

நட்சத்திர நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களுக்கு முதல் வாரம் முழுவதும் கூட்டம் அலைமோதும். திரையரங்க ‘பாக்ஸ் ஆபீஸ்’ மொழியில் இதனை ‘ஓபனிங்’ என்பார்கள். நட்சத்திர இயக்குநர்களின் வணிகச் சட்டகப் படங்களுக்கும் இது நடக்கும். ஆனால், கடந்த வாரம் வெளியான ‘விடுதலை’ திரைப்படம், திரையுலகம் எதிர்பார்த்திராத ‘ஓபனிங்’ வரவேற்பைப் பெற்றிருக்கிறது. அதற்கான காரணம், மேற்சொன்ன எதுவும் இல்லை. மக்கள் அரசியலைப் பேசுவதற்கான கலையாகத் திரைப்படத்தைக் கையாண்டு, அதன்வழி நட்சத்திர இயக்குநராக உருவெடுத்தவர் வெற்றிமாறன். அவரது ‘படைப்புலகம்’ இம்முறை எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதைக் காணக் கூடிய ரசிகர்களின் ஆதரவால் இது சாத்தியப்பட்டிருக்கிறது.
வெற்றிமாறனின் படங்களில் நட்சத்திர நடிகர்கள் இடம்பெற்றாலும் அவர்களை எதிர்பார்த்து பார்வையாளர்கள் வருவதில்லை; கதாபாத்திரங்களை எதிர்பார்த்து வருகிறார்கள். வெற்றிமாறன் உருவாக்கும் ‘புனைவுப் பிரபஞ்ச’த்தில் உண்மையின் முகத்தை பார்க்க முடியும் என்று நம்புகிறார்கள். அனைவருக்குமான சமமான ஜனநாயக ஆட்சியமைப்பு என நம்பும் மக்கள் மீது, அதிகார மையம் பிரயோகிக்கும் ஒடுக்குமுறைகளை அம்பலப்படுத்துவதைக் கண்டுகொள்கிறார்கள். அதனோடு அரசு இயந்திரம், ஆதிக்க வர்க்கம் உள்ளிட்ட பொதுச் சமூகம் மறந்துபோய்விடும் குற்றவுணர்வை அவரது திரைமொழி நினைவூட்டுகிறது. மக்கள் வரலாற்றின் பிரதிபலிப்பைக் கொண்டுள்ள நாவலையோ, சிறுகதையையோ தழுவி அவர் தனது திரைக்கதையை எழுதும்போதெல்லாம், அவர் கவனமுடன் விடுபட்ட வரலாற்றைத் தனது படைப்புலகில் மீள் உருவாக்குகிறார்.
பொதுவான சித்தரிப்பு தவறல்ல
அந்த வரிசையில், அவரது ‘விடுதலை’ திரைப்படம், மலைவாழ்ப் பழங்குடி மக்கள், அவர்களது நலன்களுக்கு எதிரான வளக் கொள்ளையை நடத்த விரும்பும் அதிகார மையம், அதிலிருந்து மக்களைக் காப்பாற்ற ஆயுதமேந்தும் போராளிக் குழு, அவர்களை அழித்தொழிக்க அனுப்பப்பட்ட ஆயுதக் காவல் படைப் பிரிவு ஆகிய நான்கு தரப்புகளை எந்தப் பக்கச் சார்பும் இல்லாமல் முன்வைத்துள்ளது. இந்த நான்கு தரப்புக்கும் இடையிலான முரண்களையும் மோதல்களையும் சித்தரிக்க, கதைக் களம் கோரும் அளவுக்கான ‘சினிமாடிக் லிபர்டி’யை வெற்றிமாறன் எடுத்துக்கொண்டிருக்கிறார். அதன் மூலம் இரண்டாகப் பகுக்கப்பட்ட ஒரு கதையின் முதல் பாகத்தில், பார்வையாளர்கள் எதிர்பார்க்கும் முழுமை, தடையற்ற திரை அனுபவம் ஆகியவற்றைச் சாத்தியமாக்கியிருக்கிறார்.
