மதியழகன், மதுரை மருத்துவர் அருணாசலம், சேலம் எம்.ராஜூ ஆகியோருடன் ஆலோசனையில் ஈடுபட்ட ஈவிகே சம்பத்.
சம்பத் பதவி விலகலும், சமரச முயற்சிகளும் - நம்ப முடியாத எனது நாட்குறிப்புகள் | அத்தியாயம் 98
வேலூரில் நடைபெற்ற திமுக பொதுக்குழு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியது. கட்சித் தொண்டர்களிடையே குழப்பம், விரோத மனப்பான்மைக்கு வித்திட்டது. குழப்பங்களை மட்டுப்படுத்த அண்ணா எவ்வளவோ முயன்றபோதும் விவகாரம் கைமீறி போய்விட்டது. அடுத்தது என்ன என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழுந்தது.
இந்நிலையில் வேலூர் செயற்குழு, பொதுக்குழு குறித்தும், அங்கு நடந்த சம்பவங்கள் குறித்தும் ஈவிகே சம்பத் தன்னிலை விளக்கமாக ஓர் அறிக்கையை வெளியிட்டார்.
அதைத் தொடர்ந்து ஏராளமான கட்சித் தோழர்கள் சம்பத்தைச் சந்தித்தனர். வேலூர் பொதுக்குழுவில் நடந்த விவரங்கள் அவர்களுக்குத் தெரியவில்லை. சம்பத் வெளியிட்ட விளக்க அறிக்கை கூட பத்திரிகைகளில் வராதவாறு தடுக்கப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது. இதற்கிடையே ‘நவ இந்தியா’ என்ற பத்திரிகையாளர் பொதுக்குழு செய்திகளை எல்லாம் தொகுத்து மாலைப் பதிப்பில் முன்பக்கத் தலைப்புச் செய்தியாக வெளியிட்டார். ‘சம்பத் தாக்கப்பட்டார்; அவைத் தலைவர் பதவியில் இருந்து விலகல்’ என்று தலைப்பிட்டு, அங்கு நடந்த சம்பவங்களை விவரித்திருந்தார்.
அறைக்குள் நடந்த சம்பவங்கள் அம்பலத்துக்கு வரத் தொடங்கியது. மறுநாள் காலை எல்லா ஏடுகளிலும் இந்தச் செய்தி பரபரப்பாக வெளியானது. செய்தியாளர்கள் சம்பத் இல்லத்தை முற்றுகையிட்டனர்.
அன்றைய ‘நம் நாடு’ இதழில் சம்பத் தாமே விரும்பி பதவி விலகிவிட்டதாகவும், அசம்பாவிதம் ஏதும் நடைபெறவில்லை என மழுப்பலாகவும், சம்பத் பெயரிலேயே தவறாக இதழில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் சம்பத் ஒரு விளக்க அறிக்கையை வெளியிட்டார்.
அதில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்பில் சாதாரண உறுப்பினர் பொறுப்பைத் தவிர ஏனைய பொறுப்புகள் அனைத்தில் இருந்தும் நான் விலகியுள்ளேன். இது, அடிப்படை லட்சியங்களிலோ, அன்றிக் கொள்கைகளிலோ எனக்குள்ள பற்றும் உறுதியும் குறைந்ததால் அல்ல. கழகத்தை நடத்திச் செல்ல அமைப்பு முறை, தலைமையின் போக்கு, அவை குறித்து எனக்கு ஏற்பட்ட எண்ணமும், அதனை உணர்த்துவதற்கு எடுத்துக் கொண்ட முயற்சிகளும், அதன் நிலைமைகளும் என்னை இந்நிலைக்கு கொண்டு சேர்த்துள்ளது.
கழகத்தை நடத்திச் செல்லும் அமைப்புகளின் தன்மை கழக லட்சியங்களில் வெற்றி தேடித் தரத்தக்கதாக இருத்தல் வேண்டும் என்றும், அத்தன்மை சிறந்த ஜனநாயக அடிப்படையில் அமைய வேண்டும் என்று விரும்பினேன். செயற்குழுக் கூட்டத்தில் எனது நிலை குறித்து தெரிவித்தபோது, அவர்கள் வெளியிட்ட சில கருத்துகள் என்னை திடுக்கிட வைத்தன.
