

2026 ஜூலை மாதத்துக்குள் எல் நினோ நிகழ்வு தொடங்கிவிடும் என்று அமெரிக்காவின் கடல்சார் - வளிமண்டல அமைப்பு (NOAA) அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
பொதுவாக, புவி நடுக்கோட்டை ஒட்டிய பசிபிக் பெருங்கடலில் சராசரிக்கும் அதிகமான வெப்பம் நிலவும்போது எல் நினோ ஏற்படும். கடந்த சில நாள்களாக பசிபிக்கின் வெப்பநிலை அதிகரிப்பு மிக அதிகமாக இருப்பதாகவும், பசிபிக் பெருங்கடலுக்கு அடியில் பல நூறு மீட்டர்கள் கீழே ‘கெல்வின் அலை’ (Kelvin wave) என்கிற அதிவெப்ப நீரோட்டம் ஓடிக்கொண்டிருப்பதாகவும் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளது.
இது ‘சூப்பர் எல் நினோ’ எனப்படும் தீவிர எல் நினோவை உருவாக்கும் என்று அறிவியலாளர்கள் கணித்திருக்கிறார்கள். கடந்த 150 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இதன் தாக்கம் தீவிரமாக இருக்கும் எனக் கருதப்படுகிறது.
பன்முக நெருக்கடி
இந்த எல் நினோ நிகழ்வு எப்படிப்பட்ட பின்னணியில் வரப்போகிறது என்பதைத் துல்லியமாகக் கவனிக்க வேண்டும். உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர், ஈரான் மீதான அமெரிக்காவின் போர், உலகின் மிக முக்கியமான ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் எரிபொருள் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டிருக்கும் தடுமாற்றம் ஆகியவை கண்ணுக்குத் தெரியாமல் நம் அன்றாட வாழ்க்கையை ஏற்கெனவே மாற்றியமைத்து வருகின்றன.
இந்தியா உள்பட உலகெங்கும் எரிபொருள் விலை அதிகரித்திருக்கிறது. மிக மோசமான ஆற்றல் சிக்கலில் இந்த உலகம் இருக்கிறது என சர்வதேச ஆற்றல் அமைப்பு அறிவித்திருக்கிறது.
ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டிருப்பதால் சரக்குக் கப்பல்களின் போக்குவரத்து தடைபட்டிருக்கிறது. இதனால் உலகமெங்கும் வேதி உரங்களின் விலை அதிகரித்திருக்கிறது. உலகம் முழுவதும் பல வளர்ந்த நாடுகள் மூன்றாம் உலக நாடுகளுக்குத் தரும் நிதிஉதவியை நிறுத்தியுள்ளன.
பொருளாதார மந்தநிலை உருவாவதற்கான சாத்தியம் இருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். உலக நாடுகள் பலவும் வரவிருக்கும் பொருளாதாரச் சிக்கலை எப்படி எதிர்கொள்வது என்று யோசித்துத் தவித்துக்கொண்டிருக்கின்றன. இப்படிப்பட்ட சிக்கலான புவி அரசியல் சூழலில் வரவிருக்கும் சூப்பர் எல் நினோ பல பாதிப்புகளை ஏற்படுத்தும்.
1970இல் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆடம் டூஸ், ‘பன்முக நெருக்கடி’ (Polycrisis) என்கிற பதத்தை அறிமுகப்படுத்தினார். தனிப்பட்ட பல நெருக்கடிகள் ஒரே நேரத்தில் சமூகத்தைப் பாதிப்பதை இவர் பன்முக நெருக்கடி என்று குறிப்பிடுகிறார்.
பன்முக நெருக்கடி இருக்கும்போது வெவ்வேறு இடங்களில் இருக்கும் பல தனிப்பட்ட சிக்கல்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து, கூட்டுப் பாதிப்பால் பல மடங்காகப் பெருகும். எல் நினோவின் வருகை அப்படிப்பட்ட ஒரு பன்முக நெருக்கடியையே தோற்றுவிக்கும் என்று வல்லுநர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.