

‘காடோடி’ என்னும் சூழலியல்சார் நாவலை எழுதியவரும் சூழலியல் எழுத்தில் தீவிரமாக ஈடுபட்டுவருபவருமான நக்கீரனிடம் முக்கியமான சூழலியல் நூல்களைப் பற்றிக் கேட்டோம்.
தமிழில் சூழலியல் அக்கறை சார்ந்த பசுமை இலக்கியம் புத்தாயிரத்துக்குப் பிறகே தொடங்கியது. புத்தாயிரத்துக்கு பிறகான நடப்புப் பதின் ஆண்டைச் சூழலியல் எழுத்துக்கானது எனலாம். இதை மெய்ப்பிக்கும் வகையில் பல பதிப்பகங்கள் சூழலியல் சார்ந்த நூல்களைக் கொண்டுவருகின்றன. இதற்கான முயற்சியைப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி வைத்த பெருமை ‘பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பைத் தொடங்கிய நெடுஞ்செழியனுக்கே உரியது. இவ்வமைப்பின் வழி இத்துறை சார்ந்த ஏராளமான மொழிப்பெயர்ப்பு நூல்களை வெளியிட்டு கவனம் பெறவைத்தது இவரது சாதனையாகும். இதன் தொடர்ச்சியாகத் தற்போதும் பல மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகின்றன.
புத்தாயிரத்துக்குப் பிறகு, சூழலியல் அறிவைப் பெருக்கிக்கொள்ள உதவும் சிறந்த பத்து நூல்கள்:
1. பேராசிரியர் கு.வி.கிருஷ்ணமூர்த்தியின் தமிழரும் தாவரமும்
(பாரதிதாசன் பல்கலைக்கழகம்): கடும் உழைப்பில் உருவான தமிழகத்துத் தாவரங்களையும் குறித்த முழுமையான கலைக் களஞ்சியம்.
2. பழ. கோமதிநாயகத்தின் தமிழகம்… தண்ணீர்… தாகம் தீருமா?
(பாவை பப்ளிகேஷன்ஸ்): தமிழ்நாட்டின் தற்போதைய தண்ணீர் சிக்கல் தொடங்கிய இடத்தை அடையாளம் காட்டும் நூல்.
3. பொ.ஐங்கரநேசனின் ஏழாவது ஊழி
(சாளரம்): நம்மைச் சுற்றிலும் உள்ள, நாம் அறியாத பல ஆபத்துகளை அறிவிக்கும் நூல்.
4. சு. தியடோர் பாஸ்கரனின் இன்னும் பிறக்காத தலைமுறைக்காக
(உயிர்மை): தமிழில் இயற்கை சார்ந்து கவனம் குவியக் காரணமான நூல்.
5. ச.முகமது அலி, க. யோகானந்தின் யானைகள் அழியும் பேருயிர்
(இயற்கை வரலாற்று அறக்கட்டளை): யானையைக் குறித்து அறிவியல் பூர்வமான அரிய தகவல்களோடு வெளிவந்த நூல்.
6. பாமயனின் அணுகுண்டுகளும் அவரை விதைகளும்
(தமிழினி): அதிர வைக்கும் பல சூழலியல் கட்டுரைகளின் தொகுப்பு.
7. வறீதையா கான்ஸ்தந்தின் எழுதிய நெய்தல் சுவடுகள்
(தமிழ்நாடு மீன் தொழிலாளர் யூனியன் வெளியீடு): கடல் குறித்து எவரும் அறியாத உண்மைகளை எடுத்துரைக்கும் நூல்.
8. இரா. முருகவேளின் கார்பரேட் என்.ஜி.ஓக்களும் புலிகள் காப்பகங்களும்
(பாரதி புத்தகாலயம்): சூழலியலைக் காக்கப் போராடும் பல என்.ஜி.ஓக்களின் பின்னணி மர்மங்களைப் போட்டுடைக்கும் நூல்.
9. தி. இராமகிருட்டிணனின் நம்பிக்கையும் நடப்பும்
(நிறைவு பதிப்பகம்): நாளிதழ்களில் நாம் கவனிக்க மறந்த சூழலியல் செய்திகளோடு மேலும் பல அரிய சூழலியல் செய்திகள் உள்ளடங்கிய தொகுப்பு.
10. பொன்.தனசேகரனின் நிகழ்காலம்
(கார்த்திலியா): காலநிலை மாற்றம் தமிழகத்தில் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் பற்றிய ஆய்வு நூல்.