கழகத்தில் அண்ணா மிகவும் சக்தி படைத்தவராக இருக்கிறார். ஆனால் கழகம் இன்னும் தனது லட்சியங்களில் வெற்றி காண்பதற்குரிய சக்தியைப் பெறவில்லை. அந்தச் சக்தியைத் திரட்டித் தர அவருக்குக் கழகம் கொடுத்திருக்கும் சக்தியை, கழகத்தில் உள்ள சிலரைத் தூக்கி எறியப் பயன்படுத்துவேன் என்று அவர் கூறியது மிகவும் வேதனைக்குரியது. இச்சமயத்தில் எனது விலகலைத் தொடர்ந்து கழகத்தினின்றும் சிலர் விலக விரும்புவதாகச் செய்திகள் வெளிவருகின்றன. அதனை நான் ஆதரிக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.
இதைத் தொடர்ந்து 21.1.61 அன்று சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற தமிழ்நாடு சலவைத் தொழிலாளர் முன்னேற்றச் சங்கப் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய சம்பத், ‘வேலூர் விவகாரம்’ குறித்து பேசும்போது, “என்னைப் பொறுத்தவரையில் நான் கட்சியை விட்டுப் போகிறேன் என்பதோ, என்னை எவரும் வெளியே அனுப்பி விடலாம் என்பதோ சுலபமல்ல! இப்படிப்பட்ட நேரங்களில் நான் எப்போதுமே கழகத்தின் கடந்த வரலாறுகளை என் மனக்கண் முன் நிறுத்திப் பார்ப்பேன். அரசியலில் எனக்கு சபல புத்தி என்றுமே இருந்ததில்லை. அதற்கு நான் என்றுமே அடிபணிய மாட்டேன்" என்று பேசினார்.
இதற்கிடையே வேலூர் கூட்ட நிகழ்ச்சிகள் குறித்து அண்ணா அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில், “செயற்குழு அவைத் தலைவர் சம்பத் தலைமையில் நடைபெற்றது. பல பிரச்சினைகள் குறித்துப் பேசப்பட்டன. குறிப்பாக கழகத்தின் தலைமைத் துறையினருக்குள் இருந்துவரும் நேசத் தொடர்புகள் கெடத்தக்க விதமான கசப்புகள், கருத்து வேற்றுமைகள் ஏற்பட்டது பற்றி விரிவாகப் பேசப்பட்டது.
உணர்ச்சிகளும், வேண்டத்தகாத வெறுப்புணர்ச்சியும், கோஷ்டித் தன்மையும் தலைதூக்கி வரலாயிற்று என்பதை மறைக்கத் தேவையில்லை. இவை செம்மைப்படுத்தப்பட்டால் இந்த நிலையே கழகத்துக்கு மேலும் வலுவைத் தேடித் தரவும் கூடும். கசப்புகள் குறித்து பேச்சு எழுந்தபோது பத்திரிகைகளிலே என்னை இழிவுபடுத்தும் முறையில் கட்டுரைகளை, கழக முக்கியஸ்தர்களே எழுதுவது குறித்து தமது வருத்தத்தை செயற்குழு உறுப்பினர்கள் கூறினர். கழகத்தின் சட்டதிட்டங்களில் செய்ய வேண்டிய அடிப்படையான மாறுதல்கள் செய்வதற்கான திருத்தங்கள் உட்பட பல்வேறு விஷயங்கள் குறித்து உரத்த குரலில் உறுப்பினர்கள் பேசிக் கொண்ட பரபரப்பு தவிர வேறு எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
இத்தகைய நிகழ்வுகளால் ஐந்து, பத்து நிமிடங்கள் அனைவருமே அசைவற்று கலங்கிய கண்களோடு உட்கார்ந்திருந்தோம். பிறகு ஆத்திரமும் அவசரமும் கொள்வதாகாது என்ற உணர்வு பெற்று விவாதத்தைத் தொடர்ந்து நடத்தினோம். உணவு இடைவேளைக்குப் பிறகு அவைத் தலைவர் சம்பத் எழுதிய ‘அண்ணாவின் மன்னன்’ என்ற கட்டுரை குறித்து விவாதிக்கப்பட்டது.
