ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 02: ஏற்றத்தாழ்வற்ற அன்றைய வினைஞர்கள்!

ஞாபகம் வருதே... ஞாபகம் வருதே! - 02: ஏற்றத்தாழ்வற்ற அன்றைய வினைஞர்கள்!
Updated on
2 min read

தமிழில் வழங்கும் சொற்களைத் தொல்காப்பியம் நான்கு வகையாகப் பகுத்துள்ளது; இவற்றுள் ஒன்று வினைச்சொல். உயர் திணை, அஃறிணை, இவ்விரு திணைகள் என மூன்றுக்கும் உரிய வினைச்சொல் வகைகள் பகுக்கப்பட்டுள்ளன.

வினை என்ற சொல், ஒரு செயலைக் குறிக்கும். செயல் என்பதன் நீட்சியாகத் தொழில் அமைகிறது. இதன் அடிப்படையில், எந்தவொரு தொழிலை மேற்கொண்டு வாழ்வோரையும் ‘வினைஞர்’, ‘வினைக்காரர்’ என சங்க இலக்கியம் பெயரிட்டுள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் லெக்சிகன் ‘வினைஞர்’ என்ற சொல்லுக்கு ‘தொழில் வல்லோர்’, ‘மருதநில மக்கள்’, ‘கம்மாளர்’ என்று பொருளுரைக்கிறது. சூத்திரர், வைசியர் என்று நிகண்டுகளின் துணையுடன் உரைக்கும் பொருள் பிற்காலத்தில் நிகழ்ந்த வர்ணம் குறித்த கருத்துப் பரவல் வளர்ச்சியின் தாக்கம் எனலாம். இதே அகராதி, ‘வினையாளன்’ என்பதற்குத் ‘தொழிலியற்றுவோன்’ என்றும் ‘வினைவர்’ என்பதற்குத் ‘தொழிலினர்’ என்றும் பொருளுரைக்கிறது.

செய்யும் தொழிலுடன் வினை என்கிற பின்னொட்டையும் இணைத்து அழைக்கும் மரபும், ஏற்றத்தாழ்வின்றிப் பல்வேறு தொழில்புரிவோரையும் ‘வினைஞர்’ என்றே குறிக்கும் மரபும் சங்க காலத்தில் இருந்துள்ளது. உடல் உழைப்பாளிகளான உழவர், மீனவர், பறையடிப்போர் என்போரும் வணிகம் மேற்கொண்டு பொருளீட்டும் வணிகரும் ஏவலாளரும் ‘வினைஞர்’ என்றே அழைக்கப்பட்டுள்ளனர். பனையிலிருந்து கள் இறக்கி விற்றோர் ‘கள்வினைஞர்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளனர். பிங்கல நிகண்டு (8 - 10ஆம் நூற்றாண்டு) தலை மயிர் திருத்துவோரை ‘மயிர் வினைஞன்’ என்றும், திவாகரநிகண்டு (8ஆம் நூற்றாண்டு) ‘மயிர் வினைஞர்’ என்றும் குறித்துள்ளன. இவர்கள் பயன்படுத்திய கருவியை ‘மயிர் குறைக் கருவி’ என்று பத்துப்பாட்டுத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருநராற்றுப்படை (அடி:29) குறிப்பிட்டுள்ளது. இன்று பயன்பாட்டிலுள்ள கத்தரிக்கோலை ஒத்ததாய் இக்கருவி இருந்துள்ளது. வேட்டையாடுவதில் வல்ல வேட்டுவனை ‘வெல்வினைக் கொலைவல் வேட்டுவன்’ என்று நற்றிணை (189:6-7) குறிப்பிடுகிறது. சங்க காலத்தில் உடல் உழைப்பு சார்ந்த தொழில்புரிவோர் இழிவாகக் கருதப்படாமல், மரியாதையுடன் அழைக்கப்பட்டமைக்கு இவை சான்றுகள்.

