அணைக்கப்பட்ட நெருப்பு மீண்டும் புகையத் தொடங்கியது! - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 99

மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஈவிகே சம்பத்.

மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஈவிகே சம்பத்.

Updated on
5 min read

திமுகவில் ஈவிகே சம்பத்துக்கு ஏற்பட்ட மனவருத்தங்களை முடிவுக்குக் கொண்டுவர அண்ணா கொடுத்த தன்னிலை விளக்கத்தைத் தொடர்ந்து, சம்பத்தும் இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருந்த விவரங்களை சுருக்கமாகப் பார்ப்போம்...

வேலூரில் திமுக பொதுக்குழு, செயற்குழுக் கூட்ட நடவடிக்கைகளுக்குப் பின் தொண்டர்களிடையே ஏற்பட்டுள்ள குழப்பமான நிலை, கட்சியில் உள்ள பொறுப்பான அனைவருக்குமே பெருத்த வேதனையை அளித்து வருகிறது. கழகத்தில் அண்மையில் நம்மில் சிலர் மேற்கொள்ள நேரிட்ட பல நிலைகள், கழகத்தின் கட்டுப்பாட்டுக்கு ஊறுவிளைவிப்பதாக அமைந்து விட்டன.

அண்ணா எழுதிய ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்’ என்ற தொடர் கட்டுரை ஜனநாயகத்தைப் பழிப்பதாகவும், ஜனநாயகத்தில் நம்பிக்கை கொண்டு கழக நடப்பில் அத்தன்மை மென்மேலும் வேண்டும் என்ற கருத்துக் கொண்ட என்னைத் தாக்குவதாகவும் அமைந்ததென்ற கருத்தில் அதற்குப் பதிலாக நான் ‘அண்ணாவின் மன்னன்’ என்ற ஒரு கட்டுரை மூலம் எனது கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன்.

கழகத்தில் அண்ணாவும் நானும் மிக முக்கிய பொறுப்புகளை வகித்துவரும் நிலையில், இவ்விரு கட்டுரைகளும் எங்கள் இருவருக்கும் இடையே பலத்த கருத்து வேறுபாடு எழுந்த நிலையை வெளிப்படுத்த, கழகத் தோழர்களிடையே குழப்பத்தையும் பலரிடையே மனக் கவலையையும், கசப்பையும் உண்டாக்கி விட்டன.

அந்தக் கட்டுரையில் என்னைத் தாக்கும் எண்ணம் அறவே இல்லை என அண்ணா கூறியபின், அதனை அப்படியே நானும் ஏற்றுக் கொள்கிறேன். நான் எழுதிய கட்டுரையால் கழகத் தோழர்களிடையே மனக்குழப்பம் ஏற்பட்டமைக்கும் எனது வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

வேலூர் பொதுக்குழுக் கூட்டங்களில் தென்பட்ட வன்முறைத் திட்டங்களையும், அவற்றுக்குக் காரணமானவர்களையும் அண்ணா கண்டித்திருப்பதையும், அதுபோன்ற வன்முறை எண்ணம் கழகத்தில் எந்த மட்டத்திலும் தலைதூக்காத வண்ணம் நடந்து கொள்ள வேண்டும் என்று அண்ணா விடுத்திருந்த அறிக்கையை நான் வரவேற்கிறேன்.

வேலூர் நிகழ்ச்சிக்குப் பிறகு இரு தரப்பிலும் வெளியிடப்பட்ட அறிக்கைகளில் பேசப்பட்ட பேச்சுகள், எழுத்துகள், அனைத்தும் இத்தோடு முடிந்து, கழகத்தில் பழைய சூழ்நிலை மீளவும், தோழமை மலரவும் நாம் ஒவ்வொருவரும் மனப்பூர்வமாகப் பாடுபடுவோம்.

வேதனையான நிலைக்கு கழகத்தை ஆட்படுத்தியதில் எனக்கும் ஒரு பங்கு ஏற்பட்டு விட்டதை எண்ணி வருந்துகிறேன். அண்ணாவின் சீரிய தலைமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு, கழகத்தின் வெற்றிக்கும், பெருமைக்கும் தோழமை உணர்வோடு பாடுபடுவோம்.

இவ்வாறு சம்பத் தமது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கிடையே, அண்ணாவின் அறிக்கையில் வேலூர் நிகழ்ச்சியில் ஏற்பட்ட வன்முறையில் நடிகர்களுக்குப் பங்கு இருப்பதாக ஒப்புக் கொள்வதுபோல் இருக்கிறது என்றும், அது தங்கள் மனதை வெகுவாகப் புண்படுத்துவதாகவும் நடிகர்கள் ஒரு தந்தியை நாகர்கோவிலில் தங்கியிருந்த அண்ணாவுக்கு அனுப்பினர்.

