குளிர்காலக் கூட்டத் தொடர் புதிய மசோதாக்கள்

குளிர்காலக் கூட்டத் தொடர் புதிய மசோதாக்கள்
Updated on
2 min read

நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் 7 தொடங்கி நடைபெற்றுவருகிறது. ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெறும் இக்கூட்டத்தொடர், இமாச்சலப் பிரதேசம், குஜராத் மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல்களால் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெறுகிறது. டிசம்பர் 29 வரை, 17 அமர்வுகளாக நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், 16 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

ஏற்கெனவே நிலுவையில் இருக்கும் 35 மசோதாக்களில் 7, இந்தக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படவிருக்கின்றன. இந்நிலையில், இந்திய - சீன எல்லைப் பிரச்சினை, வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், தேர்தல் ஆணையர் நியமனம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முதன்மை விவாதமாக்குவதற்கு எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.

மழைக்காலக் கூட்டத்தொடர்: ஜூலை 18 முதல் ஆகஸ்ட் 8 வரை நடந்த மழைக்காலக் கூட்டத்தொடரில், அமளியும் குழப்பமும் நிலவியதால் அவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. 17ஆவது மக்களவையின் இரண்டாவது மிக மோசமான கூட்டத்தொடராக அமைந்த இதில், எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் பலர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.

மக்களின் தனியுரிமையை மீறுவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, மக்களவையிலிருந்து திரும்பப் பெறப்பட்டது. விரிவான சட்ட வரையறைக்குள் பொருந்தும் திருத்தப்பட்ட வரைவு, ‘டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்பு மசோதா, 2022’-ஐ மத்திய அரசு கடந்த மாதம் வெளியிட்டது. எனினும் நடப்புக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்ய அது பட்டியலிடப்படவில்லை.

மசோதாக்கள்: நடப்புக் கூட்டத்தொடரில் உள்துறை, பாதுகாப்பு, சட்டம், சுற்றுச்சூழல், நிதி, வர்த்தகம், கல்வி எனப் பல்வேறு துறைகள் சார்ந்து கடலோர மீன்வளர்ப்பு ஆணைய மசோதா, வனப் பாதுகாப்புத் திருத்த மசோதா, வடகிழக்கு நீர் மேலாண்மை ஆணைய மசோதா, தேசிய பல் மருத்துவ ஆணைய மசோதா (பல் மருத்துவர் சட்டத்துக்கு (1948) பதிலாக), தேசிய நர்சிங், மருத்துவ உதவியாளர் ஆணைய மசோதா (இந்திய நர்சிங் கவுன்சில் சட்டத்துக்கு (1947) பதிலாக), வர்த்தக முத்திரைகள் திருத்த மசோதா, பொருட்களின் புவியியல் குறியீடுகள் (பதிவு மற்றும் பாதுகாப்பு) திருத்த மசோதா, பல மாநிலக் கூட்டுறவு சங்கங்கள் திருத்த மசோதா, கன்டோன்மென்ட் மசோதா, கலாக்‌ஷேத்ரா மையத் திருத்த மசோதா உள்ளிட்ட புதிய மசோதாக்கள் அறிமுகப்படுத்தபட இருக்கின்றன.

17 நாட்களே நடைபெறும் இக்கூட்டத்தொடரில் மொத்தமாக 25 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டிருப்பதால், ஒவ்வொன்றையும் விரிவாக விவாதிப்பதற்குக் குறைவான நேரமே இருக்கும் என, கூட்டத்தொடருக்கு முந்தைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டியிருந்தன. மசோதாக்கள் மீதான விவாதங்களுக்கு நேரம் குறைவாக இருக்கும் நிலையில், மற்ற பிரச்சினைகள் பற்றிய விவாதங்களுக்கான நேரம் மிகக் குறைவாக இருப்பதாகவும் எதிர்க்கட்சிகள் கவலை தெரிவித்திருந்தன. முக்கிய மசோதாக்களின் விவாதங்களில் மத்திய அரசு அவசரப்படுத்துவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியிருக்கும் நிலையில், “பூஜ்ய நேரம், கேள்வி நேரம் உள்ளிட்ட வழக்கமான நடைமுறைகளுக்குத் தேவையான நேரத்தை ஒருவேளை கழித்துவிட்டால், 25 மசோதாக்களை விவாதிப்பதற்கு இருப்பது ஒட்டுமொத்தமாக வெறும் 56 மணி நேரம்தான்.

இது மிகவும் பிரச்சினைக்குரியது” என காங்கிரஸைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சயித் நாசர் உசைன் சுட்டிக்காட்டியிருப்பது கவனிக்கத்தக்கது. கூட்டத்தொடர் நடவடிக்கைகள் தொடர்பாக, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஏற்கப்பட்ட முடிவுகளை மத்திய அரசு கடைப்பிடிக்கவில்லை என மக்களவை காங்கிரஸ் தலைவர் அதிர் ரஞ்சன் சவுத்ரி கவலை தெரிவித்துள்ளார்.

யார் அறிமுகப்படுத்தலாம்?: நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஒன்றில் தாக்கல் செய்யப்படுவதன் மூலம், மசோதா ஒன்று சட்டம் ஆகிறது. நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள எவரும் புதிய மசோதாவைக் கொண்டுவரலாம், அறிமுகப்படுத்தலாம். மத்திய அரசின் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பவர் கொண்டுவருவது, ‘அரசு மசோதா’ என்றும் மற்ற உறுப்பினர்கள் கொண்டுவருவது, ‘தனிநபர் மசோதா’ என்றும் அழைக்கப்படும். இது பல கட்ட விவாதங்களைக் கடந்து சட்டம் ஆகிறது. மசோதா ஒன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று சட்டம் ஆவதற்கு, சராசரியாக 261 நாட்கள் ஆகின்றன என 2017இல் சட்டக் கொள்கைக்கான விதி மையம் எனும் சிந்தனை அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கை கூறுகிறது. தொகுப்பு: அருண்

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in