

இந்தியக் கல்வி நிலையங்களில் நிலவும் சமூக ஏற்றத்தாழ்வுகளைத் தகர்க்க தெலங்கானா சமூக, பழங்குடியினர் நலப் பள்ளிகள் காட்டும் வழி குறித்து அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகம் 2019இல் ஆய்வறிக்கை வெளியிட்டது. அந்த வகையில் இது சார்ந்து கவனத்தைத் திருப்பியவர் ஆர்.எஸ்.பிரவீன் குமார். தெலங்கானாவின் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் தலைகீழ் மாற்றம் கொண்டுவந்தவர் இவர்.
ஐபிஎஸ் அதிகாரியாகத் தனது பணிவாழ்க்கையைத் தொடங்கிய இவர், சமூக மற்றும் பழங்குடி நல கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் செயலராகப் பின்னர் பணியாற்றினார். 2021இல் ஐபிஎஸ் பதவியிலிருந்து விலகி பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலப் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கும் திட்டத்தைக் கண்டித்து நடைபெற்ற நிகழ்வில் உரையாற்ற சென்னை வந்திருந்த பிரவீன் குமாருடன் உரையாடியதிலிருந்து...
ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலப் பள்ளிகளைப் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கக் கூடாது என நீங்கள் சொல்வதற்குக் காரணம்? - அரசுப் பள்ளித் திட்டத்தில் அனைவரும் சமமாகவும், மாண்புடனும் நடத்தப்படுவதுபோல ஒரு மாயை நிலவுகிறது. ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலப் பள்ளிகள் ஒதுங்கியிருப்பதுபோன்றும், அவர்களை மைய நீரோட்டத்தில் கலக்கச் செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம்போலவும் பிம்பம் உருவாக்கப்படுகிறது. இது முற்றிலும் தவறு. பொதுப் பள்ளிகளும் பொதுச் சமூகமும் பட்டியல் சாதி மக்களுக்கு அநீதி இழைத்ததினால்தான் நலப் பள்ளிகள் தொடங்கப்பட்டன.
இந்திய அரசமைப்புச் சட்டக்கூறு 14, 15, 16, 17 ஆகியவற்றை அம்பேத்கர் உருவாக்கிய நோக்கம் இன்னும் முழுவதுமாக நிறைவேறவில்லை. இன்றும் அரசுப் பள்ளிகளில் பட்டியல் சாதி மாணவர்களிடம் ஆசிரியர்கள் பாகுபாடு காட்டும் கொடூரம் நின்றபாடில்லை. நலப் பள்ளிகளைப் பொறுத்தமட்டில் மாணவர்கள், ஆசிரியர்கள் என இரு தரப்புமே பட்டியல் சாதியினர் என்பதால் அங்கு சுதந்திரமாகக் கல்வி பயிற்றுவிக்கவும் கற்கவும் முடிகிறது.
பல நூற்றாண்டுகளாக ஒடுக்கப்பட்டவர்கள் தனித்து இயங்க வேண்டியதும், அவர்களுக்குத் தனி கவனம் செலுத்தப்பட வேண்டியதும் இன்றியமையாதது. இப்படியிருக்க, பட்டியல் சாதியினருக்கான பள்ளிகளைப் பொதுப் பள்ளிகளுடன் இணைப்பது அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் திட்டமாகும். இது அரசமைப்பை அவமதிக்கும் செயல். சமூகநீதி பேசும் திமுக அரசு இதைக் கைவிட வேண்டும்.
தெலங்கானாவின் நலப் பள்ளித் திட்டம் தொடங்கப்பட்டதும், அதற்குள் நீங்கள் வந்ததும் எப்படி? - ஆந்திர மாநிலத்தின் ஒரு பகுதி 2014இல்தான் தெலங்கானாவாக பிரிக்கப்பட்டது. எனவே, ஆந்திரத்தில் உருவான நலத்திட்டங்களைப் பற்றிப் பேசுவதே பொருத்தமாக இருக்கும். 1960களிலேயே அம்மாநிலத்தில் நலவிடுதிகள் செயல்பாட்டுக்கு வந்தன.
ஆனால், அப்போது நலப்பள்ளிகள் இல்லாததால் பட்டியல் சாதியினரின் குழந்தைகள் அரசுப் பள்ளிகளுக்குச் சென்று கடுமையான பாகுபாட்டுக்கு இடையில் படித்துவந்தனர். நல விடுதிகளும் உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமல், வெறும் உண்டு - உறங்கும் இடமாக மட்டுமே இருந்தன. நான்கூட நல விடுதியில் தங்கி அரசுப் பள்ளியில்தான் படித்தேன்.
