

கலை வெளிப்பாட்டில் மேதைமையும் சிந்தனையில் வளமும் ஆழ்ந்த கலை நம்பிக்கையும் கூடிய நம் காலத்தின் கலைஞன், விவான் சுந்தரம். தன் காலத்தின் நெருக்கடிகளுக்குக் கலை முகம் அளித்தவர். விளிம்பு நிலை மனிதர்களிடமும் அதிகாரம் ஏதுமற்ற சாமானிய மனிதர்கள்மீதும் அவர் கொண்டிருந்த அக்கறையும், அவருடைய மாறாக் கொள்கைப் பிடிப்புமே அவருடைய கலை வாழ்வை வழிநடத்தின. மார்ச் மாதத் தொடக்கத்தில் மூளை ரத்த நாளச் சேதம் காரணமாக புது டெல்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட விவான், மார்ச் 29ஆம் தேதி தன்னுடைய 80ஆவது வயதில் காலமானார்.
கலை மகிழ்விப்பதற்கானது அல்ல; மாறாக, காலத்தின் சிடுக்குகளை விரித்துரைப்பதற்கும் விவாதிப்பதற்கும் விசாரிப்பதற்கும் உரிய சாதனம் என்று கருதியவர். அந்த நம்பிக்கையின் உறுதியோடும் கலை ஆற்றலோடும் கோட்டோவியம், வண்ண ஓவியம், சிற்பம், அச்சுருவாக்கம் (பிரிண்ட் மேக்கிங்), நிர்மாணக் கலை (இன்ஸ்டலேஷன்) எனக் கலை வெளியில் தொடர்ந்து நெடும் பயணம் மேற்கொண்டவர். இவருடைய படைப்புகள் உலகமெங்கும் முக்கியக் கண்காட்சிகளில் இடம்பெற்றிருக்கின்றன.
1943, மே 28 அன்று சிம்லாவில் பிறந்தார். இவருடைய குடும்பப் பின்புலம் வளமானது. அப்பா கல்யாண் சுந்தரம், இந்தியச் சட்ட ஆணையத் தலைவராக 1968-1971 வரை பணியாற்றியவர். தாயார் இந்திரா ஷெர்-கில், இந்திய நவீனக் கலை உருவாக்க முன்னோடியும் முதன்மைப் படைப்பாளியுமான அம்ரிதா ஷெர்-கில்லின் சகோதரி.
மாணவர் விவான்
பரோடா எம்.எஸ். பல்கலைக்கழகத்தின் நுண்கலைகள் துறையில் 1961 முதல் 1965 வரை விவான் ஓவியப் படிப்பு பயின்றார். அப்போது அங்கு ஓவிய ஆசிரியராக இருந்த ஓவியர் குலாம் மொஹம்மது ஷேக் அவரைப் பற்றிய கல்லூரிப் பருவத்து மனப்பதிவை ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்தியுள்ளார்: “1961ஆம் ஆண்டு விவான் படிக்க வந்த காலத்திலிருந்து இன்றுவரை, அவர் எனக்கு ஒரு நண்பராகவும், மனித சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளிலும் கலை முயற்சிகளிலும் கைகோத்து உறுதியோடு உடன் பயணிக்கும் தோழராகவும் இருந்திருக்கிறார். பன்முகக் கலாச்சாரம் கொண்ட இந்தியா என்பதை நிலைநிறுத்துவதற்கான ஒரு கூட்டமைப்பை முன்னின்று உருவாக்கியவர். கலை சமூகத்தின் குரலாகத் தொடர்ந்து ஒலித்தவர். கோட்டோவியங்கள், வண்ண ஓவியங்கள், பிரம்மாண்டமான நிர்மாணக் கலை ஆக்கங்கள் எனப் பல்வேறு ஊடகங்களினூடாகத் தன் வாழ்நாள் முழுவதும் சமூகப் பிரச்சினைகளுக்குக் கலை வடிவம் அளித்துவந்தார். மேலும், தன்னுடைய பல்வேறு கலை ஊடக வெளிப்பாடுகளில் மட்டுமல்லாது, சக கலைஞர்களிடமும் தொடர்ந்த உரையாடல்கள் மூலம் இந்த வித்துகளை விதைத்தபடி இருந்தார்.”
கவிதை பாதிப்பில் கலை
மாணவனாக இருந்த காலத்திலிருந்தே, இலக்கிய வாசிப்பிலும் மார்க்ஸியத் தத்துவ வாசிப்பிலும் ஆழமான ஈடுபாடு கொண்டிருந்தார் விவான். பரோடாவில் பட்டப் படிப்பை முடித்துவிட்டு, லண்டன் ‘ஸ்லேடு ஸ்கூல் ஆஃப் பைன் ஆர்ட்’இல் மேற்படிப்பை மேற்கொண்டபோது அவருடைய இந்த ஆர்வங்கள் தீவிரமடைந்தன. அக்கால கட்டத்தில் ‘பாப் ஆர்ட்’ இயக்கம் வலுப்பெற்றபோது அதன் குணாம்சங்கள் இவரைப் பெரிதும் ஈர்த்தன. மேலும், முதலாளித்துவம், நுகர்வுக் கலாச்சாரம், ஏகாதிபத்தியத்துக்கு எதிராக 1968இல் ஐரோப்பா முழுவதும் நிகழ்ந்த மாணவர் போராட்டங்களில் அவர் ஈடுபட்டார். அரசியல் கூட்டங்களிலும் கலந்துகொண்டார். இக்காலகட்டமே தன்னை உருவாக்கியது என்கிறார் விவான்.
