ஆச்சரியப்படுத்திய தேர்தல்கள்

பேரவைத் தேர்தல் 2026
ஆச்சரியப்படுத்திய தேர்தல்கள்
Updated on
2 min read

திணறவைத்த மொடக்குறிச்சி

சில நேரம் எங்கோ ஒரு மூலையில் நடைபெறும் தேர்தல், வரலாற்றில் அழுத்தமாகப் பதிவாகிவிடும். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி சட்டமன்றத் தொகுதியில் 1996இல் நடைபெற்ற தேர்தலும் அப்படியானதுதான். தமிழகத்தில் 1996இல் 11ஆவது சட்டமன்றத்துக்கு உறுப்பினர்களைத் தேர்வுசெய்யும் தேர்தல் நடைபெற்றது.

இதில், மொடக்குறிச்சி தொகுதி இந்திய அளவில் கவனம் பெற்றது. ஆம், இத்தொகுதியில் 28 பெண் வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 1,033 வேட்பாளர்கள் களத்தில் குதித்தனர். இந்தியத் தேர்தல் வரலாற்றில் இவ்வளவு பேர் ஒரு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டது பெரும் விவாதப் பொருளானது.

அன்று ஆட்சிப் பொறுப்பில் இருந்த அதிமுக அரசு, விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்பதைக் காரணமாகக் கூறி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு, மொடக்குறிச்சி தொகுதியில் 1,000 வேட்பாளர்களை நிறுத்துவது என்று முடிவுசெய்தது.

1,000க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேட்புமனுத் தாக்கல் செய்ததால், இந்தத் தொகுதிக்கு மட்டும் 1996 மே 2இல் நடைபெற இருந்த தேர்தல், ஜூன் 1ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. 1,033 வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் என மொடக்குறிச்சி மிரட்டியதால், வாக்குச்சீட்டு பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.

65 பக்கங்கள் கொண்ட புத்தகம் போல அச்சிடப்பட்டது. ஆயிரம் மிகப்பெரிய வாக்குப்பெட்டிகள் பயன்படுத்தப்பட்டன. வாக்கு எண்ணிக்கை மட்டும் ஐந்து மையங்களில் 70 மேசைகளில் ஒரு நாளுக்கும் மேலாக நடைபெற்றது. இத்தேர்தலில் திமுக வேட்பாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் வெற்றிபெற்றார்.

158 வேட்பாளர்கள் ஒரு வாக்கு மட்டுமே பெற்றனர். 88 வேட்பாளர்கள் ஒரு வாக்குகூடப் பெறவில்லை. தேர்தல் ஆணையத்துக்கு மொடக்குறிச்சி தேர்தல் திருகுவலியானதால், தேர்தலில் அதிகமானோர் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையில், சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளருக்கான வைப்புத்தொகை ரூ.250லிருந்து ரூ.10,000ஆக உயர்த்தப்பட்டது. பட்டியல் சாதி, பழங்குடியின வேட்பாளர்களுக்கு ரூ.5,000 நிர்ணயிக்கப்பட்டது.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in