

அமைப்புகளால் அணிதிரட்டி நடத்தப்படும் போராட்டங்களாக அல்லாமல், மக்கள் தன்னெழுச்சியாகப் போராட வருவது உலக வரலாற்றில் புதிதல்ல. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுப் போராட்டம், இலங்கை மக்கள் போராட்டம் என சமகாலத்திலும் நிறைய உதாரணங்கள் உண்டு.
ஆனால் 115 ஆண்டுகளுக்கு முன்னால், காலனி ஆதிக்கக் காலத்தில் தமிழ் மண்ணில் அப்படி ஒரு மக்கள் எழுச்சி நடந்துள்ளது என்பது பலருக்கும் தெரியாது. 1908 மார்ச் 13 அன்று திருநெல்வேலியில் அந்த எழுச்சி ஏற்பட்டது. ஆனால், அதை ‘திருநெல்வேலிக் கலகம்’ என்றே ஆங்கிலேயர் எழுதிவைத்தனர். மாபெரும் சிப்பாய்ப் புரட்சியையே ‘சிப்பாய்க்கலகம்’ என்று குறிப்பிட்டவர்கள் அல்லவா அவர்கள்!
மையம் கொண்ட புயல்: 1905இல் வங்கத்தை மத அடிப்படையில் இரண்டாகப் பிரித்து, சுதேசி இயக்க வெடிகுண்டைப் பற்ற வைத்தார் கர்சன் பிரபு; வங்கம் கொந்தளித்து எழுந்தது. வங்கத்தின் அந்த சுதேசி இயக்க முழக்கத்தைத் தூத்துக்குடியும் எதிரொலித்தது. ‘தூங்குமூஞ்சி மாகாணம்’ என்று அன்றைய போராட்ட நாள்களில் பெயர் பெற்றிருந்த மெட்ராஸ் மாகாணத்தில் சுதந்திரப் புயல் தூத்துக்குடியில் மையம் கொண்டிருந்தது.
அதன் இயக்குவிசையாக மக்கள் தலைவர் வ.உ.சிதம்பரனார் இருந்தார். தூத்துக்குடியில் சுழன்றடித்த அந்தப் புயல் அங்கிருந்த ஆங்கிலேயரின் கோரல் (Coral) ஆலைத் தொழிலாளர்களையும் கவர்ந்திழுத்தது. 1908 பிப்ரவரி 27 அன்று ஊதிய உயர்வு, வார விடுமுறை, இதர விடுமுறை வசதிகள் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து கோரல் ஆலையில் வேலைநிறுத்தம் தொடங்கியது.
‘கோரல் மில்லின் கூலியாட்கள்/ வாரதில்லை; வயிற்றினிலென்றும்/ அடிப்பதனாலும் அளவறத் துன்பம்/ தடிப்பதனாலும் சம்பளங் கூட்டித்/ துன்பம் நீப்பின் தொடருவோம் என்று/ பின்பகல் நின்றனர்...’ என்று வ.உ.சி. தனது சுயசரிதையில் எழுதினார்.
வந்தே மாதரம் முழக்கம்: வேலைநிறுத்தம் தொடங்கியவுடன் திருநெல்வேலி ஆட்சியர் தூத்துக்குடிக்குக் காவல் படையை அனுப்பினார். கூட்டங்களைத் தடை செய்து, 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆலை நிர்வாகம் அசைந்து கொடுக்காததால் வேலைநிறுத்தம் தொடர்ந்தது. தொழிலாளர்கள் தினசரி தூத்துக்குடி நகர வீதிகளில் ‘வந்தே மாதரம்’ முழக்கமிட்டபடி ஊர்வலங்களை நடத்தினர்.
வ.உ.சி.யும் சுப்பிரமணிய சிவாவும் நாள்தோறும் கூட்டங்களில் பேசினர். தொழிலாளர்களின் முழக்கம் அவர்களது கோரிக்கை சார்ந்ததாக அல்லாமல் ‘வந்தே மாதரம்’ எனும் மாபெரும் முழக்கமாக இருந்தது. அதன் மூலம் அப்போராட்டம் வெறும் பொருளாதாரக் கோரிக்கையில் முடங்கி நிற்காமல், அந்நிய ஆட்சி எதிர்ப்பு என்ற அரசியல் முகம் பெற்றது. போராட்டம் வென்றது; கோரிக்கைகள் நிறைவேறின.