அந்தக் கட்டுரை தங்கள் மனதை வெகுவாகப் பாதித்துவிட்டது என்றும், கட்சிக் கட்டுப்பாட்டுக்கு அது உகந்தது அல்ல என்றும், மாற்றாருக்கு இடம் கொடுக்கும் நிலைமையை ஏற்படுத்தி விட்டதாகவும் பலரும் பேசினர். சிலர், ‘அண்ணாவிடம் உள்ள நேசத் தொடர்பு குறைந்ததால் இப்படி எழுதும் நிலை ஏற்பட்டது’ என்றனர்.
அப்போது சம்பத், “ஜனநாயகம் பற்றி பொதுமக்கள் நம்பிக்கையும், பற்றும் கொள்ளச் செய்ய வேண்டிய கட்டுரை எழுத வேண்டியது தமது கடமை என்றும், அதை நிறைவேற்றாமலிருக்கத் தமது உள்ளம் இடந்தராதென்றும் கூறிவிட்டு, என்றாலும் செயற்குழு உறுப்பினர்களுக்கு மனவேதனை ஏற்பட்டிருப்பதாகத் தாம் உணருவதாகவும், அதற்காக வருந்துவதாகவும்" தெரிவித்தார்.
அப்போது அன்பழகன், “சம்பத் மனதில் பட்டதை விஷமின்றி எடுத்துக் கூறுபவர். சம்பத்துக்கும் அண்ணாவுக்கும் ஏற்படும் தகராறு அல்லது கருத்து வேற்றுமை பற்றிப் பேசுவதற்கா நாம் வந்திருக்கிறோம்" என்று கேட்டார்.
உடனே சம்பத், “நான் பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு என் கருத்தைப் புகுத்தும் முறையை மேற்கொள்வது தூய ஜனநாயகமாகாது என்று கருதுவதால், நான் அவைத்தலைவர் பதவியில் இருந்து விலகி, சாதாரண உறுப்பினராகவே கழகப் பணியாற்ற முடிவு செய்கிறேன்’ என்று எல்லோரும் திடுக்கிடும் விதத்தில் பேசினார்.
அப்போது நான் ‘சம்பத் அவ்விதம் விலகத் தேவையில்லை’ என்று வாதாடினேன். மற்றவர்களும் அவ்வாறே கேட்டுக் கொண்டனர். இரவு 8 மணி வரை செயற்குழுக் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தோழர் சம்பத் “தமது முடிவுதான் சமதர்மக் கட்சிகள் மேற்கொள்ளும் முறை என்றும், அதுகுறித்து நான் (அண்ணா) கலக்கமடையத் தேவையில்லை என்றும், வேறு சிலர் தம் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவர முயற்சிப்பதாகக் கேள்விப்பட்டதாகவும்" கூறி, என்னைத் தமது முடிவுக்குச் சம்மதம் தரும்படி கூறினார்.
அவரிடம் கண் கசியும் நிலையில் பேசிப் பார்த்தேன். என்னைத் தேற்றவும், எப்போதும்போல் கழகப் பணியாற்றுவதாக உறுதி கூறவும்தான் சம்பத் முயன்றாரே தவிர, தமது முடிவில் மாற்றிக் கொள்வதாக இல்லை. பின்னர் அவரவர் தங்கும் இடங்களுக்குச் சென்றோம்.
மறுநாள் காலை 10 மணிக்கு செயற்குழு நடந்த இடத்துக்கு வந்தேன். தோழர் சம்பத்துக்கு டெலிபோன் செய்தேன். அவர் எழுதிக் கொண்டிருப்பதாகவும், முடிந்ததும் வருவதாகவும் தோழர் ஏ.கோவிந்தசாமி பதிலளித்தார். 11 மணிக்கு வந்த தோழர் சம்பத், என்னிடம் விலகல் கடிதத்தைக் கொடுத்தார். தோழர் மதியழகனும் உடன் இருந்தார். ‘மதி, நீயும் இது சரியென்றா கூறுகிறாய்?’ என்று நான் கேட்டேன். ஏனெனில், முதல்நாள் இரவு வரை ‘விலகுவது கூடாது’ என்று கருதியவர் அவர்.
