Last Updated : 31 Jul, 2014 08:00 AM

 

Published : 31 Jul 2014 08:00 AM
Last Updated : 31 Jul 2014 08:00 AM

மொழியை விழுங்கும் புதிய சுனாமி

தொழில்நுட்பத்தின் வழியே கொள்ளும் உறவில் மொழிக்கு இடமேது?

வெகு விரைவில் மனித இனங்கள், அதாவது தொழில்நுட்பம் என்னும் அசுரனின் வலையில் விழுந்திருக்கும் மனித இனங்கள், பேச்சையும் செவித்திறனையும் இழந்துபோனால் அதற்கு ஒப்பாரி வைக்கக்கூட இயலாமல் போகும். குறுந்தகடு, ஃபேஸ்புக், ட்விட்டர் யுகத்தில் மொழி என்பது கண்டந்துண்டமாய்ச் சிதிலமடைந்துவிட்டது.

'குயின்'ஸ் இங்கிலீஷ்' என்ற பெருமை கொண்ட ஆங்கில மொழி, சொற்களை இழந்து உருமாறிப்போனது நினைத்துப்பார்க்க முடியாத சோகம். மூன்று எழுத்து, நான்கு எழுத்து வார்த்தைகளெல்லாம் ஒற்றை எழுத்துக்களாகச் சுருங்கி நிற்கும் வாக்கியங்களுக்குப் பழகிப்போன இளைய தலைமுறைக்கு இனி ஒழுங்காக ஆங்கிலம் எழுத முடியுமா என்பது சந்தேகம்.

தமிழில் இன்னும் அத்தனை அவலம் வராவிட்டாலும், மின்னஞ்சல் வந்த பிறகு, தாள் எடுத்துக் கடிதம் எழுதும் பழக்கமே போய்விட்டது. கடிதம் எழுதுவதே ஒரு கலையாக இருந்த ஒரு அற்புதக் காலம் இருந்தது. இரண்டே வரியானாலும் அன்பும் பாசமும் கரிசனமும் கனிவும் இழையோடும் சொற்கள் கோத்த கடிதங்கள். கண்ணீர் கக்கும், விரகம் தகிக்கும், ஏக்கம் மிளிரும் கடிதங்கள்.

ஒரு அஞ்சல் அட்டையில் வெளிப்படையாய் எழுதப்பட்டிருக்கும் அந்தரங்கங்கள். அதைக் கொண்டு வரும் தபால்காரர் அதைப் படித்து நமது உணர்வுகளைப் பகிர்ந்துகொண்ட தருணங்கள் அசாதாரண உறவுப் பாலங்களை ஏற்படுத்தியிருக்கின்றன. கைப்பட எழுதும் அஞ்சல் அட்டையில் வெளிப்படும் நட்பும் நேயமும் ஒரு பண்பின், பண்பாட்டின் வெளிப்பாடாகவே இருந்தது.

திண்ணைப் பேச்சின் புது வடிவம்

இப்போது நமது உறவுகளெல்லாம் ஃபேஸ்புக் வாயிலாக; திண்ணைப் பேச்சின் புதிய வடிவம். ஆனால், இது ஒரு போதை தரும் திண்ணை. அதன் வலையில் விழுந்தவர்களுக்கு அதன் முகத்தில் விழித்தால்தான் அன்றைய தினம் நகரும். அது ஒரு இலவச சாளரம்- தம்மையே விளம்பரப்படுத்திக்கொள்ள, அல்லது தேவையற்ற விவாதங்களைக் கிளப்பி ஒருவர் மற்றவரைத் தூற்ற. ஆக்கபூர்வமான நேரமெல்லாம் விரயமாகி, புகைப்படங்கள் நிரம்பிய - அப்பாவுடன், அம்மாவுடன், நாயுடன், சிநேகிதர்களுடன் விருந்தில் எடுத்த புகைப்படங்கள் - பக்கங்களைப் பார்த்து யாருக்கு என்ன லாபம் என்று புரியவில்லை.

ஏதோ ஒரு கற்பனை உலகத்தை நிஜமற்ற பொய்யான உலகத்தை மெனக்கெட்டு சிருஷ்டிப்பதுபோல் ஒரு மாயை விரிகிறது. நெருக்கமான எதையோ இழந்ததற்குப் பரிகாரமாக, அதில் நவயுகம் தன்னைப் புதுப்பித்துக்கொள்ளப் பார்க்கிறதோ?

ஃபேஸ்புக் அறிமுகமானபோது அது மிகப் பெரிய புரட்சியாக இருந்தது. இப்பவும் ஃபேஸ்புக்கில் சிலர் முக்கியமான உலக விஷயங்களை/ இலக்கியங்களை ஆராய்ந்து பகிர்ந்துகொள்வது அறிவார்ந்த சுவாரசி யத்தை ஏற்படுத்துவது உண்மை. அரிய பணிகள் செய்யும் பலரைப் பற்றிய தகவல்கள் அதற்கென ஒரு வலை பின்ன உதவுகிறது. ஆனால், அநேகமாக ஃபேஸ்புக் தேவையற்ற அக்கப்போர் பேசுவதற்கே உபயோகிக்கப்படுகிறது. கணிசமான நேரத்தை விழுங்கிக்கொள்கிறது. நேரடியான மனிதத் தொடர்பே அற்றுப்போகும் நிலையில் நாம் இருக்கிறோமோ என்று என்னை அச்சுறுத்துகிறது.