அடங்கி விட்டதாகக் கருதப்பட்ட நெருப்பு மீண்டும் புகைக்கத் தொடங்கியது. நடிகர்களின் தந்தியைப் பார்த்த அண்ணா மனம் குழம்பினார். எல்லோரையும் சரிக்கட்டி போக வேண்டும் என்பதுதான் அண்ணாவின் இயல்பு. நடிகர்களை எப்படி சமாதானம் செய்வது என அண்ணா குழம்பினார். நாகர்கோவிலில் இருந்து அண்ணா திரும்பிக் கொண்டிருந்தபோது மதுரையில் அவரை மறித்து நிறுத்திய மதுரை முத்து, ‘நீங்கள் எப்படி சம்பத்தோடு பணிந்து போகலாம்... எங்கள் மானமே போய்விட்டது’ என்று வெடித்தார்.

அண்ணா சென்னை வந்ததும், நடிகர்களும் படையெடுத்தனர். “எங்களை வன்முறையாளர்கள் என்று அறிக்கை விடுத்ததற்கு நீங்கள் வருத்தம் தெரிவித்து அறிக்கை விட வேண்டும். இல்லையேல், நாங்கள் கட்சியை விட்டே விலகிக் கொள்கிறோம்" என்றனர்.

இதற்கிடையே தி.நகர் பாலமுத்துகிருஷ்ணன் தெருவில் இருந்த சம்பத் இல்லத்தில் முக்கிய ஆதரவாளர்கள் பலரும் அவரைச் சந்தித்தனர். ‘அண்ணா மீண்டும் வன்முறை சக்திகளுக்கு அடிபணிந்துவிட்டார்’ என்று குமுறலோடு கூறினர். அதற்கு சம்பத், ‘பொறுமையாக இருங்கள்; என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்’ அவர்களை சமாதானப்படுத்தினார்.

‘அண்ணா திடமான முடிவுக்கும் வகையில் அவரை வழிக்குக் கொண்டுவர வேண்டும். இல்லையேல் கட்சியை ஒழுங்குபடுத்தத் துணிந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். குழப்பமான நிலை நீடித்தால் மொத்தத்தில் கழகம் சீர்குலைந்து விடும்" என்று எம்.பி.சுப்பிரமணியம், கோவை செழியன், கே.செல்வராஜ் போன்றவர்கள் மிகுந்த கவலையோடு சம்பத்திடம் கூறினர்.

அந்த சமயத்தில் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட ஏ.கோவிந்தசாமி, ‘அண்ணா மிகவும் கவலையுடனும், சோர்வாகவும் இருக்கிறார். இரண்டு நாட்களில் சென்னை வருவதாகச் சொன்னார். மீண்டும் பேசிப் பார்ப்போம்" என்றார்.

‘நான் எனது கோபதாபங்களை அடக்கிக் கொண்டு பொறுமையாகத்தான் இருக்கிறேன். ஆனால் அந்தப் பக்கம் விளைவுகள் மிகவும் விபரீதமாகப் போய்க் கொண்டிருக்கிறது" என்றார் சம்பத்.

இத்தகைய சூழலில் ‘தென்றல்’ இதழில் ‘பாவமன்னிப்பு’ என்னும் தலைப்பில் கண்ணதாசன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அதில் ஒரு கற்பனைக் கட்சியையும், அக்கட்சியில் குழப்பம் விளைவித்தவர்களையும் கேலி செய்திருந்தார். போர்க்குணம் படைத்திருந்த திமுக, பஜனை பாடிகளின் மடமாக மாறிவிட்டது என்பதை அக்கட்டுரையில் கண்ணதாசன் அவருக்கே உரிய பாணியில் வர்ணித்திருந்தார். ‘தென்றல்’ அமோகமாக விற்பனையானது. அதேநேரம் கட்சியினரிடம் பரபரப்பு, சர்ச்சைகள் மீண்டும் தலைதூக்கின.

அடுத்த சில தினங்களில் மதுரையில் ஒரு பொதுக்கூட்டத்திலும், எழுத்தாளர் மன்றக் கூட்டத்திலும் சம்பத் பங்கேற்பதாக இருந்தது. மதுரை தோழர்கள் பழ.நெடுமாறன், வே.சவுந்தரராசன், ஆ.ரத்தினம், சந்தானம், கேப்டன் சீனி போன்ற தோழர்கள் மிகுந்த பரபரப்பான அந்தப் பொதுக் கூட்டத்திற்கான பணிகளில் முனைந்திருந்தனர்.

