

படம் வரைந்து பாகங்களைக் குறிப்பது, கணப்பொழுதில் கட்டுரைகளைத் தயார் செய்து தருவது, கேட்கும் கேள்விகளுக்கு விடைகளை அள்ளித் தருவது, வார்த்தை ஜாலங்களை வண்ணப் படக்கதைகளாக மாற்றுவது என எல்லாவற்றையும் கணப்பொழுதிலேயே கற்றுத் தெளிய செயற்கை நுண்ணறிவு (ஏஐ) என்னும் புதிய ஆசிரியர் கிடைத்திருப்பது மாணவர்களுக்குப் பெரும் வரம்தான்.
அனைத்தையும் அறிந்த ஆசிரியராக ஏஐ அவதாரம் எடுத்துநிற்கும் நிலையில், ‘இனி ஆசிரியரின் பங்கு அவ்வளவுதான்’ என்றுகூடச் சிலர் பேசத் துணிந்துவிட்டார்கள். வகுப்பறையில் அமர்ந்துள்ள மாணவர்கள் கவலையின்றியும், கற்றல் செயல்பாடுகளில் ஈடுபடாமலும், அருகில் இருக்கும் சக மாணவர்களிடம் அரட்டை அடித்துக்கொண்டும் இருக்கிறார்கள்.
வகுப்புக்கு வெளியே இருக்கும் மாணவர்களும், ‘ஏஐ துணையுடன் பாடம் படித்துவிடலாம்’ என்று நினைக்கத் தொடங்கிவிட்டார்கள். வகுப்புகளைப் பற்றிக் கவலைப்படுவதில்லை. ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் போன்ற புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களில்கூட வகுப்பறை வருகைப்
பதிவு குறைந்துள்ளது. இதைப் பார்க்கும்போது, ஆசிரியரின் பங்கு உண்மையில் அர்த்தமிழந்து வருகிறதோ என்கிற எண்ணம் மனதில் தீவிரமாக எழுகிறது.
ஆசிரியருக்கு மாற்றா?
ஆசிரியரின் பணியை முதல்நிலைப் பணி, முதன்மைப் பணி என இரண்டு வகைகளாகப் பிரித்துப் பார்த்தால், முதல்நிலைப் பணிகளுக்குத் துணை நிற்கவே செயற்கை நுண்ணறிவு இன்று பயன்படுகிறது என்பதை உணர முடியும்.
தகவல்களைத் தருதல், விளக்கிக் கூறுதல், தகவல்களின் பரிணாமத்தைப் புரியவைத்தல், தேர்வுக்குத் தயார்படுத்துதல் போன்றவை முதல்நிலைப் பணிகள். கற்றல்-கற்பித்தலுக்குத் தேவையான உயர்தரமான படங்களை உருவாக்குதல், சிறந்த முப்பரிமாண (3D) சித்திரங்களை உருவாக்கிக் கற்றலைச் செழுமைப்படுத்துதல் போன்றவற்றுக்கு முன்பு பல மணி நேரத் தயாரிப்பு தேவைப்பட்டது.
இன்று சில நிமிடங்களிலேயே அந்தப் பணிகள் நிறைவடைகின்றன. சில வகையான கற்பித்தல் உதவிப் பொருள்களை உருவாக்குவது முன்பு சாத்தியமற்றதாக இருந்தது. அவற்றையும் செயற்கை நுண்ணறிவு சாத்திய மாக்கியுள்ளது. கற்றல்-கற்பித்தல் பணிகளைப் புதிய பரிணாமத்துடன் வடிவமைத்துக்கொண்டு ஆசிரியர் வகுப்பறைக்குச் செல்ல, ஏஐ மிகச் சிறந்த துணையாக விளங்குகிறது.