

இருபது ஆண்டுகளுக்கு முன்னர் ஓர் உணவகத்தில் இருக்கும்போது ‘தந்தூரி சிக்கன்’ என்கிற சொல்லைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தேன். இது மலேசியாவில் தொற்றிய பழக்கம். அங்குள்ள தமிழர்கள் எந்தவொரு புதிய அறிவியல் சொல் அறிமுகமானாலும், அதற்குரிய தமிழ்ச் சொல்லை உடனே உருவாக்கிடுவர்.
இன்றைய தமிழில் வழங்கும் ‘வானொலி’, ‘தொலைக்காட்சி’, ‘கணினி’ போன்ற பல சொற்கள் அவர்களது அன்பளிப்பே என்பர். தமிழ்நாட்டில் ‘உலக வலைப்பின்னல்’ என்று நாம் உருட்டிக்கொண்டிருந்தபோது, அவர்கள் ‘இணையம்’ என்றனர். நமக்கு இன்னமும் ‘வைரஸ்’ ஆக இருப்பது, அவர்களுக்கு ‘நச்சில்’. நாம் என்னதான் பொருத்தமாக ‘மின்னஞ்சல்’ என்றாலும், அவர்கள் இன்னும் அழகியலுடன் ‘மின்மடல்’ என்பர். நமது அலைபேசி பல்லாண்டுகளுக்கு முன்னரே அவர்களுக்குக் ‘கைபேசி.’ இந்தச் சொற்கள் அங்கே புழக்கத்தில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
எனவே, நான் தந்தூரிக்குத் தமிழ்ச் சொல்லை யோசித்துக்கொண்டிருக்கையில் அங்கு வந்த முஸ்லிம் மூதாட்டி ஒருவர் வெகு இயல்பாக, “எனக்கு ஒரு ‘சுட்ட கோழி’ கொடுப்பா” என்றார். என் சிந்தனை பொடிப்பொடியாக உதிர்ந்துபோனது. இதைவிடவா சிறந்ததொரு கலைச்சொல்லை உருவாக்கிவிட முடியும்? இன்று கடைகளே ‘சுட்ட கோழி’ என்ற பெயர்ப் பலகையுடன் இருக்கின்றன. எளிய மக்களிடம் நம் புலமை செல்லாது என்பதை அன்று புரிந்துகொண்டேன்.
சூழலியல் தேடல்: தியடோர் பாஸ்கரன் உள்ளிட்ட பசுமை இலக்கிய எழுத்தாளர்கள் சில ஆண்டுகளுக்கு முன்னர் சென்னையில் ஒன்றுகூடினோம். தமிழில் இல்லாத சுற்றுச்சூழல் அறிவியல் கலைச்சொற்களைப் புதிதாக உருவாக்க வேண்டும். அதுபோல வடமொழி, ஆங்கிலச் சொற்களுக்கு மாற்றாக வழக்கொழிந்துவிட்ட பொருத்தமான பழந்தமிழ்ச் சொற்களை மீட்டெடுத்து, தற்காலத் தமிழில் புழக்கத்தில் கொண்டுவர வேண்டும் என்பதே நோக்கம். அதிலும் புதிய சொல்லை உருவாக்குவதைக் காட்டிலும் முதலில் அதை வட்டார வழக்கில் தேட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம்.
ஏனெனில், டால்பினுக்கு ‘ஓங்கில்’, கடல்பசுவுக்கு ‘ஆவுளியா’ என்பன போன்ற சொற்கள் மீனவர் வட்டார வழக்கிலிருந்தே மீட்டெடுக்கப்பட்டிருந்தன. அதுபோலப் பன்றி வகை சார்ந்த விலங்கொன்று சற்றும் அறிவியலற்ற முறையில் ஆங்கிலத்தில் ‘mouse deer’ என்றும், தமிழில் ‘சருகுமான்’ என்றும் அழைக்கப்பட்டு வந்தபோது, பழங்குடிகளின் வழக்கிலிருந்தே ‘கூரன் பன்றி’ என்ற சரியான சொல் மீட்டெடுக்கப்பட்டிருந்தது.
