

திமுகவின் முக்கியத் தலைவர்களுள் ஒருவராக இருந்தவர் ஈவிகே சம்பத். திமுகவை வளர்த்தெடுப்பதில் அவரின் பங்கும் முக்கியமானது. இருந்தபோதும் கட்சியில் அவருக்கு ஏற்பட்ட சங்கடங்கள், ஆற்றாமைகள் இவற்றால் அவர் மனம் வருந்தினார். தன்னுடைய கருத்துகளை, எண்ணங்களை கட்சி தலைமையிடம் அவ்வப்போது எடுத்துக் கூறி வந்தார். இருந்தபோதும் அவருக்கு நியாயம் கிடைக்கவில்லை. ஒருகட்டத்தில் கட்சியில் இருந்து விலகும் முடிவை எடுத்தார். திமுகவில் இருந்து அவர் விலகிச் செல்வதற்கு எத்தனையோ சம்பவங்கள் அடுத்தடுத்து நடைபெற்றன. அதுகுறித்து சுருக்கமாகப் பார்ப்போம்...
சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுக வெற்றி
1959 ஏப்ரலில் சென்னை மாநகராட்சி மன்றத் தேர்தலில் திமுக போட்டியிட்டது. 100 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 37 இடங்களைக் கைப்பற்றியது. 90 இடங்களில் போட்டியிட்ட திமுக 45 இடங்களைக் கைப்பற்றியது. காங்கிரஸ் பெற்ற மொத்த வாக்குகள் 1,43,783. திமுக பெற்ற மொத்த வாக்குகள் 1,48,712. இந்தத் தேர்தலில் கம்யூனிஸ்ட், பிரஜா சோலிஸ்ட் மற்றும் சுயேச்சைகள் எல்லாம் சேர்ந்து 18 இடங்களில் வெற்றி பெற்றிருந்தனர்.
காங்கிரசுக்காக முதலமைச்சர் காமராஜர் பிரச்சாரம் செய்தார். சென்னை முழுவதும் சம்பத், கண்ணதாசன், சி.பி.சிற்றரசு, சத்தியவாணி முத்து, நடிகர் கே.ஆர்.ராமசாமி ஆகியோர் திமுகவுக்காகப் பிரச்சாரம் செய்தனர்.
தேர்தல் வெற்றி பற்றி திருவாரூர் பொதுக்கூட்டத்தில் பேசிய அண்ணா, “தி.மு.கழகம் அறுதி பெரும்பான்மையைப் பெறவில்லை. சுயேச்சைகளையும் உதிரிகளையும் பயன்படுத்தி காங்கிரஸ் மேயர் பதவியைப் பிடிக்கலாம் என்று கருதுவதாகத் தெரிகிறது. இந்த நிலையில் மற்றவர் தயவில் மாநகராட்சி மன்ற நிர்வாகத்தை ஏற்பதில் எங்களுக்கு ஆர்வமில்லை” என்று குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து ‘மெயில்’ பத்திரிகை தலையங்கத்தில் “தி.மு.க. பொறுப்பிலிருந்து தப்பித்து ஓடுகிறது” என்று எழுதி இருந்தது. மேயர் தேர்தல் நெருக்கத்தில் ஒரு தந்திரம் நடந்தது. 10, 18 காங்கிரஸ் கவுன்சிலர்களை பாண்டிச்சேரிக்கு கடத்திப் போய், அவர்களுக்கான எல்லாவிதக் கேளிக்கை வசதிகளையும் செய்து கொடுத்து மேயர் தேர்தலன்று காங்கிரஸை காலைவாரி விட்டுவிட மூளைச் சலவை செய்யப்பட்டது. இது மிக மிக ரகசியமாக நடந்தது.
மேயர் தேர்தலில் தி.மு.க. சார்பாக போட்டியிட பலரும் விரும்பினர். வி.முனுசாமி, என்.ஜீவரத்தினம், அ.பொ.அரசு போன்ற பலருக்கும் அந்த ஆசை இருந்தது. பின்னர் அவர்களுக்குள்ளேயே சமரசம் காணப்பட்டு அ.பொ.அரசு மேயராகவும், சிவசங்கரன் துணை மேயராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
பத்திரிகைகளில் இந்தச் செய்தியைப் படித்துவிட்டு அண்ணா அதிர்ச்சியுற்றார். கழகத்திற்கு எப்படி பெரும்பான்மை கிடைத்தது என்று மனம் குழம்பினார். ‘பாண்டிச்சேரி’ தந்திரத்தைச் சில நண்பர்கள் வெளியிட்டனர். அன்று மாலை அண்ணாவும் சம்பத்தும் அதுபற்றி விவாதித்தார்கள். “கார்ப்பரேஷன் தேர்தலுக்கே இப்படி குறுக்கு வழிகளில் பதவி தேடுவதானால் கழகத்தின் எதிர்காலம் என்னவாகும்? நமக்குள்ள ஜனநாயகப் பண்பை மக்கள் சந்தேகிப்பதாகாதா?” என்று சம்பத் கவலையோடு வினவினார். அண்ணா வருத்தத்தில் அன்றிரவு சாப்பிடவில்லை. அந்த அளவுக்கு மனம் சஞ்சலப்பட்டார்.
