
கால்நடை மருத்துவ அறிவியலில் முதுகலை, முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு ஆய்வு வழிகாட்டியாகவும் கால்நடை மருந்தியல் நிபுணராகவும் இயங்கிவருபவர் பேராசிரியர் டாக்டர் புண்ணியமூர்த்தி நடேசன். கால்நடை நோய்களுக்கு - குறிப்பாக மடி நோய்க்குத் தனித்துவமான மரபுவழி சிகிச்சை முறையை உருவாக்கி, வேதிப்பொருள்கள் இன்றி நோய் மேலாண்மையைச் சாத்தியமாக்கியிருக்கிறார். அவருக்கு 2026ஆம் ஆண்டுக்கான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கியுள்ளது. அவருடன் உரையாடியதிலிருந்து ஒரு பகுதி:
கால்நடை மருத்துவ அறிவியல் படித்த மருத்துவப் பேராசிரியரான நீங்கள் சித்த மருத்துவத்தின்பால் எப்போது, எப்படி ஈர்க்கப்பட்டீர்கள்?
நம்முடைய தமிழ் மரபிலேயே எல்லா வீடுகளிலும் கைமருத்துவம் இருக்கிறது. நோயற்ற வாழ்வு வாழ்வதற்கு அந்த மரபைப் பின்பற்றி, என்னுடைய அம்மாச்சி சந்திரகாசம்மாள் அனைவருக்கும் அதைப் பயிற்றுவித்தவர். வீட்டில் உள்ளவர்களின் சின்ன சின்ன உடல் உபாதைகளுக்கு அவர் கைமருத்துவம் செய்து குணப்படுத்திவிடுவார். வீட்டில் நிறையக் கால்நடைகள் இருந்தன. வீட்டைச் சுற்றி அவ்வளவு அரிய மூலிகைகள் முளைத்துக் கிடக்கும்.
மூலிகைகளைப் பற்றிச் சொல்லி, அவற்றின் பலனையும் அவற்றை எப்படிப் பயன்படுத்துவது என்பதையும் சொல்லிச் சொல்லியே அவர் சிகிச்சை கொடுப்பார். இன்று கறவை மாடுகளுக்கு வரும் ‘மடி நோய்’க்குக் கண்கண்ட தீர்வாக, சோற்றுக் கற்றாழை, சுண்ணாம்பு, மஞ்சள்பொடிக் கலவை இருப்பதாகப் பலன் பெற்ற மக்கள் கூறுகிறார்கள். இந்தக் கலவையை நான் கண்டறிந்தது என்னுடைய பாட்டி தனக்குச் செய்துகொண்ட ஒரு சிகிச்சையின் தாக்கத்திலிருந்துதான்.