

இந்திய செஸ் விளையாட்டின் உலக முகமான விஸ்வநாதன் ஆனந்த், இளம் வீரர், வீராங்கனைகளுக்கு உத்வேகம் அளிப்பவராகத் திகழ்பவர். அவருடைய சில மைல்கல் சாதனைகள்:
1983 - இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை முதன்முறையாக வென்ற அதே ஆண்டில், 14 வயதில் தேசிய சப்-ஜூனியர் கோப்பையைக் கைப்பற்றினார்.
1984 - கோவையில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் செஸ் போட்டியில் கோப்பையை வென்றார். இதன்மூலம் சர்வதேச அளவிலான செஸ் கோப்பையை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
1985 - ஹாங்காங்கில் நடைபெற்ற ஆசிய ஜூனியர் போட்டியில் வென்றார். அர்ஜுனா விருது வழங்கப்பட்டது.
1986 - தேசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டியை அடுத்தடுத்த ஆண்டுகளில் வென்றார்.
1987 - உலக ஜூனியர் செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்னும் புகழைப் பெற்றார்.
1988 - இந்தியாவின் முதல் கிராண்ட்மாஸ்டர் ஆனார்.பத்ம விருது வழங்கப்பட்டது.
1991 - ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.
2000 - உலகமே Y2K பிரச்சினையில் மூழ்கிக் கிடந்தபோது, அலெக்ஸி ஷிரோவை (ஸ்பெயின்) வீழ்த்திய ஆனந்த் முதன்முறையாக FIDE உலக செஸ் சாம்பியன் ஆனார்.
2001 - பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.
2007 - மெக்ஸிகோவில் நடைபெற்ற FIDE உலக செஸ் போட்டியில் தன்னுடைய தன்னிகரற்ற திறமையால் மொத்தமுள்ள 14 புள்ளிகளில் 9 புள்ளிகளைப் பெற்று சாதனை படைத்து உலக சாம்பியன் ஆனார்.
2008 – ரஷ்யாவின் விளாடிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி ஆனந்த் உலக சாம்பியன் ஆனார். பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது.
2010 – பல்கேரியாவின் சோபியாவில் நடைபெற்ற உலக செஸ் போட்டியில் பங்கெடுப்பதற்காக ஃபிராங்பட்டிலிருந்து விமானத்தில் பயணிக்க இருந்தார் ஆனந்த். ஆனால், அந்தப் பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்பின் காரணமாக விமானம் ரத்துசெய்யப்பட்டது. ஆனாலும் 40 மணி நேரம் சாலை வழியாகப் பயணித்து போட்டி நடந்த இடத்துக்குச் சென்ற ஆனந்த், வெஸலின் டோபலோவை (பல்கேரியா) வென்றார்.
2012 – இஸ்ரேலின் போரிஸ் கெல்பாண்டை வீழ்த்தி ஆனந்த் உலக சாம்பியன் ஆனார்.
2017 – ரஷ்யாவின் விளாடிமிர் ஃபெடோஸீவை வென்று உலக ரேப்பிட் செஸ் சாம்பியனாக ஆனந்த் வாகை சூடினார்.
- வா.ரவிக்குமார்