புலமையாளர்கள் மட்டுமே கலைச்சொற்களை உருவாக்கிட முடியாது. இன்றும் மொழிபெயர்ப்பாளர்கள் அன்றாடம் ஒரு புதிய கலைச்சொல்லையாவது உருவாக்கிக்கொண்டுதான் உள்ளனர். தமிழின் எட்டு கலைக்களஞ்சிய அகராதிகளிலும் மொத்தம் மூன்றே முக்கால் லட்சம் கலைச்சொற்கள் உருவாக்கப்பட்டுள்ளன என்கிறார் மணவை முஸ்தபா. ஆனால், இவற்றில் எத்தனைச் சொற்கள் புழக்கத்துக்கு வந்துள்ளன என்பதுதான் கேள்வியே.
மொழியில் ஒரு சொல் புழங்குவதற்கு மக்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். எளிய மக்களின் வாய்க்குள் நுழையாத எந்தக் கலைச்சொல்லாக்கமும் தோல்வியையே தழுவும். ‘கொட்டை வடிநீர்’, ‘குளம்பி’ எல்லாம் ‘காபி’க்கு முன் தோற்றது அதனால்தான். ஒரு மொழியில் பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்த மூன்று உத்திகள் உண்டு என்பார் தமிழறிஞர் இரா.கோதண்டராமன்: ஒன்று, கடன் மொழிபெயர்ப்பு (Loan Transition). Honey Moon என்பது தேன் நிலவு ஆனதுபோல. அடுத்து, கடன் கலவை (Loan Blend). இது Milk Powder என்பது பால் பவுடர் ஆனதுபோல. கடைசியாக, கடன் ஆக்கம் (Loan creation). Coal என்பது நிலக்கரி ஆனதுபோல.
இவற்றுள் ஒரு சமூகம் எதனை மிகுதியாகப் பயன்படுத்துகிறது என்பது அச்சமூகத்தின் மனநிலையைப் பொறுத்தது. மொழித் தூய்மையை வலியுறுத்தும் சமூகம், கடன் மொழிபெயர்ப்பு, கடனாக்கம் ஆகிய உத்திகளை மிகுதியாகப் பயன்படுத்தும் என்கிறார் அவர். ஆயினும், கடன் கலவை உத்தி மொழியின் எழுத்தியல் மரபைப் போற்றும் வகையில் அமைந்தால் அது மொழியின் தனித்தன்மையைச் சிதைக்கும் என்று சொல்ல முடியாது என்று கூறும் அவர், Bank என்பது திரிந்து ‘வங்கி’ ஆனதைக் குறிப்பிடுகிறார்.
நாம் ஒரு புதிய சொல்லை உடனடியாக உருவாக்கி அளிக்காத நிலையில், மக்களே அச்சொல்லைக் கடன் கலவை உத்தியில் உருவாக்கிக்கொள்கின்றனர். “எந்தவொரு சொல்லாக்கமும் அதன் படைப்புத்தன்மையில் இல்லை. அது பரவும் தன்மையில்தான் வாழ்கிறது. அது நிலத்தோடு அல்லது மக்களோடு பொருந்தும் வகையில் இருந்தால்தான் மக்களிடமும் பரவ முடியும். குறிப்பாக, பெண்களே பிறமொழிச் சொற்களைத் திரித்துத் தமிழ் சொற்களஞ்சியத்தைப் பெருக்கிவருகின்றனர்” என்பார் நா.வானமாமலை.
‘ஹாஸ்பிடல்’ எனும் ஆங்கிலச் சொல் ‘ஆசுபத்திரி’ ஆனது அப்படியே. நாம் மருத்துவமனை என்கிற சொல்லை உருவாக்கி அளிக்கத் தாமதமானதால் அந்நிலை ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற செய்திகளை கவனத்தில்கொண்டே Virtual Water என்ற ஆங்கிலச் சொல்லுக்குத் தமிழில் ‘மறைநீர்’ என்ற சொல்லைப் பயன்படுத்தத் தொடங்கினேன். அது வெற்றிகரமாகப் புழக்கத்திலும் வந்துவிட்டது. இதற்கும் முன்னரே தமிழில், ‘மெய்நிகர் நீர்’, ‘மெய்மை நீர்’ போன்ற சொற்கள் இருந்தும் அவை வெற்றிபெற இயலாமைக்கு இதுவே காரணம். அதுபோலவே Canopy என்ற சொல்லுக்கு நான் உருவாக்கிய ‘கவிகை’யும் புழக்கத்துக்கு வந்துகொண்டிருக்கிறது.