தோழர் மதியழகன், ‘ஆமாம், இப்போது இதுதான் சரி!’ என்றார். உடனே சம்பத், மாலை பொதுக்கூட்டத்துக்கு வருவதாக உறுதி சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட்டார். செயற்குழு மனச் சங்கடத்துடன் ‘சம்பத் எடுத்துள்ள முடிவை ஒப்புக் கொள்வது தவிர வேறு வழியில்லை’ என்ற முடிவுக்கு வந்தது.
பொதுக்குழுவில் தோழர் சம்பத்தின் விலகல் கடிதத்தைப் படித்துக் காட்டினேன். பொதுக்குழு திகைத்தது. எனினும் வேறு மாற்றம் இல்லை என்பதை உணர்ந்து ஏற்றுக் கொண்டது. உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் பொதுக்குழு கூடியது. தோழர் மதியழகன் வரவில்லை. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட, தோழர்கள் கண்ணதாசன், கண்ணப்பா வள்ளியப்பன், பில்லப்பன், ராசாராம், ஆர்.எஸ்.பாண்டியன், பி.எம்.குப்புசாமி, தாண்டவன், ராமலிங்கம், எம்.பி.சுப்பிரமணியம் ஆகியோர் பொதுக்குழுவிற்குப் பிற்பகல் வரவில்லை. எனவே அவர்கள் கொடுத்திருந்த தீர்மானங்கள் பொதுக்குழுவால் தள்ளி வைக்கப்பட்டன.
இலங்கைத் தமிழர்களுக்கு ஆறுதல் கூறும் தீர்மானமும், தமிழ்நாடு எனும் பெயர் பெற கிளர்ச்சி தொடங்க வேண்டும் என்னும் தீர்மானமும் என்னால் கொண்டுவரப்பட்டு நிறைவேறின. என் முடிவுரையில், கசப்புகளை நீக்கிக் கொண்டு கழகப் பணியாற்றும்படி அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொண்டேன். மாலை 6 மணியளவில் பொதுக்கூட்டம் முடிவுற்றது.
கழகத்துக்கு மாசு கற்பிக்க வேண்டாமென்று பொதுமக்களையும், கழகத் தோழர்களையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். ரசாபாசமோ, ரகளையோ அங்கு ஏற்படவில்லை. கருத்து வேற்றுமைகள் எழுந்தன; கசப்பு காணப்பட்டது என்றாலும் கழகத் தோழர்கள் கண்ணியத்தைக் காப்பாற்றினர்; அவர்கள் அனைவருக்கும் என் நன்றி. இவ்வாறு அண்ணா தம் அறிக்கையில் கூறியிருந்தார்.
அண்ணா - சம்பத் இடையே சமரச ஏற்பாடு
சம்பத் அறிக்கை, அண்ணா மறுப்பறிக்கை இப்படி அறிக்கைப் பரிமாற்றங்கள் நிகழ்ந்த நிலையில் கழகத்தின் மூத்த தலைவர்களான சி.பி.சிற்றரசு, மதியழகன், ஏ.கோவிந்தசாமி, என்.வி.நடராசன் போன்றவர்கள் அண்ணாவுக்கும், சம்பத்துக்கும் சமரசம் செய்து வைக்க வேண்டுமென்று துடித்தனர். அண்ணா அப்போது காஞ்சியில் இருந்தார். ஒரு பொது இடத்தில் அண்ணாவையும், சம்பத்தையும் சந்திக்க வைக்க வேண்டும் என்று கண்ணதாசனைத் தொடர்பு கொண்டு ஏ.கோவிந்தசாமி பேசினார். இந்தத் தகவலை சம்பத்திடம் கண்ணதாசன் சொன்னபோது, அவர் சந்திப்புக்கு மறுத்துவிட்டார். பின்னர் மதியழகன், மேயர் முனுசாமி, எம்.பி.சுப்பிரமணியம், கோவை செழியன், பழ.நெடுமாறன், உ.பில்லப்பன் போன்றவர்கள் வற்புறுத்தியதைத் தொடர்ந்து சம்பத் சம்மதித்தார்.
