

தொழிலாளர் நலன் சார்ந்த பல சட்டங்களை பிரிட்டிஷாரின் ஆட்சிக்காலத்திலேயே அண்ணல் அம்பேத்கர் நடைமுறைப்படுத்தினார்.
1942 முதல் 1946 வரை வைஸ்ராயின் நிர்வாகக் குழுவில் உறுப்பினராகப் பொறுப்பு வகித்த காலத்தில், 28 தொழிலாளர் நலச் சட்டங்களை அவர் நிறைவேற்றிக் கொடுத்தார். அவர் உருவாக்கிக் கொடுத்த சட்டங்களே இன்று இந்தியத் தொழிலாளர்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளுக்குமான அடிப்படை.
தொழிலாளர்களுக்கான குரல்
அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்று அம்பேத்கர் எண்ணியபோது, அதற்கு ‘சுதந்திரத் தொழிலாளர் கட்சி’ (1936) என்றே அவர் பெயர் வைத்தார்.
1936, ஆகஸ்ட் 15 அன்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழுக்கு அவர் அளித்த நேர்காணலில், “தொழிலாளர் வர்க்கங்களின் நலன்களை மேம்படுத்துவதே எங்கள் கட்சியின் அடிப்படைக் குறிக்கோள்.
ஒடுக்கப்பட்ட வகுப்பினர் என்பதற்குப் பதிலாக, ‘தொழிலாளர்’ என்கிற சொல்லைத் தேர்ந்தெடுத்திருப்பது தலித்துகள் உள்பட விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த அனைவரும் தொழிலாளர் வர்க்கத்துக்குள் அடங்கியுள்ளனர் என்பதை நாங்கள் அங்கீகரிப்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்று குறிப்பிட்டார்.
1937இல் பம்பாய் மாகாணத்தை ஆண்ட காங்கிரஸ் கட்சி, ‘தொழிலாளர் சிவில் உரிமைகள் இடைநீக்கச் சட்டம்’ மூலம் வேலைநிறுத்தம் சட்டவிரோதம் என்றும், அதில் பங்கேற்ற தொழிலாளர்களுக்கு ஆறு மாதச் சிறைத்தண்டனை விதிக்கலாம் என்றும் சொன்னது.
எதிர்க்கட்சித் தலைவராக இருந்த அம்பேத்கர், “வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காகத் தொழிலாளர்களைத் தண்டிப்பது என்பது தொழிலாளியை அடிமையாக்குவதற்கு நிகரானது” என்று வாதிட்டார். தனது தொழிலாளர் வர்க்க ஆதரவு நிலைப்பாடுகளை, தொழிலாளர் நலத் துறை சார்ந்த சட்டங்கள் இயற்றும் வாய்ப்பு கிடைத்தபோது அவர் முழுமையாகப் பயன்படுத்தினார்.
அம்பேத்கரின் கனவு
இந்தியத் தொழிலாளர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்தும் அவருக்கு ஒரு கனவு இருந்தது. இந்தியத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில், 1943 செப்டம்பர் 8 முதல் 17 வரை டெல்லியில் நடைபெற்ற அகில இந்தியத் தொழிற்சங்கப் பயிற்சி முகாமில் நிறைவாக உரையாற்ற அம்பேத்கர் அழைக்கப்பட்டிருந்தார். அதில் அவர் முன்வைத்த கருத்துகள் மிக முக்கியமானவை.
“சர்வாதிகாரிகளின் நாட்டில் நாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வி அடைந்ததற்குக் காரணம் புரிகிறது. ஆனால், சர்வாதிகாரத்தை எதிர்க்கும் நாடுகளில்கூட துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக மிகுந்த அதிருப்தி நிலவுவது பெரிதும் வருந்தத்தக்க விஷயம்.