ஜப்பானில்

ஒரு நிகழ்வில் பங்கேற்க 2001-ல் ஜப்பான் சென்றிருந்தேன். பரபரப்பான, சுறுசுறுப்பான நகர்ப்புறத்துச் சூழலிலும் ஓர் அமைதியும் நம்ப முடியாத துப்புரவும் பிரமிப்பை ஏற்படுத்தின. ரயில் பயணங்களில் புத்தகங்களைப் படித்தபடி ஜப்பானியர் இருந்தனர். சத்தமான பேச்சில்லை. உரத்த வாக்குவாதங்களை நான் கேட்கவில்லை. பாரம்பரியப் பண்பாட்டில் வளர்ந்த பெரியவர்களுக்கும் நவீன உலகத் தாக்கத்தில் இருந்த இளைய தலைமுறைக்கும் பெரிய இடைவெளி ஏற்பட்டுப்போனதால் புதிதாகச் சிக்கல்கள் பல கிளம்புவதாக நான் சந்தித்த சில பெண்கள் சொன்னார்கள்.

முற்றிலும் மாறியிருக்கும் இன்றைய இளைய தலைமுறையினரின் உலகத்தை ஜப்பானிய எழுத்தாளர் ஹருக்கி முராகாமி படம்பிடிப்பார். ஜப்பானிலா இப்படி என்று வியப்பு ஏற்படும். அவரது பல நாவல்களைப் படித்திருக்கும் எனக்கு, அவர் வர்ணித்திருக்கும் வகையில் இளைஞர்கள் அங்கு 2001-ல் காணப்படவில்லை. நான் அங்கு இருந்தது ஐந்தே நாட்கள். நான் பார்த்த வரையில் சூழலில் ஓர் அமைதி இருப்பதாகத் தோன்றிற்று.

பணிக்குச் சென்று வீடு திரும்பும்போது ரயிலில் பயணம் செய்பவர்களின் கையில் தப்பாமல் ஒரு புத்தகம் இருப்பதையும் அதில் அவர்கள் ஆழ்ந்துபோவதும்தான் எனக்குப் பிரமிப்பாக இருந்தது. கடந்த பத்துப் பதினைந்து ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் கணினித் தொழில்நுட்பப் புரட்சியில் ஜப்பான் வெகுவாக மாறிப்போனதாகத் தெரிகிறது.

இன்று புத்தகம் படிப்பவர்களே அங்கு இல்லை என்று சமீபத்தில் ஓர் எழுத்தாளர் புலம்பியிருக்கிறார். மிக நவீனக் கைபேசியிலேயே எல்லோருடைய பொழுதுபோக்கு மற்றும் அறிவார்ந்த வேட்கைகள் சமாதானமாகி விடுகின்றன என்கிறார். ஒருவருக்கொருவர் பேசுவதுகூட நின்றுபோனது என்கிறார்.

விலகிப்போன மனிதர்கள்

ஜப்பானிலிருந்து ஹாங்காங் சென்றபோது 2001-லேயே அங்கு நான் யார் கையிலும் புத்தகத்தைப் பார்க்கவில்லை. அறிவியல் புனைகதைத் திரைப்படமொன்றைப் பார்ப்பது போல அமானுஷ்ய உணர்வு ஏற்பட்டது. தெருவில் போவோர் வருவோர் கைபேசியில் யாரோ முகம் தெரியாத குரலுடன் பேசியபடி இருந்தார்கள். அக்கம்பக்கத்து நடைமனிதர்களுடன் தொடர்பே இல்லாதவர்களாகத் தோன்றினார்கள். இந்தியாவில் கைபேசி அப்போது அவ்வளவு சரளமாகவில்லை.

ஹாங்காங்கில் நான் கண்ட காட்சி எனக்கு மிகவும் பயங்கரமாகத் தோன்றிற்று. யதார்த்த உலகத்திலிருந்து மனிதர்கள் விலகிப் போனதாகப் பட்டது. இப்போது பெங்களூருவில் தெருவில் நடக்கும்போது அதே வகையான காட்சியைக் காண்கிறேன். நேரில் சந்திக்கும்போது பேசத் திணறும் இளைஞர்கள் கைபேசியில் மணிக்கணக்காகப் பேசுகிறார்கள், யாரிடமோ; ஆகாயத்தில் உலா வரும் தேவதைகளுடன் பேசுவதுபோல. அல்லது செவியில் ஒலிக் கருவியைப் பொருத்திக்கொண்டு, சதா சர்வ நேரமும் சினிமாப் பாட்டு கேட்கிறார்கள். எனக்கு யாருடனும் நேருக்கு நேர் பேச விருப்பமில்லை என்கிற சமிக்ஞை விடுவதுபோல.

முன்பு வீட்டில் பெரியவர்கள் இருப்பார்கள் இழுத்து வைத்துப் பேச. அவர்களும் காணாமல் போனார்கள். அவர்கள் இல்லாமல் போனதில் கதைசொல்ல எவருமில்லை. அதற்குத் தேவையுமில்லை. இப்போது பிறக்கும் குழந்தைகள் இணையத்தில் புலிகள். இரண்டு வயது குழந்தைகள் வலைதளங்களை மேய்கின்றன. ராமாயணமும் மகாபாரதமும் அனிமேஷனில் தெரிகின்றன. இன்றில்லாவிட்டாலும் ஒருநாள் பேச்சுக்காக ஏங்கப்போகிறோம் நாம். பேச்சு மொழி வழக் கொழிந்துபோனால், ஒப்பாரி வைக்கக்கூட முடியாது; அதற்கும் சொற்கள் தேவை.

- வாஸந்தி, எழுத்தாளர், பத்திரிகையாளர்.
தொடர்புக்கு: vaasanthi.sundaram@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x