கர்நாடக தேர்தல் 2023 அலசல் | காங்கிரஸின் எழுச்சியும், கட்சித் தலைவர்களின் பதவிப் போட்டியும்!

படம்: முரளி குமார்
படம்: முரளி குமார்
Updated on
3 min read

இன்னும் எண்ணி 20 நாட்களில் 16-வது சட்டப்பேரவைத் தேர்தலைச் சந்திக்க இருக்கிறது கர்நாடகா. அதற்குள் அங்கு அதிரடி அரசியல் காட்சிகளில் நடந்து கொண்டிருக்கின்றன. ஆட்சியைத் தக்கவைக்க பாஜகவும், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கட்சியும் தீவிரம் காட்டி வருகின்றன. மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் கர்நாடகாவில் வலுவான மாநில தலைமைகளும், பரந்த அளவிலான சமூதாய அமைப்புகளின் ஆதரவுடனும் ஆளும் பாஜகவை எதிர்க்கிறது காங்கிரஸ்.

இது ஒருபுறமென்றால் எதிரணியில் சீட் மறுக்கப்பட்ட முன்னாள் முதல்வர், துணை முதல்வர் உள்ளிட்ட பாஜக மூத்த அரசியல் தலைவர்கள் காங்கிரஸில் இணைந்துள்ளனர். இதுவும் காங்கிரஸ் கட்சிக்கு புதுத் தெம்பை அளித்துள்ளது என்றாலும், அளவுக்கு அதிமான நன்மைகளும் ஆபத்தில் முடியலாம் என்பது போல முக்கியப் பதவிக்காக உள்ளூர் தலைவர்களுக்குள் நடக்கும் மறைமுகமாக பனிப்போர், அக்கட்சிகான தேர்தல் திருஷ்டியாகவே பார்க்கப்படுகிறது.

ஊழல் குற்றச்சாட்டும், சமூக நல வாக்குறுதியும்: கடந்த காலத்தில், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடனான கூட்டணியால் இரண்டு முறை ஏற்பட்ட கசப்பான அனுபவத்தினால், இந்தமுறை தனிப்பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சிக்கு வருவதையே காங்கிரஸ் விரும்புகிறது. இதனை ஏப்.16-ம் தேதி கோலாரில் நடந்த காங்கிரஸ் பேரணியில், அக்கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் பேச்சு உறுதி செய்கிறது. அன்று ராகுல் காந்தி, "தேர்தலில் தனிப் பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறாவிட்டால், 40 சதவீத ஊழலில் பெறப்பட்ட பணத்தைக் கொண்டு ஆட்சியை கவிழ்க்க முயற்சி நடக்கும்" என்றார். இதனால் தனிப் பெரும்பான்மை பெற, காங்கிரஸ் மாநிலத்தின் முக்கியமான பிரச்சினைகளில் தனது கவனத்தைக் குவிக்கிறது. குறிப்பாக, ஆளும் பாஜகவினருக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளை கையில் எடுத்திருக்கிறது.

அடுத்ததாக, அக்கட்சியின் சமூக நல அக்கறை மீதான அறிக்கைகளின் தொடர்ச்சியாக, குறைந்த வருமானம் கொண்ட பிரிவினர்களுக்காக, க்ரிஹ் ஜோதி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு ரூ2,000 மாதத் தவணைத் தொகை, அன்ன பாக்யா திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் குடும்பங்களுக்கு மாதம் 10 கிலோ இலவச அரிசி, யுவ நிதி திட்டத்தின் கீழ், வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000, பட்டைய படிப்பு படித்தவர்களுக்கு ரூ.1,500 ஊக்கத்தொகை என 4 தேர்தல் வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறது.

சாதி மற்றும் சமூதாய வாக்குகள்: கர்நாடக அரசியலில், சுமார் 17 சதவீதம் வாக்கு வங்கியுடன் வீரசைவ லிங்காயத்து சமூகத்தினர் முக்கிய அங்கம் வகிக்கின்றனர். இவர்கள் மத்தியில் பரந்த அளவில் தனது செல்வாகை உருவாக்க காங்கிரஸ் தொடர்ந்து முயற்சி வருகிறது; குறிப்பாக, லிங்காயத்துக்களிடம் செல்வாக்கு மிக்க பாஜகவின் முன்னாள் முதல்வர் பிஎஸ் எடியூரப்பாவை கடந்த 2021-ம் ஆண்டு கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகிக்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்ட பிறகு காங்கிரஸ் தனது முயற்சியை தீவிரப்படுத்தியுள்ளது. பாஜகவில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரஸில் இணைந்துள்ள பாஜக மூத்த தலைவர்கள் இருவரும் லிங்காயத்துகளே. இந்தச் சூழ்நிலையில், லிங்காயத்துகள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட சாதிகளுக்கான இடஒக்கீட்டை, 5 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்துவதாக கூறியுள்ள பாஜகவின் முடிவு எவ்வாறு தேர்தலில் அக்கட்சிக்கு உதவப் போகிறது என்பது சுவாரஸ்யம் தரும் எதிர்பார்ப்பு.