அதேநேரம், மதுரை முத்து ஆதரவாளர்கள், ‘சம்பத் மதுரை போனால் திரும்ப முடியாது. கூட்டம் நடத்துகிறவன், கூட்டம் கேட்கிறவன் எல்லோரும் கூண்டோடு கைலாசம் போய்விடுவார்கள்’ என்றெல்லாம் பேசத் தொடங்கினர். அதையெல்லாம் சம்பத்தோ, அவரது ஆதரவாளர்களோ காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை.

சென்னையில் இருந்து ஒரு காரில் சம்பத்தும், கண்ணதாசனும் மதுரை புறப்பட்டார்கள். மதுரை ஒத்தக்கடை அருகிலிருந்தே காவல் துறையினர் அவர்களைப் பின் தொடர்ந்தனர். மதுரையில் டாக்டர் அருணாசலம் வீட்டில் சம்பத்தும், கண்ணதாசனும் தங்கினர். அருணாசலமும், விருதுநகர் துரையரசுவும் சம்பத்திடம் சமரச முயற்சியில் ஈடுபட்டனர்.

எழுத்தாளர் கூட்டத்தில் முதலில் பேசிய கண்ணதாசன், அவரது தமக்கே உரிய பாணியில் கட்சி விவகாரங்களை குத்தலாகப் பேசினார். அடுத்து பேசிய சம்பத் பொது விஷயங்களையே பேசினார்.

அதைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு மதுரை மேல மாசி வீதியில் பொதுக்கூட்டம் நடந்தது. பழ.நெடுமாறன், வே.சவுந்தரராசன், ஆ.ரத்தினம், அய்யாசாமி, சந்தானம், கேப்டன் சீனி, பழக்கடை பாண்டி என பல துடிப்பான தோழர்களின் கூட்டு முயற்சியால் அந்தக் கூட்டம் மிகச் சிறப்பாக நடந்தது. சம்பத் ஒரு மணி நேரம் உரையாற்றினார். கண்ணியமிக்க கருத்துரைகள், தத்துவ விளக்கங்கள் என மதுரைக் கூட்டம் சுமுகமாக முடிந்தது.

இக்கூட்டத்தில் சம்பத் பேசும்போது, “திராவிட முன்னேற்றக் கழகத்தின் அடிப்படைக் கொள்கை திராவிட நாடு விடுதலை பெற வேண்டும் என்பதாகும். காங்கிரஸ்காரர்களின் பதவியைக் கவிழ்த்துவிட்டு அதன் இடத்தில் உட்காருகிற அளவிற்கு நாம் வளர்ச்சியடைந்திருக்கிறோம். கழகத்துக்குள் கருத்து வேறுபாடு கொண்டவர்களை தூக்கி எறிவேன் என்று சிலர் துச்சமாகப் பேசி வருகிறார்கள். இது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது.

திமுகவில் உள்ள இரண்டு லட்சம் உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பொறுப்பை உணர்ந்து பேச வேண்டும். நமது வழியில் இரண்டு மூன்று பாதைகள் குறுக்கிடுமேயானால் சரியான பாதை எதுவென்று யோசித்துப் பார்த்துப் போக வேண்டும். அதற்காக பாதை இருப்பதே குற்றம் என்று கூறுவது சரியல்ல. கருத்து வேறுபாடு சுயநலமாகாது. நாக்கை நம்பி அதனை அதிகமாக விளையாட விடக் கூடாது என்று நான் நண்பர்களுக்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன். எந்த நிலைபெற்ற அரசியலும் கருத்து வேற்றுமைப் பிரச்சினையைச் சமாளித்துத்தான் முன்னேற வேண்டும். இதுதான் இயல்பு.

ஒரு கட்சி நல்ல விதமாக அமைய பல கருத்து வேற்றுமைகள் இருக்கும். இதனால் பலர் தவறாக நினைப்பார்களேயாயின் இது இடையில் இருக்கும் சின்ன மனிதர்களின் புத்தியாகும். திமுக தோழர்கள் ஒவ்வொரு வகையான தேவைக்கு வேண்டியவர்கள். எல்லோருடைய கூட்டு முயற்சியால்தான் இக்கழகம் முன்னேற வேண்டும். யாரை விட்டு யார் இருக்க முடியும்? திமுக இந்நாட்டை விட்டு மறைய வேண்டும் என்று எவனும் எண்ண மாட்டான்.

