களத்துக்கு வெளியிலும் தொடரும் யுத்தம்

களத்துக்கு வெளியிலும் தொடரும் யுத்தம்
Updated on
3 min read

இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் முதல் பெண் தலைவராக முன்னாள் தடகள வீராங்கனை பி.டி.உஷா தேர்வு செய்யப்பட்டபோது, பெண்ணுக்குக் கிடைத்த பெரும் ஊக்கம் இது என விளையாட்டு உலகம் பெருமிதத்தில் ஆழ்ந்தது. அவர் பதவியேற்று இரண்டு மாதங்கள் ஆவதற்குள் நாட்டின் முன்னணி மல்யுத்த வீராங்கனைகள் ஒன்றிணைந்து அதிகாரத்துக்கு எதிராக டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தியது அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பைச் சேர்ந்த அதிகாரிகள், பயிற்சியாளர்கள் தங்களிடம் சர்வாதிகாரத்தனமாக நடந்துகொள்வதாகவும், பாலியல் அத்துமீறல்களில் ஈடுபடுவதாகவும் பி.டி.உஷாவுக்குக் கடிதம் மூலம் புகார் தொடுத்துவிட்டு வீராங்கனைகள் போராட்டத்தில் இறங்கினர்.

வீரர்களும் போராட்டக் களத்தில் அவர்களுக்கு உறுதுணையாகக் களமிறங்கினர். கடந்த 10ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவராகப் பதவி வகிக்கும் பாஜக எம்.பி. பிரிஜ் பூஷண் சரண் சிங் பதவி விலக வேண்டும், பாலியல் குற்றங்களை விசாரிக்கத் தனி குழுவை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து தங்கள் போராட்டத்தை ஆவேசமாகத் தொடர்ந்தனர்.

போராட்டமும் பின்னணியும்: இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கும் வீரர்களுக்கும் இடையேயான நல்லுறவு 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் நிறைவுற்றதிலிருந்தே சுமுகமாக இல்லை. தேசிய அளவிலான தொடர்களில் அதிகம் பங்கேற்க வேண்டும் எனக் கட்டாயப்படுத்துவது, போதுமான பயிற்சி வழங்கப்படாதது, நிறைய உள்நாட்டுத் தொடர்களில் பங்கேற்க வற்புறுத்தப்படுவது, அதனால் சர்வதேசப் போட்டிகளில் கவனம் செலுத்த முடியாமல் போவது போன்ற காரணங்களால் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பின் நிர்வாகக் குழுவைக் கலைக்க வேண்டுமென்ற கோரிக்கை, வீரர்கள் மத்தியில் எழுந்தது. பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களும் பகிரங்கமாகின.

உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடரில் இரண்டு முறை பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையான வினேஷ் போகத் தலைமையில் தொடங்கிய இந்தப் போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாக் ஷி மலிக், பஜ்ரங் பூனியா, ரவிகுமார் தாஹியா ஆகியோருடன் 20க்கும் அதிகமான வீரர், வீராங்கனைகள் கைகோத்தனர். அதிகாரிகள், பயிற்சியாளர்கள் மீதான இந்தக் குற்றச்சாட்டை மல்யுத்தக் கூட்டமைப்பு மறுத்திருக்கிறது. ஆனால், நாடு முழுவதும் கவனம் ஈர்த்த இந்தப் போராட்டத்துக்கு அரசு முகங்கொடுக்க வேண்டியிருந்தது.

முதல் படியாக மல்யுத்தக் கூட்டமைப்பின் அனைத்து நடவடிக்கைகளையும் தற்காலிகமாக நிறுத்திவைத்து அன்றாடப் பணிகளை நிர்வகிக்க, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவை அமைத்தது மத்திய விளையாட்டுத் துறை அமைச்சகம். இந்தக் குழு ஒரு மாத காலத்துக்குள் முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

அதேவேளையில், மேற்பார்வைக் குழுவை அமைப்பதற்கு முன்பு தங்களுடன் கலந்தாலோசித்து ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்கிற வீரர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

மத்திய அமைச்சகம் தன்னிச்சையாக அமைத்த குழுவின் விவரங்கள் வெளியாகின. இந்தக் குழுவில் மேரி கோம் உடன் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத், முன்னாள் பாட்மின்டன் வீராங்கனை திருப்தி முர்குண்டே, 'ஒலிம்பிக் பதக்க மேடை இலக்கு திட்ட'த்தின் முன்னாள் சிஇஓ ராஜகோபாலன், இந்திய விளையாட்டு ஆணையத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநர் ராதிகா ஸ்ரீமன் ஆகியோர் இடம்பெற்றிருப்பதற்கு வீரர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

புகார் கொடுக்கப்பட்டு ஒரு வாரம் கடந்தும் முக்கியத் தலைவர்கள் சிலர் அமைதி காப்பதால் இந்தப் பிரச்சினை நீர்த்துப் போகச் செய்யப்பட்டுவிடுமோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை.

