

ஓட்டுக்குப் பணம் - தமிழ்நாட்டு அரசியலைக் கவ்வியுள்ள மிகப் பெரும் ஆபத்து. ஜனநாயகத்தின் உன்னதம் வாக்குரிமை. விலைமதிப்புக்கு அப்பாற்பட்ட வாக்குகளை விலைக்கு வாங்குவதிலும் விற்பதிலும் பலர் காட்டிய முனைப்பு - இந்தச் சட்டமன்றத் தேர்தலில் மிகுந்த அதிர்ச்சி தந்த விஷயம்.
‘எனது வாக்கு விற்பனைக்கு அல்ல’, ‘வாக்கை விற்பது தன்னை விற்பதற்குச் சமம்’ என்று விதவிதமான வாசகங்களை அச்சிட்டு, தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் எனப் பலரும் செயலில் இறங்கினர். எனினும், எந்தப் பிரச்சாரமும் முழுமையாகப் பலனளிக்கவில்லை என்பதைக் கள ஆய்வுகள் பதிவுசெய்கின்றன.
மாறிப்போன காட்சிகள்
ஓர் எடுத்துக்காட்டு, 300 குடும்பங்கள் உள்ள நகர்ப்புற நடுத்தர மக்கள் வசித்துவரும் ஒரு குடியிருப்பில், எட்டுக் குடும்பங்கள் மட்டுமே பணத்தைப் பெற்றுக்கொள்ள மறுத்திருக்கின்றன. அதாவது, இரண்டு விழுக்காடு குடும்பங்கள் மட்டுமே பணம் வேண்டாம் என்று நிராகரித்துள்ளன.
இது ஒரு நம்பகமான தரவு மூலம் சேகரிக்கப்பட்ட தகவல். இதர இடங்களில் இது போன்ற தரவுகள் கிடைப்பது அரிது. ஏனெனில், ‘அந்த இரண்டு விழுக்காடு குடும்பங்களும் எங்கள் பகுதியில் இல்லை; அனைவருமே பணத்தைப் பெற்றுக்கொண்டார்கள்’ என்று சம்பந்தப்பட்ட கட்சியினர் ஒரே வார்த்தையில் முடித்துவிடுவார்கள்.
அந்த இரண்டு விழுக்காடு குடும்பங்களின் பணத்தையும் இவர்களே எடுத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம். இதே பகுதியில் கடந்த தேர்தலில் ‘பணம் வேண்டாம்’ என்று கூறிய குடும்பங்களின் எண்ணிக்கை 22. ரொக்கத்தின் அளவு மூன்று மடங்கு அதிகரித்த சூழ்நிலையில், அதை வாங்க மறுத்தோரின் எண்ணிக்கை இந்த முறை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது.
அதாவது, எட்டுக் குடும்பங்கள் மட்டுமே பணம் வேண்டாம் என்று கூறியுள்ளன. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள், சுயதொழில் புரிவோர், தொழிலதிபர்கள், ஒப்பந்தக்காரர்கள், கட்சிகளின் தீவிர விசுவாசிகள் என அனைத்துத் தரப்பினரும் ஓட்டுக்குப் பணம் வாங்கியிருப்பதாகத் தெரியவந்திருக்கிறது.
முன்பு ஓட்டுக்குப் பணம் குறைவாக வழங்கப்பட்டபோது, தீவிரமான கட்சி விசுவாசிகள் சிலர் வாங்க மறுத்துள்ளனர். தற்போது, தொகை மூன்று மடங்கு அதிகரித்த நிலையில், “நான் இத்தனை ஆண்டுகளாகக் கட்சியில் இருக்கிறேன்; எனக்கு ஏன் முதலில் கொடுக்கவில்லை?” என்கிறரீதியில் வாக்குவாதம் நடைபெற்றிருக்கிறது. பணம் கொடுப்பவர்கள், “இந்த வீட்டில் இத்தனை வாக்குகள்.