

ராஜஸ்தான் மாநிலத்தின் ஆர்வாரி ஆற்றின் தலைப்பகுதியில் அமைந்திருந்த மலைப் பழங்குடிகள் குடியிருப்பின் தலைவர் எங்களிடம் கேட்டார்: “உங்கள் ஊரில்தான் நிறையத் தண்ணீர் இருக்கிறதே? பின், இங்கு எதைக் காண வந்தீர்கள்?” சென்னையின் ஆண்டு மழைப்பொழிவில் ஏறத்தாழப் பாதியை மட்டுமே பெறுகின்ற ராஜஸ்தான் மாநிலத்தின் நீர் மேலாண்மை குறித்து அறிய மேற்கொண்டிருந்த பயணம் அது.
அந்த முதியவர் சட்டென்று கேட்ட கேள்விக்கு நாங்கள் பதிலின்றித் திகைத்துவிட்டோம். அவருடைய கேள்வியை எதிர்கொள்ள தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களை அழைத்துச் சென்றிருக்க வேண்டும் எனப் பின்னர் பல முறை தோன்றியிருக்கிறது. தற்போதும் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தில் தமிழக முதல்வர் காட்டும் ஆர்வத்தைக் காணுகையில் மீண்டும் அதுபோன்று தோன்றியது.
எச்சரிக்கையும் விழிப்புணர்வும்
சென்னை குடிநீர்ப் பற்றாக்குறை நகரமாக இருக்கலாம். ஆனால், மழைநீர்ப் பற்றாக்குறை நகரம் அல்ல. விரிவாக்கப்பட்ட சென்னைப் பெருநகர எல்லைக்குள் 21 டி.எம்.சி. மழை பொழிகிறது என்பதை மறந்துவிடுகிறோம். உப்புநீக்க ஆலைகள் என்ன வகையான சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன? முதலாவது, கார்பன் வெளியீட்டில் அதன் பங்கு பற்றிப் பேசலாம்.
ஒவ்வொரு ஆலைக்கும் ஒரு மின் உற்பத்தி நிலையம் தேவை. இதன் ஆற்றல் சிறு நகரம் ஒன்றுக்கு மின்சாரம் வழங்கப் போதுமானது என்கிறது, ‘பசிபிக் இன்ஸ்டிடியூட்’ அமைப்பு. இது உள்ளூர் மின்தொகுப்புக்குச் சுமையாக மாறலாம்.
ஆலைகள் ஓராண்டுக்கு இயங்கினால் அதன் உற்பத்தித் திறனைப் பொறுத்துச் சாலைகளில் கூடுதலாக 2,500 முதல் 52,000 கார்கள் வரை சேர்வதற்குச் சமமாக இருக்கும். எனவே, கடல்நீரைக் குடிநீராக்கும் செயல்முறை ‘தகவமைக்க இயலாதது’ என்று காலநிலை மாற்றத்துக்கான, அரசுகளுக்கு இடையேயான குழு (IPCC) எச்சரித்துள்ளது.
இரண்டாவது, கடல் சுற்றுச்சூழல் பாதிப்புகள். கடல்நீரைக் குடிநீராக்கும்போது ‘உப்புநீர்’ (Brine) எனப்படும் ஒரு துணைப்பொருள் உருவாகிறது. ஒவ்வொரு லிட்டர் குடிநீருக்கும் 1.5 லிட்டர் உப்புநீர் வெளியாகிக் கடலில் கலக்கிறது.
குளோரின், தாமிரம், பிற வேதிப்பொருள்களால் இது மாசுபட்டிருக்கும். இது கடல் அமிலமாதலை ஊக்குவிக்கிறது. கடல்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படுவதால், மீனவர்களின் வாழ்வாதாரமும் பாதிப்படைகிறது.
இதைச் சொன்னால் உடனே இஸ்ரேல், வளைகுடா நாடுகளுடன் ஒப்பிட்டுச் சிலர் பேசுவார்கள். உப்புநீக்க ஆலைகளால் ஏற்படும் சுற்றுச்சூழல் சிக்கல்கள் பற்றி அங்கும் விவாதங்கள் தொடங்கிவிட்டன என்பதை இவர்கள் அறியமாட்டார்கள்.