Published : 28 Jul 2022 06:33 AM
Last Updated : 28 Jul 2022 06:33 AM
செஸ் விளையாட்டு தமிழில் சதுரங்கம் என்றும் சில நேரம் அழைக்கப்படுகிறது. செஸ் விளையாட்டைச் சதுரங்கம் என்றழைப்பது தவறு. சதுரங்கம் என்பது பண்டைக் கால இந்தியாவில் அரசர்கள் விளையாடிய ஒரு வகை விளையாட்டு.
சதுர் என்றால் நான்கு, அங்கம் என்றால் நான்கு படைகளை அடையாளப்படுத்தி விளையாடக்கூடிய விளையாட்டு என்று அர்த்தம் (சதுர்+அங்கம்).
அதற்கான பலகை ‘அஷ்டபதா’ என்கிற பெயரில் 64 கட்டங்களைக் கொண்டிருந்தாலும், கறுப்பு வெள்ளைக் கட்டங்களாக அவை இருக்காது. அதே நேரம், இதன் வளர்ச்சி பெற்ற நவீன வடிவமான செஸ், ஐரோப்பிய நாடுகளில் உருவானது. இதில் எதிரெதிராக 2 பேர் மட்டுமே விளையாட முடியும்.
மல்லையின் உலகப் புகழ்
44 ஆவது செஸ் ஒலிம்பியாட் வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரத்தில் நடைபெறுவதன் மூலம், இந்தக் கடற்கரை நகரம் மீண்டும் சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ளது. பல்லவர்களின் இரண்டாவது தலைநகரான மாமல்லை, பண்டைக் காலத்தில் கடல் வாணிபத்திலும் சிறந்து விளங்கியது. பல்லவர்களின் அற்புதமான கட்டிடக் கலைக்குப் பெயர்பெற்ற மாமல்லபுரத்தில் கடற்கரை கோயில், ஐந்து ரதங்கள் உள்ளிட்ட சிற்பக் கலை அற்புதங்கள் உள்ளன.
தாஜ்மகாலுக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மிகச் சிறந்த கட்டிடக் கலை மையமாக மாமல்லை கருதப்படுகிறது.
கடந்த 2019இல் இந்தியா - சீனா இடையே முறைசாரா உச்சி மாநாடு மாமல்லையில் நடைபெற்றது. பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஷி ஜின்பிங்கும் இங்கே சந்தித்துக்கொண்டதன் மூலம் மாமல்லை உலக அளவில் வெளிச்சம் பெற்றது. தற்போது செஸ் ஒலிம்பியாட் நடைபெறுவதன் மூலம் மீண்டும் மாமல்லை மீது உலகின் கவனம் குவிந்திருக்கிறது.
நம்பிக்கை நட்சத்திரம் ‘பிரக்’
செஸ் விளையாட்டில் 16 வயதிலேயே உலக அளவில் இந்தியாவின் பெருமையை நிலைநாட்டியிருக்கிறார் ஆர்.பிரக்ஞானந்தா. உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை அண்மையில் இரண்டு முறை வீழ்த்தி, உலக செஸ் அரங்கின் அடுத்த நம்பிக்கை நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார்.
கரோனா நோய்த்தொற்றால் கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பெரும்பாலும் இணையவழி செஸ் போட்டிகளில்தான் பிரக்ஞானந்தா பங்கேற்றிருந்தார். கிளாஸிக் போட்டிகளில் விளையாடாததால் அவருடைய ரேட்டிங் புள்ளிகள் குறைந்துள்ளன.
என்றாலும் 2022 செஸ் டூர் தொடரில் இரண்டாமிடம், செஸ்ஸபில் மாஸ்டர்ஸ் ஆன்லைன் ரேபிட் தொடரில் முதலிடம் பிடித்தார் பிரக்ஞானந்தா. முதன்முறையாக செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்கும் பிரக்ஞானந்தா இதிலும் அழுத்தமான முத்திரையைப் பதிப்பார் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
- மிது கார்த்தி
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT