் கவிஞர் கண்ணதாசன் மீதான தாக்குதல் போன்ற விரும்பத்தகாத சம்பவங்களால் கட்சியில் ஏற்பட்ட நெருக்கடிகளை தீர்க்க தலைமைக் கழகம் தவறி விட்டது என தொண்டர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டது. கட்சித் தலைமை உறுதியான நடவடிக்கைகள் எடுக்காததே இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதற்குக் காரணம் என்றும் கட்சியினர் விமர்சிக்கத் தொடங்கினர்.

இதற்கிடையே திருச்சி சம்பவம் பற்றிக் கேள்விப்பட்டதும் திமுக பொதுச் செயலாளர் அண்ணா, அந்த வன்முறைச் சம்பவத்தைக் கண்டித்து, “என் வாழ்நாளிலேயே எனக்கு ஏற்பட்டிருக்கின்ற இழுக்கு இது என்று எண்ணி வருந்துகிறேன்” என அறிக்கை வெளியிட்டார்.

திருச்சி பொதுக்கூட்டத்தில் நடந்தேறிய நிகழ்ச்சி மறுநாள் காலைப் பத்திரிகைகளில் தலைப்புச் செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. ‘கண்ணதாசனுக்கு செருப்படி’ என்று ஒரு ஏடு தலைப்பிட்டிருந்தது. அன்று காலை சம்பத் வீட்டில் திரளாக தோழர்கள் கவலையோடு காத்திருந்தனர். கண்ணதாசனைக் கண்டதும் அவர்கள் கண் கலங்கினார்கள்.

‘நாம் எடுத்துக் கொண்டிருக்கும் அரசியல் முயற்சிக்கு இது நல்ல சகுனம்’ என்றார் கண்ணதாசன். அனுதாபத்துக்குரிய நிகழ்ச்சிகளின் மூலம்தான் நட்பு பலப்படுகிறது. அந்த வகையில், திருச்சி நிகழ்ச்சி சம்பத் ஆதரவாளர்களை ஆவேசம் கொள்ளச் செய்தது.

அன்று மாலை சம்பத் இல்லத்தில் எல்லோரும் கூடினார்கள். வெளியூர் தோழர்களும் ஏராளமானோர் வந்திருந்தனர். வெளியில் பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருந்தனர். திமுக தலைமை நிலையத்தில் இருந்து பொறுப்பாளர் ஏ.கோவிந்தசாமி காரில் வருவதும் போவதுமாக இருந்தார்.

தோழர்கள் பலரும் தத்தமது கருத்துகளை தெரிவித்தார்கள். திருச்சி சம்பவம் அனைவரையும் ஆத்திரப்படுத்தியது. வன்முறைப் போக்குகளைக் கண்டித்து மறுநாள் முதல் தாம் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக சம்பத் கூறினார். பத்திரிகைகளுக்குச் செய்தி தரப்பட்டது. மாவட்டச் செயலாளர் மணிவண்ணன், செல்வராஜ், பெ.குமாரசாமி, பி.ஈ.நடராசன் ஆகியோர் இரவோடு இரவாக கீற்று மூங்கில்கள் வாங்கி வந்து நுங்கம்பாக்கம் ஏரிப் பகுதியில் கொட்டகை போடத் தொடங்கினார்கள்.

உண்ணாவிரதம் மேற்கொள்வதாக பத்திரிகைகளுக்குச் செய்தி கொடுப்பதற்கு முன்பாகவே, காஞ்சிபுரத்திலிருந்த அண்ணாவோடு தொலைபேசியில் சம்பத் தொடர்பு கொண்டார். அண்ணா திடுக்கிட்டார். எவ்வளவோ தடுத்துப் பார்த்தார். உண்ணாவிரதம் இருக்கவில்லை என்றால் பல இடங்களில் தமது தோழர்களுக்கு உயிர் பாதுகாப்பு இருக்காது என்று சம்பத் கருதினார். எனவே, உண்ணாவிரதம் மேற்கொள்வது உறுதியான முடிவு என்பதை சம்பத் அண்ணாவிடம் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இந்த தொலைபேசி உரையாடலுக்கு ஏற்பாடு செய்தவர் ஏ.கோவிந்தசாமி.