இச்செயல்பாட்டில் சூழலியல் எழுத்தாளர்களே இன்று இலக்கிய எழுத்தாளுமைகளைவிட ஒருபடி முன்னணியில் இருக்கிறார்கள் என்று உறுதியாகக் கூற முடியும். சான்று தேவையெனில் தியடோர் பாஸ்கரன், சு.முகமது அலி, பாமயன் நூல்களைப் பார்க்கலாம். எனவேதான், கலைச்சொல்லை முதலில் வட்டார மொழியில் தேட வேண்டும் என்று முடிவெடுத்தோம். அப்படியொரு கலைச்சொல்லைத் தேடி நான் பல்லாண்டுகளாக அலைந்த கதை இது.
“ஆறு, கடலுடன் கலக்கும் இடத்தை நாம் முகத்துவாரம் என்போம். எழுத்து வழக்கில் கழிமுகம் என்கிற சொல் உண்டு. முன்னது வடமொழிச் சொல். பின்னது தமிழ்ச் சொல்லே, எனினும் காரணப் பெயர். சங்கு முகம் என்பாரும் உண்டு. பாவாணர் குறிப்பிடும் ‘கயவாயில்’ என்கிற சொல்லும் அவ்வாறே. இவை அனைத்துமே இரண்டு சொற்களின் இணைவில் உருவான கூட்டுச்சொற்கள். என் கேள்வி இதுதான்: “முப்பத்துமூன்று ஆறுகள் கடலில் கலக்கும் தமிழ்நாட்டின் இயற்கை அமைப்பில், ஆறு கடலில் கலக்கும் இடத்தைக் குறிக்க ஒரு தனிச்சொல் எப்படித் தமிழில் இல்லாது போகும்?”
ஒருமுறை நண்பர்களுடன் கன்னியாகுமரியில் உள்ள மருந்துவாழ் மலையேறி அதன் உச்சியில் அமர்ந்திருந்தபோது உடன் வந்திருந்த அந்த மாவட்டத்தைச் சேர்ந்த தோழர் சந்திரன், தொலைவில் தெரிந்த ஆறு ஒன்று கடலில் கலக்கும் இடத்தைச் சுட்டிக்காட்டிப் பேசுகையில், ‘பொழி’ என்கிற சொல்லை உச்சரித்தார். அதன் பொருள் விளங்கவில்லை. அவரிடம் கேட்டபோது, “அதோ அந்த ஆறு கடலில் கலக்கும் இடம் இருக்கிறதே, அதைத்தான் நாங்கள் ‘பொழி’ என்போம்” என்றவர், “அது மட்டுமல்ல, கூடை முடையும்போது நெடுவாக்கில் அமைந்த பட்டையோடு குறுக்குப் பட்டை கூடும் இடத்தையும் பொழி என்றே சொல்வோம்” என்றார். அதாவது, இரு பட்டைகள் கூடும் இடமும் பொழி, ஆறு கடலுடன் கூடும் இடமும் பொழி.
மூளையில் மின்னல் ஒன்று பளிச்சிட்டது. சென்னைப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தமிழ் லெக்சிகனில் பொழி என்கிற சொல்லுக்குக் ‘கடலுக்கும் அதில் கலக்கும் ஆற்றுக்கும் இடையிலுள்ள சிறு கரை’ என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதுவொரு தற்காலிக அமைப்பே. ஆற்றில் நன்னீர் வரத்துக் குறையும் வேனிற் பருவத்தில் கடலுக்கும் ஆற்றுக்கும் இடையே மணல் திட்டுத் தோன்றுவது இயற்கை. ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தால் அது கரைந்துவிடும். நான் ‘யுரேகா’ என்று குதிக்காத குறைதான். வெகு ஆண்டுகளாகத் தேடிய ஒரு கலைச்சொல் இறுதியில் கிடைத்துவிட்டதே! - நக்கீரன் சூழலியல் எழுத்தாளர், தொடர்புக்கு: vee.nakkeeran@gmail.com