நடந்த சம்பவங்கள் அண்ணாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. வெற்றி பெற்ற மேயரின் சந்திப்பைத் தவிர்த்தார். சில நாட்கள் இடைவெளி விட்டு சென்னை மாவட்டச் செயலாளர் கோ.செங்குட்டுவன் பல பிரமுகர்களையும் அழைத்துக் கொண்டு அண்ணாவிடம் சென்று, வெற்றி விழாப் பொதுக்கூட்டத்திற்கு தேதி கேட்டார். அண்ணா எரிந்து விழுந்தார். “நீங்கள் செய்த காரியத்திற்கு விழா வேறு கொண்டாடுகிறீர்களா?” என்று கோபமாகப் பேசினார். நான்கைந்து நாட்களில் இயல்புநிலை மீண்டது. அண்ணாவைச் சந்தித்த கலைஞர், அவரிடம் நயமாகப் பேசி சமாதானப்படுத்தி விட்டார்.
அடுத்த வாரத்தில் கடற்கரையில் மேயருக்கு பாராட்டுக் கூட்டம் நடைபெற்றது. வெற்றி பெற்ற உறுப்பினர்கள் மேயர், துணை மேயருடன் மேடையில் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். நடுவே அண்ணா, அவருக்குப் பக்கத்தில் கலைஞர். அறிமுகம் முடிந்தது. அடுத்து பாராட்டுரை. கலைஞர் பேசும்போது இந்த ‘மகோன்னத’ வெற்றிக்கான காரணங்கள் குறித்து பேசினார். கலைஞரின் பேச்சு, கண்ணதாசன், டி.வி.நாராயணசாமி, சத்தியவாணி முத்து போன்றவர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. இக்கூட்டத்தில் சம்பத் பங்கேற்கவே இல்லை. இறுதியில் அண்ணா பேசினார். இது குறுக்கு வழியில் கிடைத்த வெற்றி என்பது அவர் மனதைக் குடைந்து கொண்டிருந்த வேதனையை மிக நாசூக்காக அண்ணா வெளிப்படுத்தினார்.
“நம்முடைய மூதாதையர்களான நீதிக்கட்சி பெரியவர்கள் மேயர் ஆசனத்தை அலங்கரித்திருக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கென்று ஊதியம் பெற்றதில்லை. மாநகராட்சிக் காரைக் கூட உபயோகப்படுத்தியதில்லை. சீமான்களாக இருந்தாலும் சீலத்தோடு விளங்கினார்கள். என்னுடைய தம்பிமார்கள் இப்போது அந்தப் பொறுப்புக்கு வந்திருக்கிறார்கள். நான் அவர்களுக்குச் சொல்வேன்; இது, தாத்தா போட்டுக் கொண்டிருந்த கோட்டு. உனக்கு கோட்டின் மீது ஆசை. ஆனால் உன் சைசுக்கு (அளவு) அது ஏற்றதல்ல. அதற்கான வளர்ச்சியை நீ எட்ட வேண்டுமென்று விரும்புகிறவன் நான். எப்படியோ கோட்டு அணிந்தாகி விட்டது. இனி நடப்பவையாவது நல்லவையாக இருக்கட்டும்” என்று பேசினார்.
அப்போது கலைஞர் ஒரு துண்டுச் சீட்டை அண்ணாவிடம் நீட்டினார். ‘வெற்றிக்காக உழைத்தவர் பட்டியல்’ என்று ஒன்றை அண்ணா படித்தார். அந்தப் பட்டியலில் முதல் பெயர் கலைஞர் மற்றும் பலரின் பெயர்கள் இருந்தன. கண்ணதாசன் போன்றவர்களின் பெயர்கள் அதில் இடம்பெறவில்லை. திடீரென்று மாவட்டச் செயலாளர் ஒரு மோதிரத்தை அண்ணாவிடம் கொடுத்து காதில் ஏதோ சொன்னார். உடனே அண்ணா வருத்தம் மாறி வர்ணனைகளோடு பேச ஆரம்பித்தார்.
