திறன்பேசியைத் தள்ளிவைப்பதால் பிரச்சினை தீர்ந்திடுமா?

திறன்பேசியைத் தள்ளிவைப்பதால் பிரச்சினை தீர்ந்திடுமா?
Updated on
3 min read

கரோனா ஊரடங்குக்கு முன்பு பேசப்பட்டதுபோலவே, ‘திறன்பேசிகளால் மாணவர்கள் கெட்டுப்போய்விட்டார்கள்’ என மறுபடியும் பேச்சு எழத் தொடங்கியிருக்கிறது. ‘பள்ளிக்குத் திறன்பேசிகள் கொண்டுவரப்பட்டால் பறிமுதல் செய்யப்படும்’ என்கிற எச்சரிக்கையும் பல பள்ளி, கல்லூரிகளில் விடுக்கப்பட்டுள்ளது. திறன்பேசிகள் தீயவழியில் செல்வதற்காகவே உருவாக்கப்பட்டவையா?

சில ஆண்டுகளுக்கு முன்பு பிலிப்பைன்ஸ் சென்றிருந்தபோது, ஒரு கல்வி வளாகத்தில் உயர்நிலைப் பள்ளி மாணவர்களின் செயல்பாடுகள் என்னைக் கவர்ந்தன. ஒருபக்கம், தான் படித்த கதையை ஒரு மாணவர் விவரித்துக்கொண்டிருந்தார். மற்றொரு பக்கம், குழுவாக அமர்ந்து ஒரு தலைப்பை மாணவர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். அடுத்த மரத்தடியில், நாடகம் நடைபெற்றுக்கொண்டிருந்தது.

இவை அனைத்தையும் அந்தந்தக் குழுவில் இருந்த இருவர் காணொளிப் படம் எடுத்துக்கொண்டிருந்தார்கள். என்னவென்று விசாரித்தேன். “பாடங்களைப் பேசி, நடித்து, காணொளியாகப் பதிவுசெய்து ஆசிரியரின் மின்னஞ்சலுக்கு அனுப்புவோம். ஆசிரியர் பார்த்த பிறகு, எங்கள் பாடத்துக்கென்று உருவாக்கப்பட்டுள்ள மெசெஞ்சர் குழுவில் அவற்றைப் பகிர்ந்துகொள்வார். மறுநாள் இது குறித்து வகுப்பில் விவாதிப்போம்” என்றனர்.

இதே காலகட்டத்தில், ‘குறுஞ்செய்தி அனுப்புவதைத் தவிர திறன்பேசியில் வேறெந்தச் செயல்பாடும் தெரியாது’ என்று சொன்ன, இணையதளத்தைத் திறந்து மின்னஞ்சல் அனுப்பத் தெரியாத சில ஆசிரியர்களைத் தமிழ்நாட்டில் நான் பார்த்திருக்கிறேன். திறன்பேசிகளைத் தொடுவதே பாவம் என்று ஒதுக்கப்பட்ட குழந்தைகளையும் கண்டிருக்கிறேன்.

கல்லூரி சென்ற பிறகும்கூட கணினியில் புதிதாக ஒரு எழுத்துக்கோப்பை உருவாக்கவோ, பவர் பாயின்ட் தயாரிக்கவோ, இணையவழித் தேர்வுகளை எழுதவோ தெரியாத அல்லது அவற்றைப் பார்த்து அஞ்சும் மாணவர்களையும் பார்க்க முடிகிறது.

கரோனா தந்த பதில்

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில், மெய்நிகர் வழியாகப் பாடங்கள் நடத்தத் தொடங்கப்பட்டபோது மின்னஞ்சல் கணக்குத் தொடங்குவது எப்படி, ஸூம் அல்லது கூகுள் ஃபார்ம் எப்படி வேலைசெய்யும் என்றெல்லாம் தெரியாமல் தொடக்கத்தில் மாணவர்கள் தடுமாறினார்கள்.

