

கடந்த டிசம்பர் 15இல் மக்களவையில் ‘வளர்ந்த இந்தியாவுக்கான கல்வி அதிகார அமைப்பு 2025’ (Vikshit Bharat Shiksha Adhisthan - VBSA) மசோதா தாக்கல் செய்யப்பட்டது. விவாதங்கள், விமர்சனங்களைத் தொடர்ந்து நாடாளுமன்றக் கூட்டுக் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட இம்மசோதா, மழைக்காலக் கூட்டத் தொடரில் மீண்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இதன் சாதக பாதகங்களைப் பற்றிப் பார்க்கலாம்.
குழுவின் பணிகள்
புதிய கல்விக் கொள்கையின் அடிப்படையில், பல்கலைக்கழக மானியக் குழு, அகில இந்தியத் தொழில்நுட்பக் கழகம், தேசிய ஆசிரியர் வாரியம் ஆகியவற்றைக் கலைத்துவிட்டு, அந்த இடத்தில் நிறுவப்பட இருக்கும் புதிய அமைப்பு இது.
ஒன்றுக்கும் மேற்பட்ட நெறிமுறைகளில் சிக்கிக்கொள்வதைத் தவிர்த்தல், அதிகார வர்க்கக் கட்டுப்பாடுகளைக் குறைத்தல், ஒன்றுக்கும் மேற்பட்ட நிறுவன அமைப்பு முறைகளால் ஏற்படும் சுமைகளைக் குறைத்தல், தன்னாட்சியுடன் கூடிய தர மதிப்பீட்டை நோக்கி நகர்தல் ஆகியவை இந்த அமைப்பு உருவாக்கத்துக்கான நோக்கம் எனப்படுகிறது.
இந்த அமைப்பின் தலைவராக பிரதமர் இருப்பார், 12 உறுப்பினர்கள். 10 பேர் மத்திய அரசால் நியமிக்கப்படுவார்கள். உயர் கல்விக்கான ஒட்டுமொத்தப் பணிகளை ஒருங்கிணைத்தல், தேசிய அளவிலான கொள்கைகளை உருவாக்குதல், உயர் கல்விக்கான நெறிமுறைகளை வகுத்தல் இதன் அடிப்படைப் பணிகள்.
இதன் கீழ் உயர் கல்வி நிர்வாக நெறிமுறைகள், தர நிர்ணயம், தர மதிப்பீடு ஆகிய பணிகளை நிர்வகிக்க மூன்று குழுக்கள் (council) அமைக்கப்படும். இதை மேற்பார்வை செய்தல், மத்திய மாநில அரசுகளுக்கு ஆலோசனை வழங்குதல், உயர் கல்வியின் மாண்பைக் கூட்டுதல் ஆகியவையும் இந்தக் குழுவின் பணிகள்.
நெறிமுறைகளுக்கான குழு, உயர் கல்வி அங்கீகாரம், ஆளுகை, பட்டம் வழங்கப் பரிந்துரை, நிதி - தண்டனைகளை முடிவுசெய்யும். தரத்தைத் தீர்மானிக்கும் குழு, கல்வித்தரம், கற்றல் விளைவுகள் உள்ளிட்ட தரத்தைத் தீர்மானிக்கும். தர மதிப்பீட்டுக் (Accreditation) குழு தரத்தை உத்தரவாதம் செய்யும். தர மதிப்பீட்டுப் பணிகளைக் கண்காணிக்கும்.
எழுந்திருக்கும் கேள்விகள்
இம்மசோதா சட்டமாக்கப்பட்டால், இந்திய உயர் கல்வியின் நிர்வாக முறை முற்றிலும் மறுகட்டமைப்பு செய்யப்படும். பிரதமர் அலுவலகமே நேரடியாக மத்திய, மாநில அரசுகளின் உயர் கல்வி நிறுவனங்களை நிர்வகிக்கும்.