இதற்கிடையில், வாக்காளர்களில் 15 சதவீதம் இருக்கும் சிறுபான்மையினரின் வாக்குகளை ஒன்றிணைப்பது காங்கிரஸ் கட்சிக்கு மற்றொரு சவாலாகவே இருக்கும். பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீட்டின் கீழ் முஸ்லிம்களுக்கான 4 சதவீத இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் பாஜகவின் முடிவினை நீக்குவோம் செய்வோம் என்று காங்கிரஸ் கட்சி உறுதியளித்துள்ளது. இருந்த போதிலும் முஸ்லிம் வாக்குகளுக்காக தேவ கவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் போட்டியிடுகிறது. அக்கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி, ஜெடி(எஸ்) கட்சி தனிப்பெரும்பான்மையில் வெற்றி பெற்றால் முஸ்லிம் ஒருவர் முதல்வராக்கப்படுவார் என்று அறிவித்துள்ளார். மாநிலத்தின் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்துபர்களாகவும், 60 இடங்களில் செல்வாக்கு நிறைந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

தனிப் பெரும்பான்மையே இலக்கு: கடந்த 2018-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் ஆட்சியை இழந்திருந்தாலும் அதன் வாக்கு விகிதம் 38.17 சதவீதமாக அதிகரித்திருந்தது. இது முந்தைய 2013-ம் ஆண்டு தேர்தலில் இருந்த 36.59 சதவீதத்துடன் ஒப்பிடும்போது சாதகமான அம்சமே. கடந்த 2018ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 80 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது. தற்போது மாநிலத்தில் சுமார் 224 தொகுதிகளில் ஆளும் பாஜகவே நேரடியாக எதிர்கொள்ளலாம். கல்யாண் கர்நாடகா மற்றும் கிட்டூர் பகுதிகளில் ஜெடி(எஸ்) அச்சுறுத்தலாக இருக்கலாம்.

பெங்களூரு உட்பட பழைய மைசூர் பகுதிளில் பாஜக வாக்குகளை ஒருங்கிணைக்க முயற்சிக்கும் என்பதால் மும்முனைப் போட்டி இருக்கலாம். கட்சியில் இருந்து சில தலைவர்கள் வெளியேறிய பின்னர், ஜெடி(எஸ்) செல்வாக்கு இந்த பகுதிகளில் பலவீனமடைந்துள்ளது. மாநிலத்தின் வாக்களர்களில் 11 சதவீத வாக்கு வங்கியையுடைய வொக்கலிகா சமூகத்தினரின் செல்வாக்கு மிக்க பகுதி இது.

கடந்த 2004 மற்றும் 2018-ம் ஆண்டு தேர்தல்களைப் போல வாக்குகள் சிதறுவதைத் தவிர்க்க ஜெடி(எஸ்) கட்சியை பலவீனப்படுத்தும் அதே வேளையில், பாஜக இங்கு காலுன்றுவதையும் காங்கிரஸ் தடுக்க வேண்டும். காங்கிரஸின் மாநிலத்தலைவரான டி.கே.சிவக்குமார் ஒரு செல்வாக்கு மிக்க வொக்கலிக்கா தலைவராக இங்கு வெற்றி பெற்று வந்தாலும் வாக்குகள் பிரிவது காங்கிரஸுக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இருக்கும். ஏனென்றால், வொக்கலிக்கா பிரிவுக்கான இடஒதுக்கீடும் 4 சதவீதத்தில் இருந்து 6 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

தலைமைச் சண்டைகள்: காங்கிரஸ் கட்சியில் நிலவும் உட்கட்சிப் பூசல் அக்கட்சிக்கான மிகப்பெரிய பின்னடைவாகும். ஒவ்வொரு அணிகளுக்கு இடையிலான பிளவு மிகவும் ஆழமாக இருக்கிறது. எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையாவுக்கும், கட்சியின் மாநிலத் தலைவர் டிகே சிவக்குமாருக்கும் இடையில் நடக்கும் இந்தப் பனிப்போர் விளையாட்டில் இருவருமே தங்களுக்கு ஆதரவான வேட்பாளர்கள் அதிக அளவில் வெற்றி பெற வேண்டும் என்று தீவிரமாக வேலை செய்வார்கள். மே 10-ம் தேதி தேர்தலில் கட்சி வெற்றி பெற்றால் இந்த இரு தலைவர்களும் தங்களுக்கான முதலமைச்சர் ஆசையை வெளிப்படையாகவே தெரிவித்திருக்கிறார்கள்.

இன்னொருபுறம், இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கர்நாடகாவைச் சேர்ந்த தலித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே தனது தலைமையை நிரூபிப்பதற்கான தேர்தலாகவும் இது இருக்கிறது. பட்டியலினத்தவர்களின் 17 சதவீக வாக்குகளும், பழங்குடிகளின் 7 சதவீத வாக்குகளும் கட்சிக்கு மிகவும் முக்கியமானவை. தேசிய அரங்கிலும், கட்சியில் தனக்கான பிடிமானத்தை உறுதிப்படுத்துவதற்கும் இந்த கர்நாடக தேர்தல் மிகவும் முக்கியமானது.

(தி இந்து ஆங்கில நாளிதழில் நாகேஷ் பிரபு எழுதிய ஆங்கிலக் கட்டுரையின் தமிழ் வடிவம் இது.)

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in