ஆனால், சில நாட்களிலேயே யாருடைய உதவியும் இன்றி இணையத்தில் அவர்கள் உலவத் தொடங்கினார்கள். பவர் பாயின்ட் தயாரித்துப் பாடங்களை விளக்கினார்கள். காணொளியாகப் பதிவுசெய்தார்கள். மரத்தடியிலும் வீடுகளிலும் முந்தைய தலைமுறையினர் குழுவாகப் படித்ததுபோல, புலனத்தில் (வாட்ஸ்அப்) குழு அமைத்துப் படித்தார்கள். இணையப் பக்கத்தில் தேர்வு எழுதவும் எழுதிய தேர்வுகளைச் சமர்ப்பிக்கவும் கற்றார்கள்.

திறன்பேசிகளின் வழியாக ஓவியம், இசை, நாடகப் பயிற்சிகளிலும் கதை சொல்லும் அமர்வுகளிலும் பங்கேற்றார்கள். தங்கள் ஆசிரியர்கள் பங்கேற்ற மெய்நிகர் கருத்தரங்குகளிலும் மாணவர்களைப் பார்க்க முடிந்தது. வலையொளிகளில் (யூடியூப்), கைவினைப் பொருட்கள் செய்வது, கதை கேட்பது தொடர்பான காணொளிகளைப் பார்த்துக் கற்பனையையும் திறமையையும் பலர் வளர்த்துக்கொண்டார்கள்.

“முன்பு இருந்ததைவிட, ஒரு காட்சியைப் பார்த்தவுடன் மனதில் பதியவைத்துக்கொள்ளும் ஆற்றல் (Visual memory) மாணவர்களிடம் அதிகரித்திருக்கிறது,” “WHO என்றால் என்ன எனக் கேட்டால் இணையத்தில் தேடித் தெரிந்துகொள்கிறார்கள்,” “யாராவது சொல்லித்தரமாட்டார்களா என அடுத்தவர்களை எதிர்பார்த்திருந்தவர்கள், தாங்களாகவே தேடுகிறார்கள். எதையும் கண்ணை மூடி நம்பாமல் தேடிக் கண்டடைகிறார்கள்” என இவற்றின் பயன்கள் ஊரடங்குக்குப் பிந்தைய வகுப்பறைகளில் வெளிப்படுவதை ஆசிரியர்கள் உறுதிப்படுத்துகிறார்கள்:

வழிமுறைகள் இருக்கின்றன

தன் பாடத்துக்கென்று ஒரு குழுவைப் புலனத்தில் ஆசிரியர்கள் உருவாக்கலாம். பாடத்தில் எழும் சந்தேகங்களை மாணவர்கள் அதில் கேட்கலாம். மற்ற மாணவர்களும் பதில் சொல்லலாம். நேரில் சந்தேகம் கேட்கப் பயப்படும் மாணவர்கள், புதிய பகிர்தல் குழுவில் இயல்பாக இருப்பதைக் காண முடியும். வகுப்பில் விரைவாகவும் எளிமையாகவும் குறிப்பெடுக்கும் மாணவர்கள், மற்ற மாணவர்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொள்ளலாம். பாடத்தை ஒரு மாணவர், மற்ற மாணவருக்கு விளக்குவதைக் காணொளியாக அனுப்பச் சொல்லலாம்.

இதிலிருந்து, எளிய முறையில் குழந்தைகள் விளக்குவது எப்படி என்பதை ஆசிரியரும் கற்றுக்கொள்ள முடியும். வகுப்புக்கு ஒரு வலையொளிப் பக்கத்தை உருவாக்கி, மாணவர்கள் தயாரித்த காணொளிகளைப் பதிவேற்றலாம். காலாகாலத்துக்கும் அது இருக்கும்.

