

பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அனுபவ அறிவுப் பேராசிரியர்கள் (Professor of Practice) என்ற ஒரு புதிய வகைப் பேராசிரியர்களை, உயர் கல்வி நிறுவனங்கள் பணியமர்த்திக்கொள்ளலாம் எனப் பரிந்துரைத்திருக்கிறது.
அதற்கான வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது. இவர்கள் மூலம் அன்றாடச் செய்முறையையும் பயிற்சியையும் வகுப்புகளில் உடனடியாகக் கொடுக்க வாய்ப்புள்ளது என்றும் இதன்வழியாகப் பயிற்சிபெற்ற, தகுதியுடைய, திறன் மேம்பட்ட பட்டதாரிகள் மூலம் தொழில் நிறுவனங்களும் சமுதாயமும் பயன்பட முடியும் என்கிறது.
பொதுக்கல்வியோடு தொழிற்கல்வியை இணைத்து கல்வியையும் தொழில் நிறுவனங்களையும் ஒருங்கிணைக்க தேசியக் கல்விக் கொள்கையின் (2020) இத்திட்டம் வழிவகுக்கும் என்கிறது யுஜிசி.
நோக்கங்கள் என்னென்ன?
அ) தொழில் நிறுவனங்கள், சமூகம் ஆகியவற்றின் தேவையையொட்டி படிப்பு வகைகள், பாடத்திட்டம் உருவாக்குதல்; தொழில் நிறுவன நிபுணர்களுடன் இணைந்து ஆய்வுத் திட்டங்கள், ஆலோசனை சேவைகளை வழங்குதல்.
ஆ) பொறியியல், அறிவியல், தொழில்நுட்பம், தொழில் முனைவு, வர்த்தகம், சமூக அறிவியல், ஊடகம், இலக்கியம், நுண்கலை, குடிமைப் பணி, ராணுவம், சட்டம், பொது நிர்வாகம் ஆகிய தளங்களிலிருந்து தகுதி வாய்ந்தோரை உயர் கல்வி நிறுவனங்களில் சேர்த்துக்கொள்ளலாம்.
இ) தகுதிமிகு நபர்களை உயர் கல்வி நிறுவனங்கள் இணைத்துக்கொள்வதன் மூலம் அனுபவவழிக் கற்றல், ஆய்வு, பயிற்சி, திறன் வளர்ப்பு, விரிவாக்கப் பணிகளில் இவர்களை ஈடுபடுத்தலாம்.
தகுதிகள் என்னென்ன?
அ) மேற்சொன்ன துறைகளில் 15 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது அனுபவ அறிவு.
ஆ) இவர்களுக்கு உரிய கல்வித் தகுதி இல்லாவிட்டாலும், தங்களுடைய தொழிலில் திறன்மிக்கவராக இருந்தாலே போதும். மேலே குறிப்பிட்ட வேலையையும் பொறுப்பையும் செய்யக்கூடிய திறனைப் பெற்றிருக்க வேண்டும்.
பணியும் பொறுப்புகளும்
அ) படிப்பு வகைகள், பாடத்திட்டம் உருவாக்குதல்.
ஆ) நிறுவனத்திற்கேற்பப் புதிய படிப்புகளை உருவாக்குதல், பாடம் நடத்துதல்.
இ)மாணவர்களுக்குப் புதியன கண்டுபிடித்தல், தொழில்முனையத் திட்டம் தயாரிக்க வழிகாட்டுதல்.
ஈ) கல்வி-தொழில் இரண்டுக்கும் கூட்டை உருவாக்குதல்.
உ) கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே பணியாற்றும் துறைப் பேராசிரியர்களோடு இணைந்து பயிலரங்கம், கருத்தரங்கம், சிறப்பு உரைகள், பயிற்சி ஆகியன நடத்துதல்.
ஊ) பேராசிரியர்களுடன் இணைந்து ஆய்வுத் திட்டங்கள் தயாரித்தல், ஆலோசனை அளித்தல்.
பொதுவான வரையறைகள்
அ) இவ்வகைப் பேராசிரியர்களுக்குக் குறிப்பிட்ட காலம் மட்டுமே பணி வழங்க வேண்டும். முதற்கட்டமாக ஓர் ஆண்டு. அவர்களின் செயல்பாட்டைப் பொறுத்து, மேலும் மூன்று ஆண்டுக் காலம் நீட்டிக்கலாம்.
