

தமிழகத்தில் புதிதாக அமைந்துள்ள தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு, கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடன்களைச் சில நிபந்தனைகளுடன் தள்ளுபடி செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆரம்பத்தில் ரூ.50,000 வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்குக் கடன்தொகை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விமர்சனங்கள் எழுந்த நிலையில், இந்த வரம்பு ரூ.75,000 ஆக உயர்த்தப்பட்டது.
அந்தத் தொகைக்கு மேல் கடன் வாங்கியவர்களுக்கு ரூ.30,000 தள்ளுபடி செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு சிறு, குறு விவசாயிகளுக்கு ஓரளவு நன்மை பயக்கும். எனினும், இத்தகைய கடன் தள்ளுபடித் திட்டங்கள் விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கும் எதிர்காலக் கடன்படுதல் (Indebtedness) பிரச்சினைகளுக்கும் நிரந்தரத் தீர்வாக அமையுமா?
கடன் தொகை அதிகரிக்கும்போது தள்ளுபடி விகிதத்தைக் குறைக்கும் ஒரு மாறுபட்ட அடுக்குமுறைப் பொருளாதாரக் கொள்கை இந்த அறிவிப்பில் பின்பற்றப்பட்டுள்ளது. பல ஆராய்ச்சி முடிவுகள் கூறுவதுபோல, ஒருமுறை செய்யப்படும் கடன் தள்ளுபடிகள் ஒட்டுமொத்த வேளாண் நெருக்கடிக்கு ஒருபோதும் நிரந்தரத் தீர்வாகாது என்றாலும், அடுக்குமுறை அளவைப் பயன்படுத்தி முதன்முதலாகக் கடன் அளவைத் தள்ளுபடி செய்வதைப் பாராட்டாமல் இருக்க முடியாது.