மறுக்கப்படும் நீதி: திரைத் துறை, ஊடகம், அரசியல் என பல்வேறு துறைகளைச் சேர்ந்த பெண்கள் தங்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட பாலியல் குற்றங்களைப் பொதுவெளியில் சொல்லத் தொடங்கிவிட்டனர். விளையாட்டுத் துறையும் இதற்கு விதிவிலக்கல்ல. இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பயிற்சியாளர்களால் பாலியல் பிரச்சினைகளைச் சந்திக்கும் வீராங்கனைகள் ஏராளம்.

அமெரிக்க ஜிம்னாஸ்டிக் கழகத்தில் 27 ஆண்டுகளாக மருத்துவராக இருந்த லாரி நாசரின் பாலியல் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க ஜிம்னாஸ்டிக் வீராங்கனைகள் வெகுண்டெழுந்த சம்பவம் உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவில் கடந்த 2010-2019 காலகட்டத்தில் மட்டும் இந்திய விளையாட்டு ஆணையத்தில் பதிவுசெய்யப்பட்ட பாலியல் குற்றங்கள் சம்பந்தமான 49 புகார்களில் 29 புகார்கள் பயிற்சியாளர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்டவை. இதில் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இருவரது ஒப்பந்தங்கள் முடக்கப்பட்டுள்ளன.

இந்திய விளையாட்டுத் துறையில் பதிவு செய்யப்படும் பெரும்பாலான புகார்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை. அப்படி நடவடிக்கை எடுக்கப்படும்பட்சத்தில் தற்காலிகப் பணியிடை நீக்கம், துறை மாற்றம் போன்றவற்றை மட்டும் அமல்படுத்திவிட்டு அதே பயிற்சியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்குவது வாடிக்கையாகிவிட்டது. தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குற்றங்கள் தொடர்வதற்கு வழிவகுக்கிறது.

குற்றங்களை வெளியில் சொல்வதால் விளையாட்டு வீரர், வீராங்கனைகளின் எதிர்காலம்தான் பாதிக்கப்படுகிறதே தவிர, தவறு இழைப்பவர்களுக்குக் கடுமையான தண்டனையோ, இழப்போ ஏற்படுவதில்லை. மிகுந்த தயக்கத்துடன் புகார்களை வெளியில் சொல்ல முன்வரும் வீரர், வீராங்கனைகளுக்குக் குறைந்தபட்ச ஆறுதல்கூட கிடைப்பதில்லை என்பதே உண்மை.

”பயிற்சியாளர்கள் பெண்களைத் துன்புறுத்துகின்றனர். அதிகாரிகளின் ஆதரவோடு நடுவர்களும்கூட பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள். வீராங்கனைகள் மட்டுமின்றி இளம் வீரர்களுக்கும் இங்கு பாதுகாப்பான சூழல் இல்லை. அடுத்த தலைமுறை வீரர்களின் நலனுக்காக எங்களது விளையாட்டுப் பயணத்தைப் பணயம் வைத்துத்தான் குற்றங்களை வெளியில் சொல்ல முன்வந்துள்ளோம்” என மூத்த மல்யுத்த வீராங்கனைகள் தெரிவித்துள்ளனர்.

சர்வதேச மல்யுத்தக் களத்தில் இந்திய வீராங்கனைகள் தடம்பதிக்கத் தொடங்கி சில ஆண்டுகளே ஆகின்றன. 2016ஆம் ஆண்டு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்ற ஒலிம்பிக் தொடரில் வெண்கலப் பதக்கம் வென்று புதிய பாதை வகுத்த சாக் ஷி மலிக்கைப் பின்தொடர்ந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் குறிப்பாக ஹரியாணாவில் இருந்து மல்யுத்த வீராங்கனைகள் சாதிக்கத் தொடங்கியுள்ளனர். மற்றொருபுறம் குடும்பத் தடைகளைத் தாண்டி நாட்டுக்காகப் போட்டிகளில் மோதும் வீராங்கனைகள் தங்களது உரிமைக்காகவும் பாதுகாப்புக்காகவும் போராடும் சூழல் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது!

- கார்த்திகா ராஜேந்திரன்; தொடர்புக்கு: karthiga.rajendran@hindutamil.co.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in