ஆ) இவ்வகைப் பேராசிரியர்களால் பல்கலைக்கழக/கல்லூரிகளில் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களில் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது.
இ) பணியில் உள்ள அல்லது ஓய்வுபெற்ற பேராசிரியர்கள் இதில் சேர்க்கப்பட மாட்டார்கள்.
ஈ.) ஒரு உயர் கல்வி நிறுவனத்தில் இவர்களின் எண்ணிக்கை மொத்த பேராசிரியர்களின் எண்ணிக்கையில் 10 சதவீதத்தைக் கடக்கக் கூடாது.
யாரையெல்லாம் பயன்படுத்தலாம்?
அ) தொழிற்சாலைகளின் நிதி ஆதரவோடு வருபவர்கள்;தொழில் நிறுவனங்களால் பணிக்குத் தேர்வு செய்யப்பட்ட பின் கிடைக்கும் திறன் வளர்ப்புப் பணியைப் படிக்கும்போது இவர்கள் வழங்குவார்கள். இதனால் இரு தரப்பினரும் நன்மை பெறுகிறார்கள். இதற்கு நிறுவனங்களே பொறுப்பேற்றுக் கொள்ளலாம்.
ஆ) உயர் கல்வி நிறுவனம் சுயமாக ஈட்டிய நிதி ஆதரவோடு கெளரவ அடிப்படையில், பகுதி நேரமாகவோ முழு நேரமாகவோ பணியில் சேர்பவர்களுக்கு உயர் கல்வி நிறுவனமே வழங்குதல் என்பதை தேசியக் கல்விக் கொள்கை மூலம் சாத்தியப்படுத்தலாம். அதாவது, கல்விக் கொள்கை பல்வகைப் படிப்பு, முழுமையான படிப்பு என்ற வகையில் வாய்ப்பு தருவதால், அதன் அடிப்படையில் தங்களுடைய நிதி வளங்களில் இருந்தே வழங்கலாம்.
இ) கெளரவ அடிப்படையில் பணிக்கு வருவோருக்குக் கல்வி நிறுவனமே தனது நிதி ஆதாரத்திலிருந்து மதிப்பூதியம் வழங்கலாம்.
எப்படித் தேர்வு செய்யப்படுவர்?
அ) துணைவேந்தர், உயர் கல்வி நிறுவன இயக்குநர்கள் இந்நிபுணர்களை நியமிக்கலாம்; அல்லது
ஆ) துணைவேந்தர்கள்/ இயக்குநர்களுக்குத் தங்களது தகுதியைக் குறிப்பிட்டு நிபுணர்களே விருப்பத்தைத் தெரிவித்து, மனு செய்து பதவிபெறலாம்.
இ) இவ்வாறு பெறப்பட்ட விருப்ப மனுக்களிலிருந்து இரண்டு மூத்த பேராசிரியர்கள், தலைசிறந்த வெளிநபர் ஆகியோர் கொண்ட தேர்வுக் குழு மூலம் தேர்வுசெய்யப்பட்டு, கல்விப் பேரவை/ செயற்குழு/ சட்டரீதியான அமைப்புகள் தீர்மானித்து முடிவெடுக்க வேண்டும்.
சாத்தியமும் பிரச்சினைகளும்
ஏற்கெனவே இணைப்புப் பேராசிரியர்கள் (Adjunct Professors), கெளரவப் பேராசிரியர்கள் (Honorary Professors), வருகைதரு பேராசிரியர்கள் (Visiting Professors) என தகுதி உள்ளவர்கள் இதே வழிமுறைகளின்படி அரசு நிதி ஆதாரத்துடன் பல்கலைக்கழகம், கல்லூரிகளில் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். இவர்களின் நிலை என்னாகும்?
தகுதி உள்ளவர்களை நீக்கிவிட்டு, அனுபவ அறிவு மட்டும் இருந்தால்போதும் என உயர் கல்வி போதிப்பதற்கு உரிய தகுதியற்றவர்களை அனுபவப் பேராசிரியர்களாக நியமிப்பது என்பதே தங்களுக்குத் தேவையான நபர்களை மட்டுமே நியமிப்பதற்கு வழிவகுக்கும் ஒரு முறையல்லவா?
பல பல்கலைக்கழகங்களில் முறையான ஜனநாயக அமைப்புகள் இல்லவே இல்லை. எனவே, தேர்வுசெய்பகிறவர்கள் தமக்குச் சாதகமானவர்களை நியமிக்கவே இது வழிசெய்யும் அல்லவா?
