

கத்தார் நாட்டில் நடைபெற்றுவரும் 2022 ஃபிஃபா கால்பந்து உலகக் கோப்பைப் போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. அர்ஜென்டினா, பிரான்ஸ் ஆகிய ஜாம்பவான்களுடன் குரோஷியா, மொராக்கோ அணிகள் அரையிறுதியை எட்டியது, இந்த உலகக் கோப்பையின் இனிய ஆச்சரியம். வரும் ஞாயிறு அன்று நடைபெறவிருக்கும் இறுதிப் போட்டியில், முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினாவும் நடப்பு சாம்பியன் பிரான்ஸும் மோதவிருக்கின்றன. ஒட்டுமொத்த உலகின் கவனமும்இறுதிப் போட்டி நடைபெறவிருக்கும் லுஸேல் மைதானத்தின்மீது குவிந்திருக்கிறது.
தடைகளும் எதிர்க்குரல்களும்: காதல் - மத, இன, மொழி, பாலின வேறுபாடுகள் அறியாதது கால்பந்து விளையாட்டு. ஆனால், உலகக் கோப்பையின் அதிகாரபூர்வ கீதமான, ‘Better Together’ மூலம் எல்லோரும் ‘ஒன்றிணைந்து சிறப்படைய’ ஃபிஃபா அழைத்தாலும், பால் புதுமையினர் பார்வையாளராக வருவதற்குக் கத்தார் தடை விதித்தது நெருடலைத் தந்தது. தொழில்நுட்பரீதியாகவும் கட்டமைப்பு வசதிகளிலும் முன்னேறியிருக்கும் கத்தார், பழமைவாதங்களில் தங்கிவிட்டிருப்பதற்கு இதுவே சான்று.
கத்தாரின் இந்த நிலைப்பாட்டுக்குத் துணைநின்ற ஃபிஃபாவைக் கண்டித்து, ஜப்பானுக்கு எதிரான போட்டிக்கு முன்னதாக, ஜெர்மனி வீரர்கள் தங்கள் கைகளால் வாயை மூடியபடி ஒளிப்படம் எடுத்துக்கொண்டு எதிர்ப்பைப் பதிவுசெய்தனர். ஹிஜாபுக்கு எதிராக ஈரான் பெண்கள் நடத்திவரும் போராட்டத்துக்கு ஆதரவளிக்கும் வகையில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில், ஈரான் கால்பந்து வீரர்கள் தேசிய கீதத்தைப் பாடாமல் தவிர்த்தனர். உலகக் கோப்பை போன்ற வலுவான ஒரு களத்தில் சமூகப் பிரச்சினைகளுக்காக ஒலிக்கும் குரல், கால்பந்து விளையாட்டையும் தாண்டிய பொறுப்புணர்வைப் பார்வையாளர்களுக்குக் கடத்துகிறது.
ஒற்றுமையில் கொண்டாட்டம்: விழாக்கோலம் பூண்டுள்ள கத்தார் வீதிகளில், பல நாட்டு ரசிகர்களும் கொண்டாட்டத்தில் திளைத்திருக்கிறார்கள். வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் தத்தமது கலாச்சாரக் கூறுகளைப் பரிமாறிக்கொள்ளும் ஆடல் பாடல் காணொளிகள்தான் சமூக வலைதளங்களில் இப்போது நிறைந்திருக்கின்றன. துவண்டுபோகும் வீரர்களுக்கு எதிரணியினர் ஆறுதல் சொல்லித் துணைநின்ற காட்சிகள் காண்போரைக் கரைத்தன.
உலகக் கோப்பையை வெல்லப்போகும் அணி இதுதான் என்கிற கணிப்பில், பிரேசிலுக்கு அதிக ஆதரவு இருந்தது. பெனால்டி ஷூட்-அவுட்டில் பிரேசிலின் கனவைத் தகர்த்து, அரையிறுதிக்கு முன்னேறியது குரோஷியா. தோல்வியைத் தாங்க முடியாமல் பிரேசிலின் நட்சத்திர வீரர் நெய்மார் அழத்தொடங்கியபோது, எதிரணியைச் சேர்ந்த வீரர் இவான் பெரிஷிச்சின் மகன் லியோ ஓடிச்சென்று அவரை ஆசுவாசப்படுத்தினார். அதேபோல், காலிறுதிப் போட்டியில் மொராக்கோவிடம் போர்ச்சுகல் அணி தோல்வியடைந்து வெளியேறியபோது கண்ணீருடன் நடந்துசென்ற ரொனால்டோவுக்கு, மொராக்கோ வீரர்கள் சிலர் ஆறுதல் கூறிய காட்சி நெகிழ்ச்சியூட்டியது.
