

வாழ்க்கை என்பது ஒரே பாதையில் பயணித்து முடிவடையும் எளிய பயணம் அல்ல; அது பல திருப்பங்களையும் புதிய பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஒரு வியக்கத்தக்க சாகசம். நம்மைச் சுற்றியுள்ள சிலரின் வாழ்க்கை வரலாற்றைப் பார்க்கும்போது, மனிதர்களால் சாதிக்க முடியாதது எதுவுமே இல்லை என்கிற உண்மை நமக்குப் புலப்படும்.
‘நெட்ஃபிளிக்’ஸில் ஹாலிவுட் நடிகரும் கலிபோர்னியாவின் முன்னாள் ஆளுநருமான ஆர்னல்டு ஸ்வார்ஸநெகர் (Arnold Schwarzenegger) பற்றிய ஆவணப் படத்தைப் பார்த்தபோது ஏற்பட்ட சிந்தனைகளும், நம் தமிழ் மண்ணின் இமயமான நடிகர் சிவகுமாரின் வாழ்க்கைப் பயணமும் எத்தகைய ஆழமான பாடங்களை நமக்குக் கற்றுத் தருகின்றன என்பதைச் சிந்திப்பது மிகவும் அவசியமாகிறது.
சாதித்துக்காட்டிய கலைஞர்கள்
ஆர்னல்டு ஸ்வார்ஸநெகரின் வாழ்க்கை வெறும் சினிமாத்தனமான கதையல்ல; மாறாக, கடின உழைப்பும் அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் எவ்வாறு ஒரு மனிதரின் விதியை மாற்றும் என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு. ஆஸ்திரியாவின் எளிய கிராமத்தில் பிறந்து, ஆரம்பத்தில் கடுமையான பொருளாதாரச் சூழலையும் பல சவால்களையும் எதிர்கொண்ட அவர், ‘பாடிபில்டிங்’ துறையில் உலகப் புகழ்பெற்ற ‘மிஸ்டர் யுனிவர்ஸ்’ உள்ளிட்ட பட்டங்களை வென்று உச்சம் தொட்டார்.
அந்தத் துறையில் இனி சாதிப்பதற்கு ஒன்றுமில்லை என்கிற நிலையை எட்டியவுடன், ஆங்கில உச்சரிப்புச் சிரமங்களையும் கடந்து சினிமா உலகுக்குள் நுழைந்து ஹாலிவுட்டின் முன்னணி அதிரடி நாயகனாக உயர்ந்தார். திரையுலகில் கொடிகட்டிப் பறந்த நேரத்தில், மீண்டும் தனது பாதையை மாற்றி முற்றிலும் அறிமுகம் இல்லாத அரசியல் களத்தில் இறங்கி, கலிபோர்னியா மாகாணத்தின் ஆளுநராகப் பதவியேற்றுச் சாதனை படைத்தார்.