அரசுப் பள்ளிகளில் நாங்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டதால் எங்களது எதிர்காலம், எங்களுக்கான வாய்ப்புகள் பறிக்கப்பட்டன. மறுபக்கம், பட்டியல் சாதி மாணவர்களுடன் தங்கள் பிள்ளைகள் சேர்ந்து கல்வி கற்பதைச் சகித்துக்கொள்ள முடியாத சாதியவாதிகள் அவர்களைத் தனியார் பள்ளிகளில் சேர்க்கத் தொடங்கினர்.
நாளடைவில் அரசுப் பள்ளிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதியினரில் ஏழ்மையில் உழல்பவர்களின், பட்டியல் சாதியினரின் குழந்தைகள் மட்டுமே படிக்கும் இடமாக மாறிப்போயின. பொருளாதார ஏணிப்படியில் ஏற முடிந்தவர்களெல்லாம் தங்களது பிள்ளைகளைத் தனியார் பள்ளிகளில் சேர்ப்பதை வழக்கமாக்கினர். ஆளும் அரசுகளும் இந்தச் சிக்கலைக் கண்டுகொள்ளவே இல்லை.
இத்தகைய பின்னணியில்தான் என்.டி.ராமாராவ் ஆந்திர முதல்வராக பதவி வகித்த காலகட்டத்தில் 1984இல் நலப் பள்ளிகள் தொடங்கப்பட்டன. ஆந்திரத்தில் குடிமைப் பணி அதிகாரியாக பொறுப்பேற்ற தமிழரான எஸ்.ஆர்.சங்கரன், பட்டியல் சாதி மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரே இடத்தில் தங்கிக் கல்வி கற்கும் நலப் பள்ளிகளை உருவாக்கினால், நிலைமை மாறும் என்ற யோசனையை முன்மொழிந்தார்.
அதன்படி 1984இல் 46 நலப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. சிறு பிராயத்திலிருந்து எதிர்கொண்ட சாதியக் கொடுமைகள் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தன. கால்நடை மருத்துவத்தில் முதுநிலைப் பட்டம் பெற்றிருந்தபோதும் குடிமைப் பணிக்கு முயன்று 1995இல் ஐபிஎஸ் ஆனேன். 22 ஆண்டுகள் போலீஸ் அதிகாரியாகப் பணிபுரிந்தேன்.
நான் செய்ய வேண்டிய பணி இதுவல்ல என ஒரு கட்டத்தில் உணர்ந்தேன். 2011இல் கல்வி விடுப்பு எடுத்துக்கொண்டு அமெரிக்கா சென்று ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் பொது நிர்வாகப் பட்டம் முடித்தேன். ஆந்திரத்துக்குத் திரும்பியதும் டிஜிபியிடமும் முதல்வரிடமும் நலப் பள்ளித் திட்டத்தில் பொறுப்பேற்க அனுமதி பெற்றேன்.
தெலங்கானா நலப் பள்ளிகளின் சாதனைகளைச் சொல்லுங்கள்... தெலங்கானாவில் முற்றிலும் இலவச உண்டு உறைவிடக் கல்வி அளிக்கும் 268 நலப் பள்ளிகள் செயல்பட்டுவருகின்றன. ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 270 மாணவ, மாணவிகள் இவற்றில் படித்துவருகின்றனர்.
மொத்தமுள்ள பள்ளிகளில் 38 தகைசால் பள்ளிகள், 5 சிறப்பு தகைசால் மையங்கள் அந்தஸ்துடன் செயல்படுபவை. இத்தகைய பள்ளிகளில் அதிசிறந்த மாணவ, மாணவிகளுக்குச் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு அவர்கள் மருத்துவர், பொறியாளர், அயல்நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி பெறக்கூடியவர்களாகத் தகுதிப்படுத்தப்படுகின்றனர்.
30 உண்டு உறைவிட மகளிர் கல்லூரிகள் பட்டியல் சாதி மாணவிகளுக்காக இலவசமாக நடத்தப்படுகின்றன. பழங்குடி மாணவிகளுக்கு 15 கல்லூரிகளும், மாணவர்களுக்கென 7 கல்லூரிகளும் செயல்பட்டுவருகின்றன. 10 ஆயிரம் ஆசிரியர்களுக்கு மேல் பணியாற்றி வருகின்றனர்.
