

பாஜக ஆளுகையின்கீழ் இருக்கும் ஒரே தென்னிந்திய மாநிலமான கர்நாடகத்தில் நாளை (மே 10) நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தல், நாடு முழுவதும் கவனம் ஈர்த்திருக்கிறது. 2024 மக்களவைத் தேர்தலில் தாக்கம் செலுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ள இந்தத் தேர்தலில், ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பாஜகவும் மீண்டும் ஆட்சிக்குவர காங்கிரஸும், கடும் முயற்சியில் இறங்கியிருக்கின்றன.
இரண்டு தேசியக் கட்சிகளைவிடவும் குறைவான இடங்களில் போட்டியிடும் மதச்சார்பற்ற ஜனதா தளம் (ஜேடிஎஸ்), தேர்தல் முடிவைப் பொறுத்து தனது அசல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஊழல் புகார்கள், விலைவாசி உயர்வு உள்ளிட்ட காரணிகளால் பாஜக ஆட்சியை இழக்கும் என ஆரம்பகட்ட கருத்துக்கணிப்புகள் கூறிவந்த நிலையில், ‘பஜ்ரங் பலி’ துணையுடன் பிரதமர் மோடி முன்னெடுத்த தீவிரப் பிரச்சாரம், ஆடுகளத்தை அடியோடு மாற்றிவிட்டதாக பாஜகவினர் குதூகலிக்கிறார்கள்.
மாறிப்போன களம்: மொத்தம் 224 இடங்களைக் கொண்ட கர்நாடக சட்டமன்றத்தில், பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை. பாஜக இதுவரை அறுதிப் பெரும்பான்மையுடன் அங்கு ஆட்சிக்கு வந்ததில்லை. 2008இல் 110 இடங்களில் வென்றதால் சற்றே பலவீனமான அரசாகவே பாஜக அரசு இருந்தது. எடியூரப்பா, சதானந்த கெளடா, ஜெகதீஷ் ஷெட்டர் என மூன்று முதல்வர்கள் மாறினர். 2018இல் 104 இடங்களில் வென்ற பாஜக, ஓராண்டு எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்தது. சில அரசியல் காய்நகர்த்தல்கள் மூலம் மீண்டும் ஆட்சிக்குவந்தது. எனினும் குழப்பம் குறையவில்லை. எடியூரப்பா, பசவராஜ் பொம்மை என முதல்வர்கள் மாறினர்.
கூடவே, பசவராஜ் பொம்மையின் ஆட்சியில் ஊழல் மலிந்திருப்பதாக எழுந்த புகார்களைப் பெரும் அஸ்திரமாகக் கைக்கொண்ட காங்கிரஸ், ‘40% கமிஷன் அரசு’ என்னும் பிரச்சாரத்தை ஆவேசத்துடன் இந்தத் தேர்தலில் முன்னெடுத்தது. ‘நந்தினி’ பால் விற்பனையை நசுக்க பாஜக முயல்வதாக எழுந்த குற்றச்சாட்டையும் காங்கிரஸ் நன்றாகப் பயன்படுத்திக்கொண்டது. பிரச்சாரத்துக்கு வந்திருந்தபோது ‘நந்தினி’ ஐஸ்கிரீமைச் சுவைத்த ராகுல், ‘இதுதான் சிறந்தது’ என்று சிலாகித்தார்.
பாஜகவிலிருந்து முன்னாள் முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர், லக்ஷ்மண் சர்வாடி ஆகிய பெருந்தலைகள் காங்கிரஸுக்குத் தாவியது பாஜகவை அதிரவைத்தது. ஆட்சிக்கு எதிரான மனநிலை (Anti-incumbency) இருப்பதை உணர்ந்ததாலோ என்னவோ, தேசியப் பிரச்சினைகளை முன்வைத்தே பாஜக தேர்தல் பிரச்சாரம் செய்தது. சித்தாந்தரீதியாகத் தாங்கள் விமர்சிக்கும் ‘இலவச’ வாக்குறுதிகளை வழங்கவும் அக்கட்சி தயங்கவில்லை.