விமர்சகர்களும் படத்தைப் பார்த்த பொதுமக்களில் பலரும் நேர்மறையான விமர்சனங்களைப் பதிவிட்டனர். ஆனால், கையில் தீ சுட்டுவிட்டதைப் போல் பதறி, ‘விடுதலை’ படத்துக்கு எதிராக வெறுப்பரசியல் செய்யும் பல எதிர் விமர்சனப் பதிவுகள் சமூக ஊடகங்களில் காணக் கிடைக்கின்றன. அவற்றில் பல, பிரபலமான எழுத்தாளர்கள், விமர்சகர்களால் எழுதப்பட்டிருக்கின்றன. ஒரு நேர்மையான திரைப்படத்தின் மீது விமர்சனம் என்கிற பெயரில் ஒடுக்குமுறை மனோபாவத்துடன் பாய்ந்திருக்கின்றனர்.
மக்களுக்கான அரசியலில், ஆயுதம் தாங்கும் ஒரு போராளிக் குழுவை ‘விடுதலை’யில் சித்தரிக்கும் வெற்றிமாறன், அவர்கள் தீவிர இடதுசாரியா, நக்சலா என்கிற எவ்வித அரசியல் அடையாளத்துக்குள்ளும் அமிழ்த்தாமல் பொதுவாகச் சித்தரித்திருக்கிறார். சர்ச்சைகளைத் தவிர்க்க விரும்பும் இயக்குநரது படைப்புச் சுதந்திரமாக இதைக் கொள்வதே சரி.
ஆனால், ‘முன்னாள் நக்சல்களிடமும் இடதுசாரி புனைவெழுத்தாளர்களிடமும் வெற்றிமாறன் ஏன் ஆலோசனை பெற்றுக்கொள்ளவில்லை’ என்பதில் தொடங்கி, ‘வரலாற்றைக் குழப்பி, திரித்திருக்கும் வெற்றிமாறனின் ‘கலைஞன்’ அடையாளம் சந்தேகத்துக்குரியது’ என்பதுவரை பெருங்குரலெடுத்துக் கதறியிருக்கிறார்கள். இன்னும் சிலர், ‘விடுதலை’ படத்தை எப்படி உருவாக்கியிருக்கலாம் என்று இயக்குநருக்குப் பாடம் எடுத்திருக்கிறார்கள்.
ஒடுக்குமுறைகளின் தொகுப்பு
லாப வேட்கை கொண்ட நிறுவனங்களின் நலனுக்காக அதிகார மையத்தால் மக்களின் உரிமைகள் பறிக்கப்படும்போது, வாழ்வாதாரத்துக்காக அவர்கள் நம்பியிருக்கும் நிலத்தையும் அதிலிருக்கும் வளத்தையும் சுரண்ட முற்படும்போது, மக்கள் தன்னெழுச்சியாகக் கூடிப் போராடுகிறார்கள். ஜனநாயக வழிப் போராட்டங்கள் நசுக்கப்படும்போது, மக்கள் போராட்டத்தின் அடுத்த கட்ட வடிவம் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் அதிகார மையமே தீர்மானித்துவிடுவதைக் கடந்த கால வரலாறு நமக்கு உணர்த்தியிருக்கிறது. அப்படித் தோன்றிய பல ஆயுதப் போராட்டக் குழுக்களில் ஒன்றின் தலைவரையும் அவரது வாழ்க்கையின் சில நிகழ்வுகளையும் நினைவூட்டும் விதமாகவே பெருமாள் வாத்தியார் கதாபாத்திரத்தை உருவாக்கியிருக்கிறார் வெற்றிமாறன். அதேவேளை, வாச்சாத்தி கிராமப் பழங்குடி மக்களுக்கு இழைக்கப்பட்ட வன்கொடுமை தொடங்கி, தற்காலத்தின் எட்டுவழிச் சாலையின் பின்னுள்ள அரசியல்வரை எளிய மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளின் ரணங்களை, தேவைக்கேற்ப தொகுத்து திரைக்கதைக்குள் பிரதிநிதித்துவப்படுத்தியிருப்பதுதான் ‘விடுதலை’ படத்தில் இயக்குநர் தேர்ந்துகொண்டுள்ள படைப்புச் சுதந்தரம்.
