முன்கை எடுக்க வேண்டிய தலைமை ஆசிரியர்கள்

முன்கை எடுக்க வேண்டிய தலைமை ஆசிரியர்கள்
Updated on
1 min read

அரசுப் பள்ளிகளின் மேம்பாடு கருதிப் பல திட்டங்களையும் முன்னெடுப்புகளையும் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை எடுத்துவருகிறது. தலைமை ஆசிரியர்களுக்கான தலைமைப் பண்புகளை வளர்க்கும் பயிற்சி முதற்கட்டமாக ராஜபாளையத்தில் ஒருவார காலத்துக்குச் சமீபத்தில் நடத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநிலம் முழுவதும் இப்பயிற்சி எல்லாத் தலைமை ஆசிரியர்களுக்கும் எடுத்துச் செல்லப்படும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தேவை தலைமைப் பண்பு: இன்றைய சூழலில் தலைமை ஆசிரியர்களுக்கு இது மிகவும் அவசியமான பயிற்சிதான். ஒரு பள்ளியின் வளர்ச்சியில் அனைவருக்கும் பங்கு உண்டு என்றாலும், தலைமை ஆசிரியரின் பங்கு மிக இன்றியமையாதது. தொடக்கப் பள்ளிகளைப் பொறுத்தவரை பெரும்பாலும் ஓராசிரியர் அல்லது ஈராசிரியர் பள்ளிகள்தாம். அங்கு வேலைகளைப் பங்கிட்டு அனுசரித்து, மாணவர்கள் நலன் சார்ந்து இயங்கும் நிலைமை பெரும்பாலும் உள்ளது. ஆனால் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகள் என்று உயர உயரப் பிரச்சினைகளும் அதிகரிக்கின்றன. அதிக எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் இயங்கும் மேல்நிலைப் பள்ளிகளில் கூடுதலாகப் பிரச்சினைகள் உருவாகின்றன. ஆசிரியர்களுக்குள் ஒற்றுமையின்மையை உருவாக்கும் தலைமைகளும் உண்டு.

மேல்நிலைப் பள்ளிகளில் பல தலைமை ஆசிரியர்கள் கற்பித்தல் செயல்பாட்டில் ஈடுபடுவதில்லை. கல்வித் துறை அதிகாரிகள் போலவே இவர்களும் நடந்துகொள்கிறார்கள் என்று ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள். பெற்றோர்களுடனான உறவு, ஆசிரியர்களுடனான கற்றல் கற்பித்தல், படைப்பாற்றல் சார்ந்த அணுகுமுறை, பாராட்டுதல், ஊக்குவிப்பு எனத் தலைமைக்கு இருக்க வேண்டிய பண்புகளைக் கொண்ட தலைமையாசிரியர்கள் குறைந்துவருகிறார்கள் என்னும் கவலையை ஆசிரியர் சமூகம் பகிர்ந்துகொள்கிறது. தலைமை ஆசிரியர்களுக்குத் தலைமைப் பண்பு என்பது எவ்வளவு முக்கியம் என்பதைப் பள்ளித் தலைமை உணர வேண்டும். அதை எவ்வாறு செயல்படுத்தலாம் என்பதற்குத் திட்டமிடல் வேண்டும். அது வெறும் சடங்காக இல்லாமல் அரசுப் பள்ளிகளை உயர்த்தும் விதமாக இருக்க வேண்டும்.

சமூகப் பணி: சமூக மாற்றத்தை உருவாக்கும் இடங்கள்தான் பள்ளிகள். அதன் தலைமைப் பொறுப்பை வகிப்பவர்களுக்குக் கூடுதல் அக்கறையும் கவனமும் வேண்டும். தனது கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியாளர்களுக்கு வெறும் பணப்பலன்களைப் பெற்றுத்தரும் இடம் மட்டுமல்ல தங்களுக்கான பதவி என்பதைத் தலைமையாசிரியர்கள் உணர வேண்டும். மாணவருக்கான அரசின் நலத்திட்டங்களைப் பெற்றுத்தரும் ஊழியராக மட்டும் இருக்க வேண்டும் என்று அவசியமில்லை. கல்வித் துறையின் உயரதிகாரிகளுக்குக் கட்டுப்பட்டு, அவர்களது எதிர்பார்ப்புகளுக்குப் பதிவேடுகளை முடித்துத் தருவது மட்டும் தங்கள் பணி இல்லை என்பதையும் அவர்கள் உணர வேண்டும். அனைத்தையும் கடந்து குழந்தைகளுக்கு நல்ல எதிர்கால சமுதாயத்தை உருவாக்க விதைபோடும் ஆற்றல்மிக்கவராக‌த் தலைமை ஆசிரியர்கள் விளங்க வேண்டும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், சமூகம் ஆகியவற்றை நட்புணர்வுடன் அணுகி மாற்றங்களை உருவாக்க வழிகாட்டும் தலைமைகளாகவும் தங்களைத் தயார்படுத்திக் கொள்ளுதலே அரசுப் பள்ளிகளின் நம்பிக்கை நட்சத்திரங்களாகத் தலைமை ஆசிரியர்களை மாற்றும். - சு.உமாமகேஸ்வரி, கல்விச் செயற்பாட்டாளர், தொடர்புக்கு: uma2015scert@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in