பாப்லோ நெருதா 1945இல் எழுதி, 1947இல் புத்தகமாக வெளிவந்த ‘மாக்சு பிக்சுவின் உயரங்கள்’ (ஹைட்ஸ் ஆஃப் மாக்சு பிக்சு) என்கிற நீள்கவிதையின் பாதிப்பிலிருந்து உருவாக்கிய அவருடைய ஆரம்ப காலக் கோட்டோவியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. சிலேயில் உழைப்பாளர் இயக்கங்கள் எழுச்சி பெற்ற காலகட்டத்தில் நெருதா எழுதிய மிகச் சிறந்த நீள்கவிதை இது. லத்தீன் அமெரிக்க வரலாற்றின் நெடுகிலும் அடக்குமுறைக்கு எதிராக மக்கள் எழுச்சி காலம்காலமாக உருவாகி வந்திருப்பதை, மார்க்ஸியப் பார்வையோடும் கவித்துவத்தோடும் வெளிப் படுத்தும் வகையில் வரலாற்றினூடாக மேற்கொண்ட நெடும் பயணமே இக்கவிதை.
கலையும் சமூக நிகழ்வுகளும்
29ஆவது வயதில் விவான், நெருதாவின் கவிதைத் தலைப்பிலேயே உருவாக்கிய இவ்வரிசை ஓவியங்கள், இளம் வயதிலேயே அவர் கொண்டிருந்த தனித்துவமான கலை ஆளுமைக்கு அடையாளமாக இருக்கின்றன. இவை குறுங்கதை அம்சமும், உரையாடல் தன்மையும் கொண்டவை. மிக நுட்பமாக இழையூட்டப்பட்ட கோடுகளா லானவை. பேனா-மையினால் தாளில் வரையப்பட்டவை இச்சித்திரங்கள். நினைவுகள், வரலாறு, அடையாளம் ஆகியவற்றைப் பொருள்ரீதியாகக் கலை விசாரணைக்கு உட்படுத்துவதன் மூலம் படைப்பில் ஆழமாக வேர்கொண்டுள்ளன. வரலாற்றின்மீது புது வெளிச்சம் பாய்ச்சும் படைப்புகள் இவை.
1991இல் அவர் உருவாக்கிய ‘எஞ்சின் ஆயில்’ வரிசை ஓவியங்கள் இராக்கின் எண்ணெய் வளத்தின்மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக அமெரிக்கா மேற்கொண்ட யுத்தத்தைக் குறிப்பன. அதேபோல, மும்பை கலவரத்தில் பலியானவர்கள் குறித்த இன்ஸ்டலேஷன் எனத் தொடர்ந்து தன் காலத்திய பிரச்சினைகளைக் கலை விவாதத்துக்கு உட்படுத்தியவர். அதேவேளை, அவருடைய வெளிப்பாடுகள் கலை மேன்மை குன்றாதவை. அந்நேரத்திய பரபரப்புகளில் கவனம் செலுத்துபவர் என்கிற விமர்சனத்துக்கு, “காலத்தின் நெருக்கடிகளையே என் கலையின் மூலம் எதிர்கொள்கிறேன்” என்றார் விவான்.
இவர் எந்த நிறுவனத்திலும் முறையான ஆசிரியப் பணி எதுவும் மேற்கொண்டிருக்கவில்லை என்றாலும், கலைக் கல்வி மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இளைஞர்களிடமும் கலை ஆசிரியர்களிடமும் உரையாடல்கள் நிகழ்த்தியபடி உத்வேகமூட்டுபவராகவும், சரியான திசையில் வழிகாட்டும் சக்தியாகவும் இருந்தார்.
விவான் சுந்தரம், தன் வாழ்நாள் முழுவதும் ஒரு கலைஞனாக மட்டுமல்ல; ஒரு செயல்பாட்டாளராகவும் அமைப் பாளராகவும் ஆவணப்படுத்துபவராகவும் உரையாடல்களின் வழி விவாதிப்பவராகவும் கலைக் காப்பாளராகவும் இளம் கலைஞர்களுக்கு உத்வேகமளிக்கும் சக்தியாகவும் அர்ப்பணிப்போடும் ஆற்றலோடும் இயங்கியவர். சமகால இந்தியக் கலை அரங்கில் ஆற்றல்மிக்க ஓர் எழுச்சி வடிவம், விவான் சுந்தரம்.
- சி.மோகன்