இவர்களுக்கான ஊதியத்தைத் தொழில் நிறுவனங்களோ, தங்களது சுயநிதியின் மூலம் கல்வி நிறுவனங்களோ வழங்கலாம் எனப்படுகிறது. அப்படியானால் யுஜிசி எதுவும் வழங்காது. எத்தனைத் தொழில் நிறுவனங்கள் நான்கு ஆண்டுகளுக்கு இவர்களுக்கு ஊதியம் வழங்கும் அல்லது பல்கலைக்கழக சுயநிதியில் இருந்து வழங்குவது என்பது மாணவர்களிடம் இதற்கென தனிக் கட்டணம் வசூலிக்கும் நிலைக்குத் தள்ளிவிடாதா? ஏற்கெனவே நிதி ஆதாரத்துடன் செயல்பட்ட தகுதிமிக்க நபர்களுடன் நடத்தப்பட்ட திட்டத்தை வலிந்து மாற்ற இந்தத் திட்டம் முயல்கிறதா?
தற்போதைய உயர் கல்வியில் மாணவர்கள் ஒரு பட்டப்படிப்பு படித்தால் அவர்கள் பல்வேறு பணிவாய்ப்புகளை நோக்கிச் செல்கின்றனர். உதாரணமாக, தாவரவியல் படிக்கும் மாணவர் ஆசிரியர், வங்கி மேலாளர், கல்வி அலுவலர், பதிவாளர், காவல் அதிகாரி, ராணுவ வீரர், ஆராய்ச்சியாளர் எனப் பல பணிகளுக்குச் செல்பவர்களுக்குக் குறிப்பிட்ட எந்தத் துறையில் திறன்மேம்பாடு கொடுக்க முடியும்?
தொழில்நுட்பக் கல்வி படிக்கும் மாணவர்களும் அவர்கள் கற்ற பாடத்திட்டத்தை விடுத்து, தகவல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பற்பல வேலைகளுக்குச் செல்லும்போது பல வேலைவாய்ப்புகளுக்கான திறனை அனுபவப் பேராசிரியர்களால் எப்படி வழங்க முடியும்?
தற்போதைய தேசியக் கல்விக் கொள்கை இந்தியப் பாரம்பரிய அறிவுக் கல்வி என்கிற அடிப்படையில் படிப்புகளைத் தொடங்கச் சொல்லி வலியுறுத்தி, அதற்கு நிதி ஒதுக்கீடு செய்துவருகிறது. ஏற்கெனவே தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்களில் வாஸ்து சாஸ்திரமும், கலை அறிவியல் பல்கலைக்கழகங்களில் ஜோதிடப் படிப்புகளும், யோகா படிப்புகளும் நுழைந்துவிட்டன. மருத்துவக் கல்லூரிகளில் ஆயுஷ் என்ற தலைப்பில் அலோபதி மருத்துவத்துடன் இணைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக வாஸ்து சாஸ்திர நிபுணர்கள், ஜோதிடர்கள், நாடி ஜோதிடர்கள், யோகா நிபுணர்கள் என சுய அனுபவத்தில் அன்றாட வாழ்க்கை நடத்தும் தொழில்முனைவோர் (!)பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் நுழைய ஆரம்பித்துவிடுவார்கள். இதனைப் பயன்படுத்திச் சமூகத்தில் ஓர் அங்கீகாரம் பெற்ற நபர்களாக அவர்கள் உயர்த்தப்படுவது சரிதானா?
இந்தியா முழுமைக்கும் சுமார் மூன்று லட்சம் பேராசிரியர் பணியிடங்களும் மத்தியப் பல்கலைக்கழகங்களில் 8,000-க்கும் மேல் நிரப்பப்படாமல் உள்ளன. அதை நிரப்புவதற்கு வழிவகை செய்யாமல், அனுபவ அறிவுப் பேராசிரியர்கள் மூலம் பாடம் நடத்த வழிசொல்வது எப்படி சரியான வழிகாட்டுதலாகும்?
- பொ.இராஜமாணிக்கம், அகில இந்திய மக்கள் அறிவியல் கூட்டமைப்பு முன்னாள் பொதுச் செயலாளர்.
தொடர்புக்கு: pr_tnsf@yahoo.co.in