‘ஜெய் பஜ்ரங்பலி!’: ஆரம்பகட்டக் கருத்துக்கணிப்புகள் காங்கிரஸுக்கே வெற்றிவாய்ப்பு எனக் கூறிவந்தன. இப்போதும், ஏபிசி-சிவோட்டர் உள்ளிட்ட பிரதான நிறுவனங்களின் கணிப்புகள் காங்கிரஸின் பலத்தைப் பறைசாற்றினாலும், ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா அமைப்பைப் போல, பஜ்ரங் தள் அமைப்பும் தடைசெய்யப்படும்’ எனக் காங்கிரஸ் வாக்குறுதி அளித்ததாக வெளியான செய்திகள், பாஜகவுக்குப் புதுத் தெம்பை அளித்ததை மறுக்க முடியாது.
இந்த விவகாரத்துக்குப் பின்னர் பிரதமர் மோடி தனது ஒவ்வொரு பிரச்சாரக் கூட்டத்திலும் ‘ஜெய் பஜ்ரங்பலி’ எனும் முழக்கத்தை எழுப்பினார். “முதலில் ராமரை அவமதித்த காங்கிரஸ் இப்போது அனுமனை அவமதிக்கிறது” என்று முழங்கினார். பிரச்சாரத்தை எந்தத் திசையில் கொண்டுசெல்வது எனத் தெளிவில்லாமல் இருந்த பாஜகவுக்கு ’பஜ்ரங் தள்’ விவகாரம் ஒரு தீர்மானமான திசையைக் காட்டிவிட்டது.
இது கருத்துக்கணிப்புகளிலும் எதிரொலிக்கிறது. ஜீ நியூஸ்-மாட்ரைஸ் கருத்துக்கணிப்பு பாஜகவுக்கு 103 முதல் 118 இடங்கள் வரை கிடைக்கும் என்கிறது.
தமது அஸ்திரம் தமக்கு எதிராகவே திரும்புவதை உணர்ந்துகொண்ட காங்கிரஸுக்கு, ‘பஜ்ரங் தள் அமைப்பை மாநில அரசால் தடை செய்ய முடியாது’ என்றும் தாங்கள் அப்படி ஒரு வாக்குறுதியை வழங்கவில்லை என்றும் சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் ரண்தீப் சுர்ஜேவாலா முன்வைத்த அந்த வாக்குறுதி, காங்கிரஸின் வெற்றிவாய்ப்புக்கு உலைவைத்துவிடக்கூடும் என்கிற விமர்சனங்கள் எழுந்தன.
இதனால், காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால், ஒவ்வொரு மாவட்டத்திலும் அனுமன் கோயில்கள் கட்டப்படும் என்று கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் ‘வாய்மொழி வாக்குறுதி’ அளிக்க வேண்டிய சூழலும் உருவானது. மறுபுறம், ‘பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா’ மத்திய அரசால் தடைசெய்யப்பட்டபோது அதைக் காங்கிரஸ் ரசிக்கவில்லை என்றும், அந்த அமைப்பின் இரண்டு கோரிக்கைகளை முந்தைய காங்கிரஸ் அரசு ஏற்றுக்கொண்டதாகவும் உள் துறை அமைச்சர் அமித் ஷா கூடுதல் குற்றச்சாட்டுகளை வைத்தார்.
சமூக அரசியல் கணக்கு: முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுவந்த 4% இடஒதுக்கீட்டை ரத்துசெய்த நடவடிக்கை, இந்துக்களின் வாக்குகளைத் திரட்டித்தரும் என்று பாஜக உறுதியாக நம்புகிறது. முஸ்லிம்களின் வாக்குகள் தேவையே இல்லை எனக் கருதும் அக்கட்சி, மிகைப்படுத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுடன் உருவாக்கப்பட்டதாக விமர்சிக்கப்படும் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்துக்குப் பெரிய அளவில் விளம்பரம் செய்தது.
இந்தப் படத்தைத் தடை செய்ய வலியுறுத்தும் காங்கிரஸின் நிலைப்பாடு, பயங்கரவாதத்துக்கு ஆதரவானது எனப் பிரதமர் மோடி, உள் துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பாஜகவினர் பகிரங்கமாக விமர்சித்தனர். ‘காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால் கர்நாடகத்தில் கலவரம் ஏற்படும்; கர்நாடகத்தை இந்தியாவிலிருந்து பிரிக்க காங்கிரஸ் முயல்கிறது’ என மிகக் கடுமையான குற்றச்சாட்டுகளையும் பாஜக முன்வைத்தது.
4% இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டது பட்டியல் சாதியினர் / பழங்குடிகளுக்குப் பலனளிக்கும் என்கிறது பாஜக. லிங்காயத், ஒக்கலிகா சமூகத்தினருக்குத் தலா 2% இடஒதுக்கீடு கிடைக்கும் என்கிறது. ஆனால், 15%க்கும் அதிகமான இடஒதுக்கீடு கோரும் இந்தச் சமூகத்தினர், 2% இடஒதுக்கீட்டால் திருப்தி அடைந்துவிட மாட்டார்கள் என காங்கிரஸ் வாதிடுகிறது.
கர்நாடகத்தின் மக்கள்தொகையில் 13% முஸ்லிம்கள் என்பதை மனதில் வைத்து, முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவந்து, அதை 6%ஆக உயர்த்தப்போவதாகவும் காங்கிரஸ் கூறுகிறது.
கர்நாடக அரசியல் களத்தில் ஆன்மிக மடங்களுக்குக் கணிசமான செல்வாக்கு உண்டு. லிங்காயத்து சமூகத்தினரின் ஆன்மிக மடங்களில் பாஜகவுக்குச் செல்வாக்கு அதிகம். குருபா சமூகத்தினரின் ஆன்மிக மடங்களில் காங்கிரஸுக்குச் செல்வாக்கு உண்டு. சித்தராமையா குருபா சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒக்கலிகா மடங்களின் ஆதரவைத் திரட்டுவதில் பாஜக, காங்கிரஸ் இரண்டும் முயற்சிக்கின்றன.
குமாரசாமி சார்ந்திருக்கும் ஒக்கலிகா சமூகத்தின் ஆதரவு ஜேடிஎஸ்க்கே கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தலித் சமூகத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கே, ஒக்கலிகா சமூகத்தைச் சேர்ந்த டி.கே.சிவக்குமார், லிங்காயத்து சமூகத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் எனக் கலவையான சமூக ஆதரவுத் தளத்தைக் காங்கிரஸ் பெரிதும் நம்பியிருக்கிறது.
‘மோடி’ முகம்: காங்கிரஸின் முதல்வர் வேட்பாளர் சித்தராமையாவா, சிவக்குமாரா என்பதில் தெளிவில்லை. மறுபுறம், பாஜகவைப் பொறுத்தவரை, முதல்வர் வேட்பாளர் யார் என்பதைவிட மோடியின் முகம்தான் பிரதானம். அதற்கேற்பப் பிரம்மாண்டமான பிரச்சாரக் கூட்டங்கள், பல கி.மீ. தொலைவு ‘ரோடு-ஷோ’ என ஓடி ஓடி உழைத்திருக்கிறார் மோடி.
ஆனால், மணிப்பூர் பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது, பிரதமர் கர்நாடகத்தில் ‘ரோடு-ஷோ’ செய்ததாக மல்லிகார்ஜுன கார்கே முதல் அசாதுதீன் ஓவைஸி வரை பலர் கடுமையாக விமர்சித்திருக்கின்றனர். அத்துடன், பிரதமரின் அந்தப் பயணத்தால் பொதுமக்களுக்குச் சிரமங்கள் ஏற்பட்டதாகவும் விமர்சனங்கள் உண்டு.
எல்லாவற்றையும் தாண்டி, கர்நாடகத்தில் நிலவும் அசல் பிரச்சினைகள்தான் கள நிலவரத்தைத் தீர்மானிக்கும் எனக் காங்கிரஸ் உறுதியாக நம்புகிறது. இருப்பினும், 120 இடங்களுக்கு மேல் காங்கிரஸ் வென்றால்தான், பாஜக வீசும் ‘பாசவலை’யில் அக்கட்சி எம்எல்ஏ-க்கள் அகப்படாமல் தப்ப முடியும். ஆக, மே 13இல் வாக்கு எண்ணிக்கைக்குப் பின்னர், கர்நாடகத்தில் பல அரசியல் நாடகங்கள் நடக்கும் என எதிர்பார்க்கலாம்!