

பசி, பட்டினி - இந்த இரண்டு தமிழ்ச் சொற்களுக்கும் வேறுபாடு உண்டு. பசி ஒவ்வொருவரும் உணர்வது. ‘பசித்துப் புசி’ என்பது தமிழ் மருத்துவப் பழமொழி. பட்டினி அப்படி அல்ல. வறுமையால் உருவாவது.
அல்லது தன்னைத் தானே பல காரணங்களுக்காக வருத்திக்கொள்வது. பட்டினி ஒரு சமூக அநீதி. வீடு வீடாக இரவில் யாசகம் கேட்டு வருவோர் இன்று அநேகம் பேர் இல்லை. அதற்குக் கடந்த 50-60 ஆண்டுகளாக அரசுப் பொது விநியோகத் திட்டம், இலவச அரிசி, பாரபட்சம் இல்லாத கட்டாயக் கல்வி உள்ளிட்ட பல காரணங்கள் உண்டு.
ஆனாலும் நகர்ப்புறக் கோயில், சாலை முதலான பொது இடங்களிலும் சாலை ஓரங்களிலும் யாசகம் பெறத் தனித்தும் குழந்தைகளுடனும் சிலர் நிற்பது இன்னமும் வருந்தத்தக்க ஒன்று.
யாசகம் கேட்டு நிற்போருக்கான உணவும் உறைவிடமும் வழங்கும் பல அரசுத் திட்டங்களும் (SMILE/ Garima Greh), பல சமூக அமைப்புகளும் இருந்தும் இன்னமும் இந்த எண்ணிக்கை குறையவில்லை.
பசித்திருத்தலை ஓர் ஆரோக்கியக் குறியீடாகப் பார்க்கும் காலத்தை நோக்கி நாம் நகர்ந்திருக்கிறோம். மேற்கத்திய உணவு ஆய்வு உலகம், ஒரு நாளில் 12-14 மணி நேரம் பசியுடன் இருப்பதை அல்லது வயிற்றில் உணவு இல்லாமல் இருப்பதை உடல் தன்னைத்தானே சீராக்கிக்கொள்ளும் நேரமாகப் புரிந்துகொள்ளத் தொடங்கியுள்ளது.
இரவாடிகளாகும் மனிதர்கள்
“அந்தக் காலத்தில் 6 மணிக்கு மேல் தரப்படும் உணவைச் சாப்பிட்டதில்லை” எனப் பல பெரியவர்கள் பேசுவதற்கு முதல் காரணம், அன்றைக்கு மின்சாரம் இல்லை என்பதுதான். விளக்கு வைத்த பின் சமைக்கச் செல்வது அன்றைக்குச் சாத்தியமற்ற செயலாக இருந்தது.
அதனாலேயே ஒட்டுமொத்த உலகமும் சூரியன் உதித்த பின் காலை உணவு, மறைவதற்கு முன் இரவு உணவு என்கிற கட்டமைப்பில் பல ஆயிரம் ஆண்டுகள் உணவுப் பண்பாட்டைக் கொண்டிருந்தது. பல உயிரினங்களும்கூட அப்படித்தான்.
இரவாடிகள் என்று அழைக்கப்படும் ஆந்தை, கழுதைப்புலிகள் இரவில் வேட்டையாடி உண்ணும் அல்லது கிடைக்கும் உணவை உட்கொள்ளும்.