நவம்பர் 7ஆம் நாள் இந்தத் தீர்ப்பு வெளியானது. இந்த வழக்கின் பிரதிவாதிகளுக்கு வாய் பேச வராது. ஆனால், குரைக்க முடியும். ஏன் கடிக்கவும் முடியும். இவர்களிடம் சிக்கி இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 10,000 பேர் கடிபடுகின்றனர்; ஆண்டுதோறும் 20,000 பேர் உயிரிழக்கின்றனர். நாடெங்கிலும் நீதிமன்ற வளாகங்களிலும் பொது இடங்களிலும் இவை வெகு இயல்பாகச் சுற்றித் திரிகின்றன.
இதனால் அயல்நாடுகளில் இந்தியாவின் மதிப்புக் குறைகிறது என்றனர் நீதியரசர்கள். அதுவே இந்தத் தீர்ப்புக்குக் காரணமாகி இருக்கலாம். கல்விச் சாலைகள், மருத்துவமனைகள், விளையாட்டு அரங்கங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் முதலான பொது இடங்களிலிருந்து நாய்களை அப்புறப்படுத்தி, அவற்றைக் காப்பகங்களில் அடைத்துப் பராமரிக்க வேண்டுமென்று நீதியரசர்கள் ஆணையிட்டனர்.