சமூக வளர்ச்சியில் வினைஞர்: ஒரு சமூகத்தின் வளர்ச்சி என்பது அங்கு நிகழும் பொருள் உற்பத்தியின் வளர்ச்சியை மையமாகக் கொண்டது. சங்க இலக்கியத் திணைகளில் குறிஞ்சித் திணை, உணவு தேடி வாழ்வதை வாழ்வாதாரமாகக் கொண்டிருந்தமையால் வேட்டையே முக்கிய வினையாக அமைந்தது. முல்லைத் திணை ஆநிரை வளர்த்தலையும் தோட்ட வேளாண்மையையும் முக்கியத் தொழிலாகக் கொண்டிருந்தது. மருதத் திணை வேளாண் உற்பத்தியை மையமாகக் கொண்டிருந்தமையால் கொல்லர், தச்சர், கன்னார் போன்ற பல்வேறு கைத்தொழில் புரிவோரின் துணை தேவைப்பட்டது. பயன்பாட்டைத் தாண்டி நெசவு என்பது அழகியல் தன்மையையும் உயரிய வேலைப்பாட்டையும் கொண்டதாக மாறியது. அதிக உபரி உற்பத்தியைக் கொண்ட மருதநில வாழ்க்கையில் வேளாண்மையிலிருந்து கைத்தொழில்கள் பிரிந்துசென்றன.

வணிகர்கள் உருவாதல்: பண்டமாற்று முறையில் உற்பத்திப் பொருட்களின் சுழற்சி நிகழ்ந்தமை குறித்துச் சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன. சாத்து என்ற பெயரில் வணிகர்கள் குழுக்களாகச் சென்றமை பதிவாகியுள்ளது. தொல் தமிழ்க் கல்வெட்டுக்களும் (பிராமிக் கல்வெட்டுக்கள்) துணி வணிகர், கொல் வணிகர், கொழு வணிகர், பொன் வணிகர் என்போரைக் குறிப்பிடுகின்றன. அன்றாடத் தேவைக்கான பொருட்கள் மட்டுமின்றி, நுகர்பொருள் தேவைக்கானவையும் வணிகப் பொருட்களாயின. கோவலன் மதுரை நகரின் கடைத்தெருக்களில் சுற்றித் திரிந்ததை இளங்கோவடிகள் விரிவாக வர்ணித்துள்ளார்.

இவ்வாறு மதிப்புறு பிரிவினர்களாக இருந்த வினைஞர்கள் வணிகக் குழுக்களின் வளர்ச்சியால் நுகர்வோருடனான நேரடித் தொடர்பை இழந்துபோயினர். ஏங்கெல்ஸ் குறிப்பிடுவதுபோல் ‘உற்பத்தியில் ஈடுபடாது, உற்பத்தி செய்த பொருட்களின் பரிவர்த்தனையில் மட்டும் ஈடுபட்ட’ இப்புதிய பிரிவு, நுகர்வோர்-உற்பத்தியாளர் இடையே இன்றியமையாத பிரிவாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டதால், வினைஞர்கள் சுயேச்சைத்தன்மையை இழந்தனர். உள்நாட்டில் கிடைத்த வெடி உப்பின் துணையால் பீரங்கிக் குண்டுகள் தயாரித்து ஐரோப்பாவுக்கு ஏற்றுமதி செய்யும் ஆற்றல் பெற்றிருந்த நம் வினைஞர்கள், தம் சுயேச்சைத்தன்மையை இழந்தது வரலாற்றின் அவலம்தான்.

இடைக்காலத் தமிழகத்தில் செயல்பட்ட வணிகக் குழுக்களின் பெயர்களைக் கல்வெட்டுகள்வழி அறிகிறோம். இவை கைவினைஞர்கள் தம் உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்காக உருவாக்கிய வணிகக் குழுக்களா அல்லது கை வினைஞர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்யும் வணிகக் குழுக்களா என்பதில் தெளிவில்லை. இது குறித்து வரலாற்றறிஞர் ஒய்.சுப்பராயலுவிடம் கேட்டபோது, ‘‘சில வணிகக் குழுக்களில் உற்பத்தியாளர்களும் இடம்பெற்றுள்ளது தெரியவருகிறது. பெரும்பாலும் உற்பத்தியில் ஈடுபடாத வணிகர்களைக் கொண்டதாகவே இக்குழுக்கள் இருந்துள்ளன. கைவினைஞர் முதலிய அடிப்படை உற்பத்தியாளர் ஒருபடி தாழ்வாக இருந்தார்கள்’’ என்கிறார். - ஆ.சிவசுப்பிரமணியன் பேராசிரியர், பண்பா ட்டு ஆய்வாளர்; தொடர்புக்கு: sivasubramanian@sivasubramanian.in

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in