

கடந்த 20 ஆண்டுகளில் இந்தியாவின் தாய்–சேய் நலனில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவ மனைப் பிரசவங்கள், கர்ப்பகாலப் பராமரிப்பு, தடுப்பூசி சேவைகள் அதிகரித்துள்ளதுடன், தாய் - சேய் இறப்பு விகிதங்களும் குறைந்துள்ளன.
எனினும் சமீபத்திய தேசியக் குடும்ப நல ஆய்வறிக்கை (NFHS-6), அறுவைசிகிச்சைப் பிரசவங்கள் (சிசேரியன்) அதிகரிப்பதை ஒரு புதிய சவாலாகச் சுட்டிக்காட்டுகிறது.
அதிகரிக்கும் போக்கு
இந்தியாவில் 1992–93இல் 3 சதவீதமாக இருந்த அறுவைசிகிச்சைப் பிரசவ விகிதம், உலகச் சுகாதார நிறுவனம் (WHO) பரிந்துரைக்கும் 10-15 சதவீத வரம்பை மீறி, 2023–24இல் 27.2 சதவீதத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, நகர்ப்புறங்களில் (40.5%) இவ்விகிதமானது, தேசிய - கிராமப்புற (22.8%) சராசரியைவிட அதிகமாக உள்ளது.
மேலும், இந்தியாவின் மொத்தப் பிரசவங்களில் ஏறத்தாழ 60% அரசு மருத்துவமனைகளில் நடைபெறுகின்றன. எனினும், தேசியக் குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, அரசு மருத்துவமனைகளில் அறுவைசிகிச்சைப் பிரசவ விகிதம் 16.9 சதவீதமாக இருக்கும் நிலையில், தனியார் மருத்துவமனைகளில் 54.1 சதவீதமாக உள்ளது.
பொதுவாக, முதிர்ந்த வயதில் கர்ப்பம் தரித்தல், கருவுறுதல் சிகிச்சை (IVF) மூலம் கர்ப்பம் அடைதல், கருப்பை நார்த்திசுக் கட்டிகள் (Fibroids), தீவிர ரத்தசோகை போன்றவற்றால் அறுவைசிகிச்சைப் பிரசவம் தவிர்க்க முடியாததாகிறது.
கூடவே, மருத்துவ வசதிகளின் விரிவாக்கத்தால், கர்ப்ப காலச் சிக்கல்கள் குறைந்து தாய்–சேய் நலனில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ள நிலையிலும், அறுவைசிகிச்சைப் பிரசவ விகிதம் தொடர்ந்து உயர்வதாக சென்னை ஐ.ஐ.டி. மேற்கொண்ட ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இது, மருத்துவத் தேவையைத் தாண்டிய காரணிகளின் தாக்கத்தை வெளிப்படுத்துகிறது.
தேவையற்ற அறுவைசிகிச்சைகள்
மருத்துவத் தேவையைத் தாண்டி, பிரசவ நேரத்தை முன்கூட்டியே திட்டமிடும் வசதி, பிரசவ வலி குறித்த அச்சம், குடும்பங்களின் முகூர்த்த நம்பிக்கைகள், மருத்துவக் காப்பீட்டுத் திட்டங்களின் நிதி ஊக்கங்கள், தனியார் மருத்துவமனைகளின் செயல்முறை சார்ந்த காரணிகள் ஆகியவை அறுவைசிகிச்சைப் பிரசவங்களின் அதிகரிப்புடன் தொடர்புடையதாக ஆய்வுகள் கூறுகின்றன.