சென்னை நுங்கம்பாக்கம் கார்ப்பரேஷன் உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள திடலில் 23.2.61 அன்று சம்பத் உண்ணாவிரதத்தைத் தொடங்கினார். பொதுமக்கள் ஏராளமானோர் அவரைப் பார்த்து சென்றனர். உண்ணாவிரதம் தொடங்கிய உடனேயே அதுகுறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டார் சம்பத்.

அதில், “திருச்சி நிகழ்ச்சி திட்டமிடப்பட்ட ஒன்று என்பதை அனைவரும் அறிவர். வேலூரில் வெளிப்பட்ட இந்த நோய் கழகத்தினர் பலரையும் வேகமாகப் பயங்கரமாகப் பிடித்து வருகிறது.இதைக் கட்டுப்படுத்த தலைமைக்கு மனமில்லை என்றாலும் திறமையில்லை என்றாலும் கழகத்துக்கு பெரும் கேட்டினை விளைவித்து விடும்.

புனிதமான லட்சியங்களுக்காகவும், கொள்கைகளுக்காகவும் பல தோழர்கள் இன்னுயிரைத் தந்து வளர்த்த இந்தக் கழகம் காலிகளுக்கு வசமாகாமலும், அடிபணியாமலும் உயிரைக் கொடுத்துப் பாதுகாக்க வேண்டியது உண்மைத் தொண்டர்களின் கடமை. கழகத்தைச் சூழ்ந்திருக்கும் ஆபத்தின் முழுத் தன்மையினையும் கழகத் தோழர்கள் உணரவும் வேண்டி 23.2.61 முதல் இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வரை நான் உண்ணாநோன்பினை ஏற்பது தவிர வேறு வழியில்லை" என்று குறிப்பிட்டிருந்தார்.

சம்பத்தின் உண்ணா நோன்பை நிறுத்த அண்ணா முயற்சி மேற்கொண்டுள்ளார். இதுகுறித்து திமுக முக்கியஸ்தர்களைக் கலந்தாலோசித்து முடிவு எடுக்க அழைப்பு அனுப்பியுள்ளார் என்று தலைமைக் கழகத்தில் இருந்து பத்திரிகையாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.

அதேநேரம், சம்பத் உண்ணாவிரதம் இருந்த கொட்டகை முன்னாள் திரளான கூட்டம் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து குவிந்தனர். உண்ணாவிரதம் இருக்கிறவர்கள் முதல் நாளே சில விதிகளைக் கடைபிடிக்க வேண்டும். ஆனால் சம்பத் திடீரென உண்ணாவிரதம் மேற்கொண்டதால் சில உடல் உபாதைகள் ஏற்படத் தொடங்கின.

மூச்சு விடச் சிரமப்பட்டார். காஞ்சியில் இருந்து அண்ணா விரைந்து வந்தார். உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தினார். அவரிடம், ‘திருச்சி சம்பவத்துக்குக் காரணமானவர்களைக் கண்டித்து கட்சியை விட்டு விலக்க வேண்டும்’ என்று அங்கிருந்தவர்கள் கோரிக்கை விடுத்தனர். கட்சியினருடன் கலந்துபேசி முடிவு எடுப்பதாகக் கூறி அண்ணா அங்கிருந்து சென்றுவிட்டார்.

இதற்கிடையே சம்பத் எதிர்ப்பாளர்கள் ஒரு சதித் திட்டம் தீட்டினர். உண்ணாவிரதப் பந்தலுக்குத் தீ வைக்க சிலர் முயன்றனர். அவர்களை காவல்துறையினர் வளைத்துப் பிடித்துக் கொண்டுபோய் சிறையில் வைத்தனர். இதனால் கொட்டகையைச் சுற்றி சம்பத்தின் ஆதரவாளர்கள் இரவு முழுவதும் காவல் இருந்தனர்.

