

யார் தொடங்குவது?
எல்லா விளையாட்டுகளையும் போலவே செஸ் விளையாட்டிலும் யார் முதலில் தொடங்குவது என்பதற்கு டாஸ் போட்டு முடிவெடுக்கப்படும். ஆனால், செஸ்ஸில் டாஸ் போட நாணயம் பயன்படுத்தப்படாது.
கறுப்பு நிற சிப்பாய் (பான்) காயையும் வெள்ளை நிற சிப்பாய் காயையும் எடுத்துக்கொண்டு, மூடிய கையினுள் காயை வைத்துக்கொண்டு, எதிரில் இருப்பவரின் தேர்வு கேட்கப்படும்.
அவர் வெள்ளை நிற சிப்பாய் இருக்கும் காயைத் தேர்வுசெய்தால், வெள்ளை நிற காய்களைக் கொண்டு ஆட வேண்டும். வெள்ளை நிறத்தைப் பெற்றவரே முதலில் ஆட்டத்தைத் தொடங்குவார். அதே நேரம், ஆட்டத்தின் வெற்றி, தோல்வி ஆடும் முறை சார்ந்ததே தவிர, தேர்ந்தெடுக்கப்படும் காய்களின் நிறத்தைச் சார்ந்தது அல்ல. எனவே, கறுப்பு நிறக் காய்கள் என்றால் பின்னடைவு என்று அர்த்தமல்ல.
வெற்றியுமில்லை... தோல்வியுமில்லை
செஸ் ஆட்டம் டிராவில் முடிந்தால் இரு ஆட்டக்காரர்களுக்கும் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும். என்னென்ன காரணங்களால் ஆட்டம் டிரா ஆகும்?
வீரர்கள் இருவரும் ஆட்டத்தைச் சமன் செய்துகொள்ளலாம் என ஒருமித்த முடிவெடுத்தால். இரண்டு வீரர்களும் ஒரே காயைக் கொண்டு, ஒரே விதமான நகர்வை மூன்று முறை (Three fold repetition) ஆடினால், ஆட்டம் சமன் ஆகும்.
செஸ் போர்டில் வெள்ளை ராஜா, கறுப்பு ராஜா மட்டுமே எஞ்சியிருந்தால். வெள்ளை, கறுப்பு இரண்டு பிரிவிலும் ராஜாவோடு ‘மைனஸ் பீஸ்’ எனப்படும் பிஷப், குதிரை போன்ற காய்கள் மட்டுமே இருந்தால் ஆட்டம் டிரா ஆகும்.எதிரில் ஆடுபவருக்குப் பலகையில் காய்களை நகர்த்துவதற்கே வழியில்லாமல் போகும் நிலைக்கு ‘ஸ்டேல்மேட்’ என்று பெயர். இந்த நிலை ஏற்பட்டாலும் ஆட்டம் ‘டிரா’ ஆகிவிடும்.
நான்கு முக்கியக் கட்டங்கள்
எதிராளியின் ராஜாவுக்கு ஒருவர் ‘செக்’ வைத்து, அவரால் ராஜாவை நகர்த்த முடியாமல் போனால் ஆட்டம் முடிவுக்கு வந்துவிடும். இதற்கான போராட்டத்தில் செஸ் பலகையின் 64 கட்டங்களும் முக்கியமானவைதான். ஆனால் E4, E5, D4, D5 என்னும் நான்கு கட்டங்கள்தான் செஸ் ஆட்டத்தின் முக்கிய சதுரங்கள். இந்த சதுரங்களைப் பிடிப்பதற்குத் தடுப்பாட்டம், தாக்குதல் ஆட்டம் இரண்டையும் வீரர்கள் முயன்று பார்ப்பார்கள்.
- வா.ரவிக்குமார்