எங்கே சந்திப்பு என்ற பிரச்சினை ஏற்பட்டது. ஒரு பொதுவான இடத்தில் ஏற்பாடு செய்வதாகக் கூறினார் கண்ணதாசன். அதன்படி சன் தியேட்டருக்கு எதிரே உள்ள பாலமந்திருக்குப் பக்கத்துத் தெருவில் அபிபுல்லா சாலை சந்திக்கும் இடத்தில் ஒரு வீட்டை ஏற்பாடு செய்து நேரத்தையும் குறித்து, விவரங்களை ஏ.கோவிந்தசாமிக்குத் தெரிவித்தார் கண்ணதாசன். உடனே கோவிந்தசாமி காஞ்சிக்குப் புறப்பட்டார். அன்று மாலை 5 மணிக்கெல்லாம் அந்த முகவரிக்கு அண்ணாவை அழைத்து வந்து விடுவதாக அவர் கூறினார்.
சரியாக மாலை 5 மணிக்கு சம்பத்தைக் காரில் ஏற்றிக் கொண்டு குறிப்பிட்ட இடத்துக்கு கண்ணதாசன் பயணமானார். அந்த வீட்டருகில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு ஏற்கெனவே ஒரு சிறிய காரில் அண்ணாவும் கோவிந்தசாமியும் வீட்டைத் தேடிக் கொண்டிருப்பதைக் கண்டார். உடனே கண்ணதாசன் காரை விட்டிறங்கி ஒடிச் சென்று அண்ணாவையும், கோவிந்தசாமியையும் அந்த வீட்டிற்கு அழைத்து வந்தார்.
முதலில் தேநீர் விருந்து நடைபெற்றது. பொதுவான விஷயங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். சுமார் 7 மணிக்கு சம்பத் - அண்ணா இடையே பேச்சு ஆரம்பமாயிற்று. ஏ.கோவிந்தசாமி மட்டும் உடன் இருந்தார். கண்ணதாசனும், பிற தோழர்களும் கீழே ஒரு அறையில் இருந்தனர்.
அண்ணாவும் சம்பத்தும் பேசத் தொடங்கினார்கள். நடந்து போன விவகாரங்களைக் கிளப்பாமல், இனி எப்படி நடந்து கொள்வது என்பது பற்றியே அவர்கள் பேச விரும்பினார்கள். நேர்முகச் சந்திப்பில் அவர்கள் மிகவும் கவலையோடு காணப்பட்டார்கள். சிறு வயது முதலே நெருங்கிப் பழகிய பழக்கத்தின் பாசத்தால் அந்தச் சந்திப்பில் பாசம் இழைந்தோடியது. எல்லாவற்றையும் மறந்து விடுமாறு அண்ணா கேட்டுக் கொண்டார். பதற்றம் தணிந்து காலப் போக்கில் நீயே கட்சியைத் தலைமை தாங்கி நடத்தக் கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறேன் என்றும் அண்ணா உருக்கத்தோடு கூறினார்.
கழகத்தைப் பிடித்துள்ள நோய் நொடிகளைப் போக்கிக் கொள்ள உருப்படியான நடவடிக்கைகள் தேவையென்பதை சம்பத் வற்புறுத்தினார். இருவரும் நெடுநேரம் பேசினர். ஏ.கோவிந்தசாமியும் அவ்வப்போது தம் கருத்தைச் சொன்னார். அவர், இருவருக்கும் பொதுவானவர்; இருவரும் ஒன்றுபட வேண்டும் என்னும் உள்ளத் தூய்மை மிக்கவர்.
இறுதியில் அண்ணாவும், சம்பத்தும் சேர்ந்து ஒரு கூட்டறிக்கை விடுப்பது என்று முடிவாயிற்று. அந்த அறிக்கையில், செயற்குழுவில் தமக்கு எதிராக நடந்த வன்முறை பற்றி அண்ணா வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று சம்பத் உணர்த்தினார். கூட்டறிக்கை என்பதை விட அண்ணாவே அந்த அறிக்கையை விடுக்கலாம். தேவையானால் எனது நிலையை விளக்கிப் பின்னர் நான் ஒரு அறிக்கை வெளியிடுகிறேன் என்றார் சம்பத்.