கவனம் ஈர்த்த மற்ற அணிகள்: பொது சுகாதாரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் நாடுகளில் ஜப்பானும் ஒன்று. இம்முறை ரவுண்ட் ஆஃப்-16 சுற்றுக்கு முன்னேறியிருந்த ஜப்பான், குரோஷியாவிடம் வீழ்ந்தது. இந்த உலகக் கோப்பையில் ஜப்பான் பங்கேற்ற போட்டிகளைக் காணவந்த அந்நாட்டு ரசிகர்கள், போட்டிக்குப் பிறகு மைதானத்திலிருந்த குப்பையை அகற்றிச் சுத்தம் செய்துவிட்டு வெளியேறினர். இது ரசிகர்களுடன் நின்றுவிடவில்லை, தொடரிலிருந்து வெளியேறியபோதும் தங்கியிருந்த அறையைச் சுத்தம் செய்துவிட்டு விடைகொடுத்திருக்கிறார்கள் ஜப்பான் அணி வீரர்கள். கோப்பையை வெல்லாத ஓர் அணி தன்னுடைய நற்பண்பின் மூலம் ரசிகர்களின் உள்ளத்தை வென்றுவிட்டது.
போராடினால் உண்டு வெற்றி: குடும்பச் சூழல், சமூகக் கட்டுப்பாட்டின் பெயரில் பெண்களுக்குக் கால்கட்டு போடப்படுகிறது. இந்தக் கட்டுப்பாட்டைத் தகர்த்திருக்கிறார் கேரளத்தைச் சேர்ந்த கால்பந்து ரசிகை நாஜி நெளஷி. ஐந்து குழந்தைகளுக்குத் தாயான அவர், மெஸ்ஸியின் தீவிர ரசிகை. மெஸ்ஸி விளையாடுவதை நேரில் காண கேரளத்திலிருந்து புறப்பட்ட நாஜி, மும்பை வரை தனது காரில் சென்று, அங்கிருந்து ஓமனுக்குக் கப்பலில் பயணித்தார்.
ஓமனிலிருந்து மீண்டும் தனது வாகனத்தில் கத்தார் சென்றடைந்தார். தம் குழந்தைகளையும் இந்தப் பயணத்தில் இணைத்துக்கொண்ட நாஜி, தனது கால்பந்துக் கனவை சாகச வடிவில் நனவாக்கியுள்ளார். சர்ச்சைகளைத் தாண்டிய சில சாதனைகளும் கத்தார் உலகக் கோப்பையில் நடந்திருக்கின்றன. கோஸ்டாரிகா - ஜெர்மனி அணிகளுக்கு இடையிலான போட்டியில் பிரான்ஸைச் சேர்ந்த ஸ்டெஃபனி ஃப்ரபார்ட் தலைமை நடுவராகச் செயல்பட்டார். இவருடன் பிரேசிலின் நியூஸா பேக், ஜெர்மனியின் கேரன் தியாஸ் மதினா ஆகிய இருவரும் நடுவர்களாகச் செயல்பட்டனர்.
ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியில் நடுவர்களாகச் செயல்பட்ட முதல் பெண்கள் குழு இது. உலகக் கோப்பையைக் கைப்பற்றுவது யார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். கால்பந்துப் போட்டியில் எல்லாவற்றுக்கும் சாத்தியம் உண்டு என்பார்கள்... அந்த வகையில், இன்னும் பல அரிய தருணங்கள்,இறுதிப் போட்டியில் நமக்காகக் காத்திருக்கின்றன. - கார்த்திகா ராஜேந்திரன் தொடர்புக்கு: karthiga.rajendran@hindutamil.co.in