ஆங்கிலேயர் மேலும் ஆத்திரமடையும் வண்ணம், பிபின் சந்திரரின் விடுதலையைக் கொண்டாட வ.உ.சி. முடிவுசெய்தார். 1908 மார்ச் 9 அன்று அந்த விழா நடைபெறும் என அறிவித்தார். பேச்சுவார்த்தைக்கு என்று அவரையும் சிவாவையும் திருநெல்வேலிக்கு அழைத்து மார்ச் 12 அன்று மாலை கைதுசெய்தது ஆங்கிலேய நிர்வாகம்.
முதல் அரசியல் வேலைநிறுத்தம்: தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளர்கள் 7ஆம் தேதிதான் மீண்டும் பணிக்குத் திரும்பியிருந்தனர். எனினும், வ.உ.சி. கைதுசெய்யப்பட்டதை அறிந்ததும் தன்னெழுச்சியாக மீண்டும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். இந்தியாவில், பொருளாதாரக் கோரிக்கை எதுவும் இல்லாமல் நடைபெற்ற முதல் அரசியல் வேலைநிறுத்தம் அதுதான்.
1908 ஜூலை மாதம் 23 அன்று திலகர் கைதுசெய்யப்பட்டதை எதிர்த்து, பம்பாய் தொழிலாளர்கள் நடத்திய ஆறு நாள் வேலைநிறுத்தம்தான் இந்தியாவின் முதல் அரசியல் வேலைநிறுத்தம் எனப் பல வரலாற்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. அது சரியல்ல. அதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பாகவே தூத்துக்குடி தொழிலாளர்கள் களத்தில் இறங்கிவிட்டனர்.
பற்றியெரிந்த நெல்லைச் சீமை: திருநெல்வேலியிலும் மாணவர்களும் பொதுமக்களும் ஊர்வலமாகப் புறப்பட்டனர். நெல்லைச் சீமை போர்க்களமானது. நெல்லையிலும் தூத்துக்குடியிலும் மூன்று நாள்கள் போராட்டம் நீடித்தது. காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. மாவட்ட ஆட்சியர் பொறுப்பிலிருந்த ஆஷ் துரை, நேரடியாகக் குதிரையில் வந்து தன் ரிவால்வரை எடுத்துச் சுட்டார். ரொட்டிக் கடைத் தொழிலாளி, இஸ்லாமியர், ஒடுக்கப்பட்டவர், கோயில் பூசாரி என நான்கு பேர் கொல்லப்பட்டனர்.
வெவ்வேறு பிரிவினரின் ரத்தம் ஒன்றாக மண்ணில் கலந்தது. எளிய மக்களின் போராட்டம் இது என்பதற்கான சான்று இது. உயர்தட்டு மக்கள் இப்போராட்டத்துக்கு எதிராக நின்றனர். திருநெல்வேலி எழுச்சி பற்றி விரிவாக ஆய்வுசெய்து ‘திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி.யும் 1908’ என்கிற நூலை ஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதி எழுதியுள்ளார்.
வ.உ.சி. என்கிற மாமனிதர் மீது மக்கள் கொண்ட அன்பினால் இந்த எழுச்சி ஏற்பட்டது. சுதந்திரத்துக்காகவும் தற்சார்புப் பொருளாதாரத்துக்காகவும் தம் வாழ்வை அர்ப்பணித்த அந்த மாமனிதரின் அடியொற்றியே பின்னாள்களில் தற்சார்புப் பொருளாதாரத்தை நிலைநிறுத்த, ‘நவீன இந்தியாவின் கோயில்கள்’ என நேரு குறிப்பிட்ட பொதுத்துறை நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன.
விதை நெல்லை விற்றுத் தின்பதைப் போலப் பொதுத்துறை நிறுவனங்களை வலிந்து தனியாரிடம் விலைபோய்க் கொண்டிருக்கின்ற இந்த நாளில், வ.உ.சி.யும் திருநெல்வேலி எழுச்சியும் நமக்கு அறிவுறுத்தியது எதை என வரலாற்று உணர்வுடன் நாம்தான் யோசிக்க வேண்டும்.
மார்ச் 13: திருநெல்வேலி எழுச்சி 115ஆம் ஆண்டு நிறைவு
- ச.தமிழ்ச்செல்வன் | எழுத்தாளர், பண்பாட்டுச் செயல்பாட்டாளர்; தொடர்புக்கு: tamizh53@gmail.com