“கரோனாவுக்குப் பிறகு அறிந்துகொள்ளும் வேகம் சில மாணவர்களுக்கு அதிகரித்துள்ளதால், அவர்களின் வேகத்துக்கு ஈடுகொடுக்க வேண்டியுள்ளது” என ஃபேஸ்புக்கில் ஆசிரியை ஒருவர் எழுதியிருந்தார். இத்தகைய மாணவர்கள் சோர்ந்துவிடாதிருக்க சமூகம், ஆங்கிலம், உளவியல், கணிதம், இலக்கியம், அறிவியல் தொடர்பான காணொளிகள், இதழ்கள், செய்தித்தாள்கள், இணைய இதழ்கள், வலையொலி (பாட்காஸ்ட்) உள்ளிட்டவற்றை ஆசிரியர்கள் அறிமுகப்படுத்தலாம். ‘வேர்டில்’, ‘தமிழாடல்’, ‘சொல்லியடி’ போன்ற செயலிகளை அறிமுகப்படுத்தி விளையாடலாம். எண்ணற்ற வார்த்தைகளை மாணவர்கள் கற்றுக்கொள்ள இது வழிவகுக்கும்.

ஆபத்தும் பாதுகாப்பும்

அதே நேரம் திறன்பேசிகளை மாணவர்கள் தவறாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியம் இருப்பதை மறுப்பதற்கும் இல்லை. மற்ற மாணவர்களின் தகவல்களைத் திருடுவது, இணையவழியில் மிரட்டுவது, பாடங்கள் தவிர்த்த வேறு பக்கங்களில் நேரத்தைச் செலவிடுவது, மற்றவர்களின் மன உணர்வுகளைப் பாதிக்கும் தகவல்களைப் பகிர்ந்துகொள்வது போன்றவற்றைச் செய்யாதிருக்க சுய ஒழுக்கத்தைக் கற்பிக்க வேண்டும். இணையவெளியில் உலவும் எல்லாரும் உண்மையான முகத்தைக் காட்டுவதில்லை என்பது குறித்துப் புரிய வைக்க வேண்டும். ஆசிரியர்களும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

திறன்பேசிகளை ஆக்கபூர்வமாகப் பயன்படுத்துவது குறித்து மாணவ - ஆசிரியர் பிரதிநிதிகள், பள்ளி மேலாண்மைக் குழுவினர் கலந்துரையாடி வழிகாட்டு நெறிமுறைகளை வகுக்க வேண்டும். வாய்ப்புள்ள பள்ளிகள், திறன்பேசியைக் கையாளும் மேலாண்மை அமைப்பை (Mobile Device Management) நிறுவலாம்.

தொலைக்காட்சி, கணினி, இணையம் உள்ளிட்ட எல்லா நவீனத் தொழில்நுட்ப வளர்ச்சிகளும் சாதக, பாதக அம்சங்களைக் கொண்டிருக்கின்றன. இந்த வளர்ச்சிகளை முற்றிலும் புறக்கணிப்பதோ, ஒதுக்கிவைப்பதோ சாத்தியமில்லை. எனவே, அந்த வசதிகளை ஆக்கபூர்வமாக எப்படிப் பயன்படுத்தலாம், அவற்றின் திசைதிருப்பல்களிலிருந்து எச்சரிக்கையுடன் இருப்பது எப்படி என்கிற பயிற்சியும் தெளிவும் அனைத்து நிலைகளிலும் தேவைப்படுகிறது.

இது சார்ந்த முறைப்படுத்துதல் பயிற்சி இல்லாதவரையில் அவற்றால் மாணவர்கள் திசைதிருப்பப்படுவதற்கான சாத்தியம் அதிகரிக்கிறது. இளம் வயதில் சாகச உணர்வு, கற்பனைத்திறன், மற்றவர் கவனத்தை ஈர்க்க முயலுதல் போன்ற பல்வேறு அம்சங்கள் கொப்பளித்துக்கொண்டிருக்கும்.

இந்தப் பின்னணியில் மலிவான அம்சங்களால் அவர்கள் திசைதிருப்பப்படாமல் இருக்கவும், ஆக்கபூர்வமாக ஒரு சாதனத்தைப் பயன்படுத்தவும், முறைப்படுத்தும் பயிற்சிகளும் வழிகாட்டலும் அவசியம் தேவை. அந்தத் திசை நோக்கிச் சிந்திப்பதே சிறந்த வழி.

- சூ.ம.ஜெயசீலன், ‘இது நம் குழந்தைகளின் வகுப்பறை’ உள்ளிட்ட நூல்களின் ஆசிரியர்.தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in