

நாடகமே சினிமா என்றிருந்த ஐம்பதுகளின் தொடக்கத்தில், நாடக மேடையிலிருந்து திரையுலகில் அடியெடுத்துவைத்தவர் ‘நடிகர் திலகம்' சிவாஜி கணேசன்.
சுதந்திரத்துக்குப் பிறகான இந்தியச் சமூகத்தைப் பிரதிபலித்த சமூகக் கதாபாத்திரங்களை ஏற்று, மனித உணர்வுகளுக்கும் மதிப்பீடுகளுக்கும் தனது தன்னிகரற்ற நடிப்பால் வடிவம் கொடுத்து வெகு மக்களின் கலைஞன் ஆனவர்.
வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் வாஞ்சிநாதன், வ.உ.சிதம்பரனார், மகாகவி பாரதியார், திருப்பூர் குமரன், பால கங்காதர திலகர், பகத் சிங் என இவர் ஏற்று நடித்த சுதந்திரப் போராட்டத் தலைவர்களின் கதாபாத்திரங்கள், இப்படித்தான் அவர்கள் வாழ்ந்தார்களோ என்றெண்ணி, பெற்ற சுதந்திரத்தின் மதிப்பை அடுத்துவந்த தலைமுறையினருக்கு உணர்த்தின.
திரையில் ஈட்டிய செல்வத்தின் பெரும்பகுதியை வளர்ந்துவந்த இந்தியாவுக்கு நன்கொடையாக அளித்து முன்மாதிரியை உருவாக்கிய தேசியக் கலைஞர் சிவாஜி.
இயற்கைப் பேரிடர்கள், அண்டை நாடுகளுடனான எல்லைப் பாதுகாப்புப் போர் போன்ற தேசிய நெருக்கடிகளை தேசம் எதிர்கொண்ட எல்லாக் காலகட்டங்களிலும் முதல் ஆளாகவும் முன்மாதிரியாகவும் இருந்து சிவாஜி கணேசன் நன்கொடைகளை அள்ளிக் கொடுத்திருக்கிறார்.
1965 இல் இந்தியா-பாகிஸ்தான் போரின்போது தனது மனைவியின் தங்க நகைகள், பெங்களூரில் தனக்குப் பரிசாக அளிக்கப்பட்ட தங்க பேனா ஆகியவற்றைப் பிரதமரிடம் வழங்கினார். கயத்தாறில் கட்டபொம்மன் தூக்கிலிடப்பட்ட இடத்தை விலைக்கு வாங்கி, அங்கே தனது செலவில் கட்டபொம்மனுக்கு நினைவுச் சின்னம் அமைத்தார்.
இப்படி நாட்டுக்காகத் தன் தொழிலையும் அதில் ஈட்டிய செல்வத்தையும் பயன்படுத்திய சிவாஜி கணேசனை, இந்தியாவின் கலைத் தூதராகத் தன் நாட்டுக்கு அழைத்து கௌரவப்படுத்தியது அமெரிக்கா.
- ஜெயந்தன்
படம் உதவி: ஞானம்