உண்ணாவிரதம் 3-வது நாளும் தொடர்ந்தது. அன்று மாலை சம்பத்தின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது. அண்ணாவும் மிகுந்த மன உளைச்சலில் சாப்பிடவில்லை. இருந்தாலும் அவர் கையறு நிலையில் இருந்தார். அன்று மாலை 6 மணிக்கெல்லாம் சம்பத்தின் உயிருக்கு ஆபத்தான நிலைமை ஏற்பட்டு விட்டதாகவும், உடனே உண்ணாவிரதத்தை நிறுத்தாவிட்டால் பேராபத்து நிச்சயம் என்று டாக்டர் கிருஷ்ணன் எச்சரித்தார்.

‘சாவதானாலும் சரியே என் முடிவை மாற்றிக் கொள்ளப் போவதில்லை’ என்று சம்பத் மறுத்துவிட்டார். அதைத் தொடர்ந்து மதியழகன், ஆசைத்தம்பி, கண்ணதாசன், மேயர் முனுசாமி, திருச்சி சாம்பு ஆகியோர் காரில் விரைந்து சென்று தேவராஜ் முதலியார் இல்லத்தில் தங்கியிருந்த அண்ணாவைச் சந்தித்தனர். விவரங்களைக் கேட்ட அண்ணா சத்தம் போட்டு அழுதே விட்டார். ‘நீங்கள் வாருங்கள் எப்படியும் நிறுத்திவிடலாம்’ என்று எல்லோரும் சொல்ல அண்ணா பரபரப்போடு புறப்பட்டார்.

உண்ணாவிரத மேடையில் சம்பத்தின் கைகளைப் பற்றிக் கொண்டு அண்ணா கண்கலங்கினார். ‘உன் கோரிக்கையை ஏற்றுக் கொள்கிறேன். திருச்சி நிகழ்ச்சிக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களை கட்சியை விட்டு விலக்குகிறேன்’ என்று உறுதியளித்தார். அதைத்தொடர்ந்து உண்ணா விரதத்தை நிறுத்த சம்பத் சம்மதித்தார். சம்பத்தை தூக்கி நிறுத்தி தம் கையாலேயே பழரசத்தை ஊட்டி விட்டு, நெற்றியில் முத்தமிட்டு ‘இதில் வெற்றி பெற்றது சம்பத்துதான்’ என்று கூடியிருந்த கூட்டத்தினரிடம் சொன்னார் அண்ணா.

தொடர்ந்து அண்ணா பேசும்போது, “நான் இந்த இரண்டு நாட்களாக சம்பத்தை வந்துப் பார்த்து பேசிவிட்டுப் போனேன். தன் குஞ்சு பட்டினி கிடப்பதை தாய்ப்பறவை ஒருபோதும் மனம் சகியாது. வன்முறையாளர்களைக் கண்டிப்பது மட்டுமல்ல, தண்டிக்கவும் தயாராக இருக்கிறேன். தவறுகளைக் களைந்தெறியத் துணிவோடு இருக்கிறேன். இதில் சம்பத்துக்குத்தான் வெற்றி” என்றார்.

சம்பத்தை அவரது இல்லத்துக்கு அழைத்து வந்தார் அண்ணா. சிறிதுநேரம் அவரிடம் உரையாடினார். இந்தப் பக்கம் சூடு தணிந்தது. ஆனால் மறுபக்கம் புகைச்சல் அதிகரித்தது.