எல்லை மீறுவது படைப்புச் சுதந்திரம் அல்ல
வரலாற்றுப் புனைவு நாவல்களைத் தழுவியும் அவற்றின் தாக்கத்திலும் உருவான பல சர்வதேசப் படங்களை, அவற்றின் இயக்குநர்கள் தங்களது நேர்மையான, எல்லை மீறாத ‘சினிமேடிக் லிபர்டி’யின் வழியாகவே உலகப் புகழ்பெற்ற படைப்புகளாகத் தந்தார்கள். 1,200 யூதர்களை நாஜி வதைமுகாமிலிருந்து காப்பாற்றும் ஆஸ்கர் ஷிண்ட்லெர் என்கிற தொழிலதிபரின் மனிதநேயத்தைச் சித்தரித்த ‘ஷிண்ட்லெர்ஸ் லிஸ்ட்’ படம், இயக்குநரின் ‘படைப்புப் பிரபஞ்ச’த்துக்கு (Alternate universe) ஒரு சிறந்த உதாரணம். இதைப்போல் அமெரிக்க, ஐரோப்பிய சினிமாவில் பட்டியலிட்டுக்காட்ட போர், வரலாற்றுப் படைப்புகள் ஏராளமாக இருக்கின்றன. அப்படியொரு படைப்பைத் தமிழ் சினிமாவாகத் தரும் படைப்பாளுமை தனக்கு இருப்பதையே ‘விடுதலை’யின் வழியாக வெற்றிமாறன் காட்ட முயன்றுள்ளார்.
இந்தியா–பாகிஸ்தான் பிரிவினையில் நிகழ்ந்த கலவரங்களைக் கதைக் களமாகக்கொண்டு ஏராளமான இந்தியப் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால், எல்லா படங்களையும் பார்வையாளர்கள் ஏற்றுக்கொண்டுவிட வில்லை. பிரிவினையின் ஆறாத வலியை இரு தரப்புக்கும் நடுவில் நின்று பேசிய படங்கள்தான் இன்றைக்கும் நினைவில் நிற்கின்றன. தற்காலத்தில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநரின் ‘படைப்புச் சுதந்திரம்’ கடும் விமர்சனங்களுக்கு உள்ளனதைப் போல், 1995இல் அமெரிக்காவில் வெளியான ‘ஒய்ட் மேன்ஸ் பர்டன்’ (White Man’s Burden) படத்தின் இயக்குநர் விமர்சிக்கப்பட்டார்.
எழுத்தாளர் தன்னுடைய கதையில் எவ்வளவு விஷயங்களை வேண்டுமானாலும் எழுதலாம். ஆனால், ‘எனது திரைவெளிக்கு எதை எடுத்துக்கொள்ள வேண்டுமோ அதை மட்டுமே நான் எடுத்துக்கொள்வேன்,’ என்பதில் கலைக்கு நேர்மையாக இருக்கும் வெற்றிமாறன் போன்ற இயக்குநர்களின் ‘சினிமாட்டிக் லிபர்டி’யை விமர்சிப்பது, அவர்களது கலை வெளிப்பாட்டின் மீதான தாக்குதல். வெற்றிமாறன் எடுத்திருப்பது மக்களின் படம்; அது ஆவணப்படம் அல்ல.
தொடர்புக்கு: jesudoss.c@hindutamil.co.in