திமுகவின் அடிப்படை லட்சியம் விடுதலை. குறிப்பிட்ட விடுதலை இயல்பு படைத்தவர்கள் மட்டும் அனுசரிக்கக் கூடிய சாதனை. இதனாலேயே நாளுக்கு நாள் நாம் அன்பு உருவமாகவே இல்லாமல், ஆற்றல் மிக்கவர்களாக ஆக வேண்டும் என்பதற்காக காலத்துக்கு ஏற்றவாறு மாற்றி அமைத்துவர வேண்டும். வருகிறோம், வருவோம்" என்று பேசினார்.

இக்கூட்டத்தில் கண்ணதாசன், ஆசைத்தம்பி, நெடுமாறன் ஆகியோரின் பேச்சும் குறிப்பிடத்தக்கதாய் இருந்தது. எவ்வித கலவரமோ, சலசலப்போ இன்றி அமைதியாகக் கூட்டம் நடந்து முடிந்தது. சம்பத்தும், கண்ணதாசனும் நெடுமாறன் இல்லத்தில் உணவருந்தியபின் காரில் பயணப்பட்டனர். காவல்துறையினர் ஒத்தக்கடை வரை அவர்களைப் பின்தொடர்ந்து வந்தனர்.

இதற்கிடையே ஏனாதி திமுக பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் வீரையன் தலைமையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சம்பத்துக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் சம்பத் பேசும்போது, “திமுகவில் தற்போது ஏற்பட்டிருக்கும் நிலை கழகம் வளர்வதற்கு சூடு பிடிக்குமே தவிர, கழகம் அழிந்து விடாது. வளர்ந்துவரும் ஒரு இயக்கத்தில் கருத்துவேறுபாடு ஏற்படுவது சகஜம்தான்.

இந்தியாவில் பெரும் இயக்கம் என்று சொல்லப்படும் காங்கிரஸ் கட்சியில் பலமுறை கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கின்றன. ஆனால் அவைகளெல்லாம் காங்கிரசின் வளர்ச்சியைக் குலைத்துவிடவில்லை. மனதில் சரியெனப்பட்டதை வெளியிடுபவன் நான். எந்தக் கருத்து சரியெனத் தோன்றுகிறதோஅதைச் சொல்ல வேண்டும். யாருடைய தாட்சண்ணியத்திற்கும் கட்டுப்பட்டு சொல்லாதிருக்கக் கூடாது" என்றார்.

அதைத் தொடர்ந்து 1961 பிப்ரவரி 25-ம் தேதி திருச்சி மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களுக்குச் சென்ற சம்பத்துக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர் பேசும்போது “செயலில் வேதனை இருக்கலாம்; விளைவு நன்மையே தரும்" என்றார்.

அதைத்தொடர்ந்து, சம்பத்தும், கண்ணதாசனும் சாம்பு வீட்டில் தங்கி சற்று ஓய்வெடுத்து விட்டு மாலை 6 மணிக்கு டவுன் ஹால் திடலுக்கு வந்தார்கள். தலைமையுரை முடிந்தபின் கண்ணதாசன் பேச எழுந்தார். அப்போது கீழே இருந்து ஒருவர் மாலை போடுகிற பாவனையில் மேடை மேல் ஏறினார். அவர் பெயர் இருதயராஜ். அவர் கையில் ஜரிகை மாலை இருந்தது. கண்ணதாசன் அருகில் வந்ததும் தன் மடியில் இருந்த ஒரு செருப்பை எடுத்தார்.

கண்ணதாசனின் சட்டையைப் பிடித்துக் கொண்டு கூச்சலிட்டபடி செருப்பை ஓங்கியதும், கண்ணதாசன் காலால் அவரை எட்டி உதைத்தார். கூட்டத்தில் போய் விழுந்த அவரை அங்கிருந்தவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சியடைந்தனர். சம்பத்தோ எவ்விதச் சலனமும் இல்லாமல் அமர்ந்திருந்தார். கண்ணதாசனும் எதையும் பொருட்படுத்தாமல் அரைமணி நேரம் பேசி கூட்டத்தினரை கலகலப்பாக்கினார்.

