

இலக்கிய உலகில் மிக உயர்ந்த விருதுகளில் ஒன்றாகக் கருதப்படும் புக்கர் பரிசு மூலம், கடந்த 55 ஆண்டுகளுக்கும் மேலாக உலகத்தரம் வாய்ந்த மிகச் சிறந்த நாவல்களும் படைப்பாளர்களும் இனம்காணப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில், 2026ஆம் ஆண்டுக்கான புக்கர் பரிசுப் போட்டிக்குச் சமர்ப்பிக்கப்பட்ட 163 நாவல்களில் இருந்து 13 நாவல்கள் கொண்ட நீண்ட பட்டியலை (Longlist) கடந்த ஜூலை மாதத்தில் நடுவர் குழுவினர் வெளியிட்டனர்.
இவற்றிலிருந்து 6 நாவல்கள் கொண்ட இறுதிப் பட்டியல் (Shortlist) இம்மாதம் 22ஆம் தேதி வெளியாக இருக்கிறது. நிறைவாக, பரிசை வெல்லும் நாவல் எது என்பது நவம்பர் 9 அன்று தெரியவரும்.
இந்நிலையில், 163 நாவல்களிலிருந்து நீண்ட பட்டியலுக்குரிய படைப்புகளைத் தேர்வு செய்தது குறித்து நடுவர் குழுவினர் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர். குறிப்பாக, நீண்ட பட்டியலுக்குரிய நாவல்களைத் தேர்வு செய்யும்போது அப்படைப்புகளில் என்னென்ன அம்சங்களையெல்லாம் தேடினோம் என்பது பற்றி அவர்கள் கூறிய தகவல்கள் சுவாரசியமாக இருக்கின்றன.