மறுநாள் (23.2.61) அண்ணா ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில், “நம்மையெல்லாம் வருந்தத்தக்க, வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல் திருச்சியில் நடைபெற்றது.வன்முறைகள் கழகத்தின் நடவடிக்கைகளிலே புகுந்து விடுமானால், எவரும் சகிக்க முடியாத இழிவையும் அதை அடுத்து அழிவையும் ஏற்படுத்தி விடும். சம்பத் உண்ணாவிரதம் மேற்கொண்டது என் மனதுக்குப் பெரிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

நேற்று நான் சம்பத்தை வந்து பார்த்தேன் - பேசினோம். எவ்வளவு வேதனையை அடக்கிக் கொண்டு அந்தப் பேச்சு நடந்தது என்பதை நான் கூறத் தேவையில்லை. கட்சியின் முக்கியஸ்தர்கள் கூடிப் பேசி நிலைமை சீராக்கப்படுவதற்கான திட்டம் வெளிப்பட்டவுடன் தனது உண்ணாவிரதத்தைக் கைவிட இயலும் என சம்பத் தெரிவித்தார். அதற்கு நான் சம்மதித்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தேன்.

எனவே உடனடியாகத் தனிக் கூட்டம் ஒன்றைக் கூட்டத் தீர்மானித்திருக்கிறேன். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்படும் சீரிய முடிவுகள் கழகத்தில் அமைதியையும், சுமுகத்தையம் திரும்பவும் ஏற்படுத்தும் என்று நம்புகிறேன். எனவே இந்த அறிக்கையையே, அந்தக் கூட்டத்துக்கான அழைப்பாக ஏற்று, பொதுக்குழுவில் உள்ளவர்களும், கழக எம்எல்ஏ, எம்எல்சிக்களும் கலந்து கொள்ள வேண்டுகிறேன்" என்று கூறியிருந்தார்.

அதைத் தொடர்ந்து திருவொற்றியூரில் 26.2.61 ஞாயிறு அன்று காவலர் கூட்டம் நடைபெற ஏற்பாடாயிற்று. அனைத்து மாவட்டங்களில் இருந்தும் கட்சியின் மிக முக்கியப் பிரமுகர்கள் இக்கூட்டத்துக்கு அழைக்கப்பட்டனர். அந்த நேரத்தில் கட்சியின் பொருளாளர் பதவியை ராஜினாமா செய்வதாக முரசொலி பத்திரிகையில் கலைஞர் அறிவிப்பு வெளியிட்டார்.

சம்பத்தின் உண்ணா நோன்புக்குப் பிறகு அண்ணாவின் மனப் போக்கில் நல்ல மாறுதல் தென்பட்டது. ஆகவே காவலர் கூட்டத்தில் எல்லோரும் கலந்து கொண்டு மனம்விட்டுப் பேசி இறுக்கங்களைப் போக்கிக் கொள்ள வேண்டும் என சம்பத் எண்ணினார்.

காவலர் கூட்டத்தன்று காலை 9 மணிக்கு சம்பத் தமது நண்பர்களை அனுப்பி கண்ணதாசனை அழைத்து வரச் சொன்னார். மேயர் முனுசாமியும் மற்றும் சிலரும் கண்ணதாசனை அவரது வீட்டில் போய் அழைத்தனர். அதற்கு அவர் ‘எனக்கு உங்கள் கட்சியும் வேண்டாம்; தொல்லையும் வேண்டாம். என்னை இப்படியே இருக்க விடுங்கள்’ என்றார். இருப்பினும் வந்த தோழர்கள் கொடுத்த அழுத்தத்தினால் காவலர் கூட்டத்தில் கலந்து கொள்வது என்று முடிவு செய்து அவர்களோடு புறப்பட்டார் கண்ணதாசன்.

எல்லோரும் காவலர் கூட்டத்துக்குச் சென்றனர். இதற்கிடையே அந்தக் கூட்டத்திலும், சம்பத் மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்குவதற்கு ஏற்பாடு நடப்பதாக தகவல்கள் கசிந்தன. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அண்ணாவால் அதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலவில்லை. நிலைமை கைமீறி போய்விட்டது. எனவே காவலர் கூட்டத்தில் இருந்து சம்பத்தும் அவரது ஆதரவாளர்களும் உடனடியாக வெளியேறினார்கள்.