“நான் என் மனைவிக்குக் கூட நகை வாங்க கடைக்குச் சென்றதில்லை. இன்று மதியம் வேகாத வெய்யிலில் அலைந்து கடை கடையாகத் தேடி வாங்கி வந்தேன் ஒரு கணையாழி! அந்தக் கணையாழியை இந்த வெற்றியை ஈட்டித் தந்த நம் கருணாநிதிக்கு அணிவிக்கிறேன்” என்று குறிப்பிட்டார். இதில் சிலருக்கு மகிழ்ச்சி; சிலருக்கு வருத்தம். அதிலும் கண்ணதாசன் மிகவும் மனமுடைந்து போனார்.
மறுநாள் காலை கண்ணதாசன் சில நண்பர்களோடு ஈவிகே சம்பத்தை அவரது இல்லத்தில் சந்தித்தார். ‘அண்ணா செய்தது சரியா?’ என்று கேட்டார். அதற்கு சம்பத், “அந்தக் கூட்டத்தையே தவிர்த்து விடுமாறு அண்ணாவிடம் சொல்லியிருந்தேன். அவரும் சரியென்றார். பிறகு எப்படி கூட்டத்துக்கு ஒப்புக் கொண்டார் என்பது விளங்கவில்லை” என்று சொன்னார். “அது இல்லீங்க... மோதிரம் போட்டது ‘சரியா’ என்றுதான் கேட்கிறேன்’’ என்று தொடர்ந்தார் கண்ணதாசன். ‘‘அதை நீங்கள் அவரிடமே கேட்டுவிடலாமே! என்னதான் சொல்கிறார் என்று தெரிந்து கொள்ளுங்களேன்’’ என்றார் சம்பத்.
கண்ணதாசன் அண்ணாவை காஞ்சிபுரம் சென்று சந்தித்தார். அழாத குறையாக ‘இது நியாயமா அண்ணா?’ என்று கேட்டார். ‘என்ன?’ என்றார் அண்ணா. ‘‘மோதிரம்...’’ என்றார் கண்ணதாசன். ‘‘அட நீயும் மூர் மார்க்கெட்டுக்குப் போய் ஒரு மோதிரம் வாங்கிக் கொடு. அடுத்த கூட்டத்தில் போட்டு விடுகிறேன்’’ என்றார் அண்ணா. கனத்த இதயத்தோடு கண்ணதாசன் சென்னை திரும்பினார். இந்த மோதிரம் விஷயமாக பின்னாளில் கண்ணதாசன் தனது ‘வனவாசம்’ தொடர் கட்டுரையில் பதிவும் செய்துள்ளார்.
புதுக்கோட்டை பொதுக்குழுக் கூட்டம்
திமுக தலைமைச் செயற்குழுக் கூட்டம் 6.2.1959 அன்று புதுக்கோட்டை ‘ரோஸ் லேண்ட்’ பங்களாவில் நடைபெற்றது. அண்ணா, சம்பத் உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் பங்கேற்றனர்.
கூட்டத் தொடக்கத்தில் தேர்தல் முடிவுகள் குறித்தும் அரசியல் மாறுதல்கள் பற்றியும் கலந்துரையாடல் நடைபெற்றது. சட்டத் திருத்தம், ஆந்திரம், கேரளம், கர்நாடக மாநிலங்களில் திமுக வளர்ச்சி பற்றியும் விவாதிக்கப்பட்டது. பொதுக் குழுவுக்கென உறுப்பினர்கள் அனுப்பியிருந்த ஆலோசனைகள், தீர்மானங்கள் ஆகியன ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. செயற்குழுவில் சம்பத் பேசியதாவது:
திராவிடர் கழகத்துக்கும், தி.மு.கழகத்துக்கும் கொள்கை வேறுபாடுகள் இல்லை என்றாலும், நடைமுறையில் செயல்முறையில் பெரும் வேறுபாடுகள் இருந்தாக வேண்டும். அங்கே அது பெரியாரின் சர்வாதிகார அமைப்பு. இங்கே இது (திமுக) கூட்டுத் தலைமையுடன் ஆன ஜனநாயக அமைப்பு.