நலப் பள்ளிகள், நல விடுதிகளைப் பொறுத்தவரை ஆசிரியர்களும் மாணவர்களும் ஓரிடத்தில் தங்கிக் கல்வி பயில்வதால் ஆசிரியர்களே பெற்றோர் ஸ்தானத்திலும் செயல்படுகிறார்கள். மாணவர்களின் கல்வி, ஆளுமை வளர்ச்சி மீது கவனம் குவிக்கப்படுகிறது. இதன் பலனாக ஆண்டுதோறும் 250 மருத்துவ மாணவர்கள் உருவாகின்றனர்.
நீட், ஜேஇஇ, ஜிஆர்இ, கேட், சேட், ஐஇஎல்டிஎஸ் உள்ளிட்ட அனைத்து விதமான நுழைவுத் தேர்வுகளுக்கும் அங்கு பிரத்யேக பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் எங்களது மாணவர்களில் ஆயிரக்கணக்கானோர் எய்ம்ஸ், ஜிப்மர், ஐஐடி உள்ளிட்ட அதிசிறந்த உயர்கல்வி நிலையங்களில் படித்துவருகிறார்கள்.
எங்களது பழங்குடி மாணவி மாலவத் 13 வயதிலேயே எவரெஸ்ட் சிகரத்தை அடைந்து உலக சாதனை படைத்தார். ‘கேலோ இந்தியா’ 2020இல் மாணவி நந்தினி இரண்டு தங்கப் பதக்கங்களை வென்றார். எங்கள் மாணவர்கள் 15 பேர் இணைந்து ஓசோன்படலத்தை ஆராய்ச்சி செய்ய ‘ஸ்வரோசாட்-1’ செயற்கைக்கோளைக் கண்டுபிடித்தனர். இப்படி நிறைய சொல்லலாம்.
தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நலப் பள்ளிகளில், விடுதிகளில் மலிந்துள்ள முறைகேடுகளைத் தடுத்தல், போதுமான ஆசிரியர்களை நியமித்தல், பாழடைந்துள்ள வகுப்பறைகள், விடுதி கட்டிடங்களைப் பராமரித்தல் உள்ளிட்ட முறைப்படுத்தும் நடவடிக்கைகளுக்காகவே பள்ளிக் கல்வித் துறையுடன் இணைப்பது அவசியம் எனச் சொல்லப்படுகிறதே?
தெலங்கானாவைச் சேர்ந்த பட்டியல் சாதி மக்களின் விகிதாசாரத்துக்கு ஏற்ப அங்கு ஆண்டுதோறும் ரூ.960 கோடி நலப் பள்ளிகளுக்காக ஒதுக்கப்பட்டு அது முழுவதுமாக, முறையாகச் செலவிடப்படுகிறது. தமிழ்நாட்டில் நலத் துறைக்கென மத்திய அரசு ஒதுக்கும் நிதி அப்பள்ளிகளுக்கு அரசால் செலவிடப்படுகிறதா? தமிழ்நாட்டில் 20% பட்டியல் சாதியினர் இருப்பின் மாநிலக் கல்வி பட்ஜெட்டில் 20% நலப் பள்ளிகளுக்கென ஒதுக்கப்படுகிறதா? நிதி ஆளுகையில் முறைகேடு இருப்பின் அதனை அத்துறைக்கு உள்பட்டுதான் சீர் செய்ய வேண்டும்.
ஆசிரியர் பற்றாக்குறை இருப்பின் முறைப்படி நியமனம் செய்யலாம். இவையெல்லாம் எளிதில் தீர்க்கக்கூடிய சிக்கல்களே. அதற்கு ஏன் ஒட்டுமொத்தமாக அத்துறையைப் பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்க வேண்டும்?
தமிழ்நாட்டில் நலத் துறைக்கென மத்திய அரசு ஒதுக்கும் நிதி அப்பள்ளிகளுக்கு அரசால் செலவிடப்படுகிறதா? தமிழ்நாட்டில் 20% பட்டியல் சாதியினர் இருப்பின் மாநிலக் கல்வி பட்ஜெட்டில் 20% நலப் பள்ளிகளுக்கென ஒதுக்கப்படுகிறதா?
- தொடர் புக்கு: susithra.m@hindutamil.co.in