மே 1: அமெரிக்க முதலாளித்துவமும் அம்பை தொழிலாளித்துவமும்

மே 1: அமெரிக்க முதலாளித்துவமும் அம்பை தொழிலாளித்துவமும்
Updated on
2 min read

தமிழில் தொழிலாளர் பாடுகளை மையமாக வைத்து, அதற்கான தீர்வை முன்வைத்து எழுதப்பட்ட நாவல் எழுத்தாளர் தொ.மு.சி.ரகுநாதனின் ‘பஞ்சும் பசியும்’. தொ.மு.சி. எழுதிய முந்தைய இரு நாவல்களிலிருந்து முற்றிலும் தனித்துவமானது இந்நாவல். மற்றவை தனி மனிதர்களின் பிரச்சினையை மையமாகக் கொண்டவை. சுதந்திரத்துக்கு முன்பும், சுதந்திரம் அடைந்த அடுத்த ஆண்டிலும் இந்தப் படைப்புகள் எழுதப்பட்டன என்பது கவனம் கொள்ளத்தக்கது. 1951இல் எழுதப்பட்டதுதான் ‘பஞ்சும் பசியும்’. தொ.மு.சி. படைப்புகளில் அதிகம் கவனம் பெற்றதும் இந்நாவல்தான்.

சுதந்திரம் அடைந்த பிறகுதான் இந்தியாவில் இடதுசாரி இயக்கங்கள் கூடுதல் சக்திபெற்றன. அதற்கு முன்பு நடந்த போராட்டங்கள் இந்திய சுதந்திரப் போராட்ட நீரோட்டத்தில் கலந்துவிட்டன. நாட்டு விடுதலை என்பதன் ஓர் அம்சமாகவே அவை பார்க்கப்பட்டன. சுதந்திர இந்தியாவில் இதெல்லாம் மாறி, நாடும் தொழிலாளியும் சுபிட்சம் அடைவார்கள் என்கிற மூடநம்பிக்கையும் இதன் காரணமாக இருக்கலாம். முதலாளி இடத்தில் அரசு வந்துவிட்டதுதான் வேறுபாடு. தொழிலாளர் வர்க்க நலனை முன்னிறுத்திய போராட்டங்கள் இந்தக் காலகட்டத்தில் நடந்தன. ஒருவகையில் இந்நாவல் அதன் நேரடிச் சாட்சி. மதுரையில் தான் கண்ட ஒரு நெசவுத் தொழிலாளர் போராட்டமே இந்த நாவலுக்கான உந்துதல் என தொ.மு.சி. எழுதியிருக்கிறார்.

நெசவுத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை முன்வைத்த இலக்கியப் படைப்பு இது. அகில உலகச் சந்தையில் நூலின் விலை உயர்வு, அம்பாசமுத்திரத்தில் ஒரு தொழிலாளியின் குடும்பத்தில் ஏற்படுத்தும் சிக்கலை இந்த நாவல் தொழிலாளர் பக்கம் நின்று பேசுகிறது. அம்பாசமுத்திரம் ஊரை குறுக்குவெட்டாகச் சித்தரிக்கும் விவரிப்பிலேயே அதன் வர்க்க பேதத்தைச் சொல்லிவிடுகிறார் தொ.மு.சி. ‘நிலப்பிரபுத்துவச் சீரழிவுக்கும் முதலாளித்துவ வளர்ச்சிக்குமான சரித்திர கதியின் பிரசவ காலத்தை நெருங்கிக்கொண்டிருக்கும் இன்றைய இந்தியாவின் ஒரு பகுதி அம்பாசமுத்திரம்’ என ஓரிடத்தில் விவரிக்கிறார் தொ.மு.சி.இந்திய முதலாளிமாரையும் ஹார்வி போன்ற வெளிநாட்டு முதலாளிமாரையும் இன்னின்னார் என முகப்பிலேயே தெளிவுபடுத்திவிடுகிறார். நெசவுத் தொழிலாளர் பிரச்சினைதான் மையம் என்றாலும் விவசாயிகள் பிரச்சினைகள் மீதும் போகிற போக்கில் அவர் கவனம் குவிக்காமல் இல்லை.