இதற்கு மேல் திமுகவில் நீடிப்பது சரிப்பட்டு வராது என சம்பத் மற்றும் அவரது ஆதரவாளர்கள் முடிவெடுத்தனர். உடனடியாக ‘தமிழ் தேசியக் கட்சி’ என்ற கட்சியை சம்பத் தலைமையில் தொடங்குவது என முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, 1961 ஏப்ரல் 19-ம் தேதி கட்சி தொடங்கப்பட்டது. கண்ணதாசன், பழ.நெடுமாறன், எம்.பி.சுப்பிரமணியம், வாழப்பாடி ராமமூர்த்தி, கரு.தமிழழகன், ஆர்.எஸ்.பாண்டியன், கோவை செழியன், பொறையாறுஜம்பு என ஒரு பெரிய பட்டாளமே சம்பத்தின் பின்னால் திரண்டது. கட்சி ஆரம்பிக்கப்பட்டு மதுரையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தை பழ.நெடுமாறன் ஒருங்கிணைத்து நடத்தினார்.

இதற்கிடையே 1962-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வந்தது. இதில் தமிழ்த் தேசியக் கட்சி 9 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் வெற்றியைப் பெற முடியவில்லை. இந்நிலையில், திமுகவில் இருந்து பிரிந்து தனித்து அரசியல் களம் கண்ட சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் விரும்பினர். கண்ணதாசன் போன்றவர்களுக்கும் அதுதான் நல்லது என்ற எண்ணம் இருந்தது. அந்த காலகட்டத்தில் காமராஜர் அகில இந்தியத் தலைவராக இருந்தார் என்பது என் நினைவு. அவர் குற்றாலத்தில் தங்கியிருந்தார்.

திருச்சி தேவர் ஹாலில் 1964-ம் ஆண்டுவாக்கில் தமிழ்த் தேசியக் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. முக்கிய நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர். அக்கூட்டத்தில், தமிழ்த் தேசியக் கட்சியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து சம்பத், பழ.நெடுமாறன், பொறையாறு ஜம்பு, எம்.பி.சுப்பிரமணியம் ஆகியோர் காரில் மதுரை, ராஜபாளையம் வழியாக குற்றாலத்துக்குச் சென்றனர். அங்கு பெரிய ரோஜா மாலையை காமராஜருக்கு அணிவித்து, தமிழ்த் தேசியக் கட்சியை காங்கிரஸ் கட்சியோடு இணைப்பதாக அறிவித்தனர். காமராஜரும் அவர்களை அன்புடன் அரவணைத்துக் கொண்டார்.

தமிழ்த் தேசியக் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது காங்கிரஸ் தொண்டர்களிடையே உற்சாகத்தைக் கொடுத்தது. தமிழகம் முழுவதும் சம்பத் பங்கேற்கும் கூட்டங்கள் நடத்தப்பட்டன.

இவ்வாறாக திராவிட இயக்கமான திமுகவில் முதல் பிளவு ஏற்பட்டு, கட்சியில் இருந்து வெளியேறி புதிய கட்சி தொடங்கிய ஈவிகே சம்பத், தேசிய இயக்கமான காங்கிரஸில் சேர்ந்து தனது அரசியல் பயணத்தைத் தொடர்ந்தார். திமுகவில் இருந்து சம்பத் விலகியது அந்த காலகட்டங்களில் பத்திரிகைகளில் தினமும் பரபரப்புச் செய்தியாக இருந்தது.

<div class="paragraphs"><p>உண்ணாவிரத மேடையில் ஈவிகே சம்பத்துடன் அண்ணா.</p></div>
அணைக்கப்பட்ட நெருப்பு மீண்டும் புகையத் தொடங்கியது! - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 99

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in