அவர் பேசும்போது, கூட்டத்தில் கலகம் ஏற்படுத்திய அந்த நபர் மீது நான் ஒரு குற்றமாகச் சுமத்தவில்லை. அவரை இச் செயலுக்குத் தூண்டிய, இதற்குப் பின்னால் இருக்கிற பின்னணியைத்தான் நான் மனதில் எண்ணுகிறேன். அந்த பின்னணியை நானும் அறிவேன். எதிர்காலம் அதற்கான பதிலைச் சொல்லும். சம்பத் எடுத்துக் கொண்ட நிலை உறுதிப்படுத்தப்பட்டு அந்த எண்ணத்தை திமுகவினரிடையே விவாதிக்க - முடிவினைத் தெரிந்து கொள்ள வேண்டிய நேரம் இது. சம்பத் தனி மனிதரல்ல; அவருடைய ஆசைக்கும், தத்துவங்களுக்கும் பல ஆயிரக்கணக்கான தோழர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருக்கிறார்கள் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. ஒரு காலிக் கூட்டம் மாறுபட்ட கருத்துடையவர்களை தாக்குவது இது இரண்டாவது முயற்சி.

திராவிடர் கழகத்தில் இருந்து நாம் பிரிந்த நேரத்தில், சம்பத்தைத் துணைக்கு அழைத்துக் கொண்டுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தை அண்ணா தொடங்கினார். அரசியலுக்கு வந்த பிறகு, சொத்தை இழந்தவர்கள், சொத்து சேர்த்தவர்கள் என்று பார்த்தால், சம்பத் தன்னுடைய சொத்தை அரசியலுக்கு வந்த பிற்பாடு இழந்தவர். இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் நம்மைப் பற்றிக் கொஞ்சம் தெரிந்திருக்கிறது என்றால், அதற்குத் தோழர் சம்பத்துதான் காரணம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அரசியலில் சுகத்தை அனுபவித்தவர்களை சுகத்தை விட்டுவிட்டு வாருங்கள் என்று கூப்பிட்டால் கோபம் வரத்தான் செய்யும். அண்ணாவைத் திரை மறைவில் வைத்துக் கொண்டு சிலர் பிழைக்கிறார்கள். இங்கு நடைபெற்ற நிகழ்ச்சியைக் கண்டு நீங்கள் எல்லாம் கவலைப்படுகிறீர்கள். அதைப்போல வேலூர் செயற்குழுவிலும் வன்முறைகளினால் தோழர் சம்பத் பதவியை விட வேண்டியதாயிற்று. கொள்கைக்காக நாமே தவிர நமக்காகக் கொள்கையல்ல. இந்த நிகழ்ச்சியையும், அதன் பின்னணியையும் நீங்கள் எண்ணிப் பாருங்கள்.

இந்த கலவரங்களைக் கண்டு பயந்து கட்சியை விட்டு நாங்கள் போய்விடுவோம் என்று எண்ணினால், நீங்கள் பைத்தியக்காரர்கள். இது நான் பிறந்த வீடு. உங்களுக்கு எவ்வளவு பங்கு இருக்கிறதோ அவ்வளவு எங்களுக்கும் உண்டு. இந்தப் பிரச்சினைக்கு ஒரு முடிவு காணாமல் நாங்கள் ஓய மாட்டோம். அண்ணாவை நான் மிகவும் மதிப்பவன். ஆனால் இன்று சிலர் அண்ணாவுக்குப் பக்கத்தில் இருந்து கொண்டு அவருக்கு ஆழக்குழி தோண்டுகிறார்கள்.

இதிலிருந்து விடுதலை பெற வேண்டும் என்ற முயற்சி இன்றைக்கு திமுகவின் உள்ளே இருக்கிற முயற்சியாகும். இப்படி ஒரு முயற்சிக்கு செருப்பு வந்தால்தான் பிறகு மாலை வரும்.

வாழ்க்கையை அருமையாகக் கண்டவன் நான். இதையெல்லாம் கண்டு பயந்துவிட மாட்டேன். நான் மீண்டும் இங்கே பேசுவேன், கொல்லப்படாமல் இருந்தால்! அப்படிக் கொல்லப்பட்டு விட்டால், அந்தப் பிணத்தை வைத்துக் கொண்டு இந்தத் தத்துவங்களைக் கொண்டு செல்லுங்கள். அதுவே எனக்குப் போதும்.

இவ்வாறு கண்ணதாசன் உணர்ச்சி பொங்கப் பேசினார்.

அதைத் தொடர்ந்து பேசத் தொடங்கினார் ஈவிகே சம்பத். அவரது உருக்கமிகு உரையைக் கேட்ட கூட்டத்தினர் உணர்ச்சிமயமாகினர்.

(தொடர்வோம்...)

<div class="paragraphs"><p>மதுரையில் நடந்த பொதுக் கூட்டத்தில் பேசிய ஈவிகே சம்பத்.</p></div>
சம்பத் பதவி விலகலும், சமரச முயற்சிகளும் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 98

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in