ஹார்வி ஆலைக்கு வெளியே அம்பையில் உள்ள சிறு, குறு நெசவுத் தொழில் நிறுவனங்களை நம்பியிருக்கும் தொழிலாளர், சிறு முதலாளிமார்தாம் இந்நாவலின் மாந்தர்கள். தாதுலிங்க முதலியார் என்கிற கதாபாத்திரம் வழி முதலாளி வர்க்கத்தையும் மணி, இருளப்பக்கோனார் உள்ளிட்டவர்கள் வழி உழைப்பாளர் வர்க்கத்தையும் தொ.மு.சி.இதில் சித்தரித்துள்ளார். இவர்களுக்கு இடையில் சங்கர், ராஜூ என்கிற கதாபாத்திரங்கள் தொழிலாளர் சங்கம் உருவாகக் காரணமாகின்றன. இந்த சங்கர் பெரிய முதலாளியான தாதுலிங்க முதலியாரின் மகன் என்கிற முரண், இன்றைய வாசகர்களுக்கு விசேஷமானதாக இருக்காது.

கமலா என்கிற கதாபாத்திரம் வழி ஒரு காதலும் நாவலில் இருக்கிறது. இவள் தாதுலிங்க முதலியாரின் மகள். இன்னொரு சிறு முதலாளியும், தொழிலாளி பக்கம் நிற்பவருமான கைலாச முதலியாரின் மகனான மணியுடன் இவள் காதல் வயப்படுகிறாள். இந்தக் கமலா கதாபாத்திரம் வழி பெண்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடுவதை இந்நாவல் வலியுறுத்துகிறது. ‘பெண்கள் பொருள் உற்பத்தியில் ஈடுபடாதவரை பெண் விடுதலை சாத்தியமல்ல’ எனச் சொல்கிறது இந்தக் கதாபாத்திரம். இவளின் இந்தக் கருத்து சமூகத்தில் ஏற்படுத்திய விமர்சனத்தையும் நாவலில் தொ.மு.சி. சொல்லி யிருக்கிறார். சங்கர் கதாபாத்திரம் வழி அமெரிக்காவின் முதலாளித்துவம் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது. ‘அமெரிக்கா நமது நாட்டை மட்டும் விலைக்கு வாங்க விரும்பவில்லை. நம் ஆத்மாவையே விலைக்கு வாங்கப் பார்க்கிறது’ என ஓரிடத்தில் சங்கர் ஆத்திரப்படுகிறான்.

அபிஸீனியா மீது முசோலினி படையெடுப்பதற்கு முன்பு வரை சாதாரணத் தறிக்காரனாக இருந்த கைலாச முதலியார், ஹிட்லரின் பேராசையால் முதலாளியாகிறார். உலகப் போரால் துணிமணிகளுக்குக் கிராக்கி வருகிறது. அதேபோல் மற்றொரு சர்வதேச நிகழ்வில் வந்த பணமெல்லாம் போய் கடன்காரராகிவிடுகிறார். வைத்தியச் செலவுக்குப் பணம் இல்லாமல் இளைய மகனைப் பறிகொடுக்கிறார். தன் உயிரையும் மாய்த்துக்கொள்கிறார். மூத்த மகனான இதன் நாயகன் மணி, வெளியேறிப் பராரியாக அலைகிறான். வழக்கமான நாவல்களில் அவன் ஆன்மிக தரிசனத்தை அடைவான். ஆனால், தொ.மு.சி. அவனை அரசியல் தரிசனமடையச் செய்கிறார். பல ஊர்களிலிருந்து மதுரை நோக்கி வரும் நெசவாளர் போராட்டப் பேரணிகளை, மணி தன் தோழர்களுடன் போய் வரவேற்கிறான். இந்தப் போராட்டம் அம்பைக்கும் வருகிறது. தொழிலாளர்களின் பிரச்சினைக்காகத் தொழிலாளர் ஒன்றுபடுவதும் அரசிடம் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்திப் போராடுவதுமாக இந்த நாவல் முடிவடைகிறது. குடும்ப நாவல்களும் சரித்திர நாவல்களும் ரசனை என்கிற ஒரே நோக்கத்துக்காக எழுதப்பட்ட காலகட்டத்தில், திடகாத்திரமான அரசியலை முன்வைத்து எழுதப்பட்ட ‘பஞ்சும் பசியும்’ இடதுசாரி அரசியல் நாவல்களுக்கான ஒரு முன்னோடிப் படைப்பு எனத் தைரியமாகச் சொல்லலாம்.

அபிஸீனியா மீது முசோலி படையெடுப்பதற்கு முன்பு வரை சாதாரணத் தறிக்காரனாக இருந்த கைலாச முதலியார், ஹிட்லரின் பேராசையால் முதலாளியாகிறார். அதேபோல் மற்றொரு சர்வதேச நிகழ்வில் வந்த பணமெல்லாம் போய் கடன்காரராகிவிடுகிறார்.

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in