அதற்கு ஒப்புக் கொண்ட அண்ணா அறிக்கையை எழுதினார். பத்திரிகை நிருபர்களுக்கு அந்த அறிக்கை தரப்பட்டது. அன்று இரவே நாகர்கோவில் பொதுக்கூட்டத்துக்குச் செல்ல வேண்டியிருந்ததால் அண்ணா விடைபெற்றார்.
அண்ணா வெளியிட்ட அறிக்கை வருமாறு:
“திராவிட முன்னேற்றக் கழகத்தில்குழப்ப நிலையும் பிளவுப் போக்கும் வேலூர் பொதுக்குழுவைத் தொடர்ந்து ஏற்பட்டு, தமிழக மக்களின் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டதை அனைவரும் அறிவர். கழகம் பிளவுபட வேண்டும் என்று மாற்றுக் கட்சியினர் விரும்புவதை கழகத் தோழர்கள் உணர்ந்து பொறுப்புணர்ச்சியுடன் நடந்து கொள்ள வேண்டியது அவர்தம் தலையாய கடமையாகும்.
கருத்து வேற்றுமைகள் எழுவது இயற்கை மட்டுமின்றி வரவேற்கத்தக்கதுமாகும். ஆனால் அவைகளை விவாதித்து முடிவு காணத் தக்க பொறுப்புணர்ச்சியுடன் நமது நடவடிக்கைகள் அமைதல் வேண்டும். பொதுக்குழு கூடும் முன்பே பலர் வன்முறையில் பேசியும், செயல்பட்டும், திட்டமிட்டும், நடந்து கொண்டதாகக் கேள்விப்பட்டு மெத்த வேதனைப்படுகிறேன்.
அத்தகைய தீய சக்திகளைக் கண்டிப்பது என் கடமை. தோழர் சம்பத், தனக்கு எதிராக இத்தகைய வன்முறை திரட்டப்பட்டதாக கூறியது கேட்டு நான் வேதனைப்படுவதுடன், எவர் இத்தகு தீய செயலில் ஈடுபட்டிருப்பினும் வன்மையாகக் கண்டிக்கிறேன். நம்முடைய நடவடிக்கைகள் எதிலும் இனி இத்தகைய முறை தலைதூக்க இடமளிக்கக் கூடாது என்று கழகத் தோழர்களைக் கேட்டுக் கொள்வதுடன், உறுதியான நடவடிக்கைகள் மூலம் இத்தகைய நிலைமை ஏற்படாதபடி தடுக்க உறுதி கொண்டுள்ளேன் என்பதையும் அறிவித்துக் கொள்கிறேன்.
கட்டுரைகள், அறிக்கைகள் மூலம் பேதமும் கசப்பும் ஏற்படுத்தத் தக்க விதமான போக்கில் இனி எவரும் நடந்து கொள்ளக் கூடாது என்று தெரிவித்துக் கொள்கிறேன். அத்தகைய முறைகளை மேற்கொள்வது கழகத்திற்கு ஊறு ஏற்படுத்தத்தக்க கசப்புணர்ச்சியை ஏற்படுத்தும் என்பதால் இதனைக் கூறுகிறேன்.
ஆங்காங்கு ஏற்படும் கருத்து வேற்றுமைகள், பிளவுக்கு வழியமைக்கும் அளவுக்குப் பேச்சுகள் நடைபெறுவது இனி தவிர்க்கப்பட்டு கழகத்தின் கண்ணியமும், கட்டுப்பாடும் காப்பாற்றப்படத்தக்க முறையில் என்னுடன் ஒத்துழைக்கும்படி அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு அண்ணா வெளியிட்ட நல்லிணக்க அறிக்கையைத் தொடர்ந்து சம்பத்தும் தனது நல்லுணர்வை வெளிப்படுத்தி ஓர் அறிக்கை வெளியிட்டார். அதில் என்ன கூறினார் தெரியுமா?
(தொடர்வோம்...)