நாம் அறப்போர்க் களங்களைச் சந்தித்து நம் தோழர்கள் உட்பட வழக்குகளையும் சிறைத் தியாகங்களையும் சந்தித்திருக்கிறோம். தேர்தலில் ஈடுபட்டதன் மூலம் சில பல புதிய பொறுப்புகளும், நம் மீதும் நமது இயக்கத்தின் மீதும் சுமத்தப்பட்டுள்ளன. இதற்கெல்லாம் ஈடு கொடுக்கத்தக்க வகையில் கட்சித் தலைமையின் செயல் திறன் விளங்குகிறதா என்றால் ஏமாற்றமாக இருக்கிறது. எதிலும் கலந்துபேசி விவாதித்து முடிவெடுக்கின்ற ஜனநாயக வாய்ப்புகள் அடைபட்டு, மேல் மட்டத்தில் பலர் கட்சி உப தொழிலாகவும் ஓய்வு மடமாகவும் கருதுவதும், எல்லாம் அண்ணா பார்த்துக் கொள்வார் என்று பொறுப்புகளை தட்டிக் கழிப்பதும் கட்சியின் ஆரோக்கியத்திற்கு ஏற்றதல்ல என்று கருதுகிறேன்.
நாம் ஒரு விடுதலை இயக்கம் என்பதை மறந்துவிடக் கூடாது. தீவிரமான நடவடிக்கைகளைக் கூட வெறும் சினிமா, நாடகக் காட்சிகளாக்கித் திருப்தி கொண்டு இயக்கத்தின் போர்க்குணத்தை மழுங்கடிப்பது, நாம் தமிழ்ச் சமுதாயத்திற்கு அறிந்தோ, அறியாமலோ தீங்கிழைக்கிறோம் என்றே கருத வேண்டியுள்ளது.
ஆற்றல் மிக்கவர்களுக்குப் பொறுப்புகளை பகிர்ந்து அளித்து கட்சி நடவடிக்கைகளில் போதிய தீவிரம் காண வேண்டும் என்று வற்புறுத்த விரும்புகிறேன். இந்தச் சிந்தனை ஓட்டத்தில் தூய மனதோடு நமது விவாதங்கள் நடைபெறுமானால் இந்தக் காலகட்டத்தில் நாம் ஆற்றித் தீர வேண்டிய கடமைகளுக்கு நம்மை ஒப்படைத்துக் கொண்டவர்களாவோம். இல்லையேல் கூடிக் கலைந்த கதையாகத்தான் முடியும்.
இவ்வாறு சம்பத் பேசினார்.
சம்பத்தின் துணிவான இக்கருத்துகள் செயற்குழுவில் ஒருவிதப் பரபரப்பைத் தோற்றுவித்தன. கருத்துகளை மறுப்பாரில்லை. ஆனால் இதையும் கூட அண்ணாவிடம் சம்பத் பேசி விவாதித்திருக்கலாமே என்பதுதான் பலரின் கருத்தாக இருந்தது.
சம்பத்தின் கருத்து முழக்கம் மறுநாள் பொதுக்குழுவிலும் தொடர்ந்தது. அவருடைய பேச்சு வருமாறு:
நாம் திராவிட நாடு கேட்கிறோம். ஆனால் தமிழகம் தவிர்த்த மற்ற தென் மாநிலங்களில் இதுபற்றி மக்களுக்குத் தெரியவில்லை. ‘எங்களுக்காக நாடு கேட்க நீ யார்?’ என்று ஆந்திரா, கர்நாடகா, கேரளா மாநிலங்களில் கருதுகின்றனர். நாம் அங்கெல்லாம் கழகத்தைப் பரவச் செய்து திராவிட நாடு கொள்கைகளுக்கு அங்கேயும் தெளிவு ஏற்படுத்தி ஆதரவு திரட்ட வேண்டுமென்பதில் நம் கட்சித் தலைமைக்கு இன்னமும் ஆர்வம் வாய்க்கப் பெறவில்லை. இதற்கான முயற்சிகளை முந்தைய பொதுச் செயலாளர் அண்ணா அவர்கள் மேற்கொள்ளாததற்கு அப்போதைய வளர்ச்சி பெறாத நிலை ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.
ஆனால் இன்று நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் நாம் திராவிட நாட்டுப் பிரிவினை பற்றி ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிற இந்த நிலையிலும், நமது லட்சியக் குரல் மற்ற மூன்று மாநிலங்களிலே கேட்கவில்லையென்பது தலைமையின் அலட்சியத்தையே வெளிப்படுத்துகிறது. அண்ணா அவர்களும் இதில் ஆர்வம் செலுத்தாததற்கு எது தடையாக இருக்கிறதென்று அறிய விரும்புகிறேன்.
