

இரண்டாம் உலகப் போர் நிகழ்த்திய கொடூரங்களில் ஒன்று ‘கம்ஃபர்ட் விமன்.’ ஜப்பான், தான் ஆக்கிரமித்திருந்த கொரியா, தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் வசித்த சிறுமிகளையும் பெண்களையும் வேலைக்கு அழைப்பதாகக் கூறி, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, ‘கம்ஃபர்ட் விமன்’ என்று பெயரும் வைத்தது. இந்தப் பெண்கள் ஜப்பானிய ராணுவ வீரர்களின் பாலியல் இச்சைக்குப் பலியாக்கப்பட்டனர். வதைமுகாம்களைப் போலவே மிகச் சிறிய அறைகளில் அடைக்கப்பட்டு, மோசமாக நடத்தப்பட்டனர். பலரும் இந்தக் கொடுமைகளைத் தாங்க முடியாமல் மாண்டு போனார்கள்.
தப்பிப் பிழைத்தவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் அந்த வலியை மறக்க முடியாமல் தவித்தார்கள். ‘நான் 14 வயதுச் சிறுமியாக இருந்தேன். தொழிற்சாலை வேலை என்றுதான் என்னை வீட்டிலிருந்து அழைத்துச் சென்றார்கள். வந்த பிறகுதான் நரகம் என்று தெரிந்தது. ராணுவ வீரர்கள் வரிசையாகக் காத்திருப்பார்கள். தொடர்ச்சியாகப் பல மணி நேரம் வன்புணர்வு செய்வார்கள். போர் முடிந்த பிறகு வீடு திரும்பினாலும் என்னால் நடந்த கொடுமைகளைச் சொல்ல முடியவில்லை.