இவ்வாறு கட்சியின் அடிப்படை லட்சியத்தில் காட்ட வேண்டிய அக்கறையை ஈவிகே சம்பத் எடுத்துரைத்தார்.
பொதுக்குழுவில் பரபரப்புடன் கூடிய ஒரு மவுன நிலை காணப்பட்டது. பொதுச் செயலாளர் ஏதாவது விளக்கம் சொல்வார் என்று நெடுஞ்செழியனின் முகத்தை நோக்கினார் அண்ணா. அவர் அண்ணாவையே உற்று நோக்கியபடி இருந்தார்.
‘‘தமிழகத்திலிருந்து நாம் கொள்கைகளையும் திட்டங்களையும் தரலாமேயல்லாமல், ஆந்திரா, கேரள, கன்னட மக்களுக்காகவே ஏற்படக் கூடிய அரசியல் வியப்பில்தான் அங்கு கழகம் வளருவது நியாயமானதாகவும், நிலையானதாகவும் இருக்கும்’’ என்று அண்ணா பதில் சொல்ல முற்பட்டார்.
சம்பத் குறுக்கிட்டு, ‘‘தானாகவே எதுவும் நடப்பதில்லை. அந்த மக்கள் தனி நாடு கோரிக்கையை விரும்புகிற எண்ணத்தை ஏற்படுத்த, அங்கேயும் கிளைகள் தோன்ற வேண்டும். பிரச்சாரம் நடைபெற வேண்டும். அவர்களும் நம்மோடு சேர்ந்து குரல் கொடுத்தால்தான் நாம் நம்மைத் திராவிடத் தலைவர்கள் என்று சொல்வது பொருத்தம் உள்ளதாக இருக்கும். கழகத் தலைமை சில ஆக்கப்பூர்வமான வழிகளில் இறங்க வேண்டும் என்பதைத்தான் சொல்கிறேன். இதில் தொலைநோக்குப் பார்வையும் செயற்பாடும் இல்லையேல், நல்ல லட்சியம் கூட நமது அலட்சியத்தால் செத்துப்போகும்’’ என்று சம்பத் குற்றச்சாட்டாகவே தமது கருத்தை எடுத்து வைத்தார்.
அதற்கு அண்ணா, ‘‘சம்பத் சொல்வதும் சரிதான். 1962 பொதுத் தேர்தலுக்குப் பிறகு அந்த மாநிலங்களில் ஏற்படுகிற அரசியல் மாற்றங்களைக் கவனித்து அதற்கேற்ப நமது பணிகளை அங்கேயும் அமைத்துக் கொள்ள முடியும்’’ என்று குறிப்பிட்டார்.
புதுக்கோட்டைச் செயற்குழுக் கூட்டத்திலும் சம்பத் புதிய சிந்தனையைத் தோற்றுவித்தார். அதற்கான விவாதங்கள் பகிரங்கமாக நடைபெறவில்லை என்றாலும் தலைவர்கள் தமது தனித் தனிச் சந்திப்புகளில் சம்பத்தின் கருத்துகள் பற்றிக் கலந்து பேசினார்கள்.
அண்ணா தமது இயல்புக்கேற்ப எதையும் சாதாரணமாகவே கருதிடும் மிதவாதியாகவும், அனைவரையும் ஒன்றுபடுத்துவதில் மட்டும் அக்கறை உள்ளவராகவும், பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க விரும்பாத நிலையிலும் காணப்பட்டார். இச் செயற்குழுவில் அண்ணாவுக்கு எதிராக சம்பத் முதல் கணையை எடுத்து வீசியிருக்கிறார் என்று மற்றவர்கள் பேசினாலும், அண்ணா சம்பத்தை எப்போதும் தம் அருகிலேயே பிடித்து வைத்துக் கொள்வதில் ஆர்வம் காட்டினார்.
கட்சியின் நலனுக்காக சம்பத் பொதுக்குழுவில் எடுத்துக் கூறிய நல்ல கருத்தை சிலர் அண்ணாவுக்கு எதிராகத் திருப்பி விட முயன்றனர். அண்ணா, சம்பத் உறவில் களங்கம் கற்பித்து இருவருக்குமிடையே இடைவெளியே ஏற்படுத்துவதில் சுறுசுறுப்புக் காட்டினர். ஏற்கெனவே அண்ணாவுக்கும் என்எஸ்கேவுக்கும் இடையே முக்கியத் தலைவர்கள் சிலர் இடைவெளியை ஏற்படுத்தியதும் இங்கே நினைவூட்டத்தக்கது.
(தொடர்வோம்...)