

பெரியார் பல்கலைக்கழகம் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளின் மாணவர்கள் அரசியல் பரப்புரைகளைச் செய்யத் தடை விதித்து, துணைவேந்தரின் சார்பில் பதிவாளர் அனுப்பிய சுற்றறிக்கை திரும்பப் பெறப்பட்டுவிட்டாலும் அந்தச் சுற்றறிக்கை கடந்த சில நாட்களாகத் தமிழ்நாட்டின் கல்வி வட்டாரங்களில் ஏற்படுத்தியுள்ள விவாதங்கள் கவனத்தோடு பரிசீலிக்கப்பட வேண்டியவை.
மாணவர்கள் அரசியலிலிருந்து விலகியிருக்க வேண்டும், அரசியல் ஈடுபாட்டால் அவர்களின் கல்வி பாழாகிவிடக் கூடாது என்ற அறிவுறுத்தலே இந்தச் சுற்றறிக்கையின் நோக்கமாக இருக்கிறது. உயர் கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறைகள் அரசியல் உணர்வுக்கு அந்நியமானவை என்ற மனப்போக்கு கல்வி நிறுவனங்களைப் பீடித்திருப்பதைப் புரிந்துகொள்ளும் வாய்ப்பாக இதைக் கொள்ள வேண்டும்.
மாணவர் அரசியலிலிருந்து முகிழ்த்தெழுந்து, தேர்தல் அரசியலில் பெருவெற்றியைப் பெற்ற ஓர் இயக்கம் ஆட்சியில் இருக்கும்போது, இப்படியொரு சுற்றறிக்கை வெளிவந்திருப்பதே விதிமுறைகளுக்கும் நடைமுறைக்கும் உள்ள இடைவெளியை எடுத்துக்காட்டப் போதுமானது.
வாக்களிக்கும் வயது 18 ஆகக் குறைக்கப்பட்ட பிறகு, கல்லூரி மாணவர்களும் வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்கள். இந்திய அரசமைப்பு அவர்களுக்கு அளித்துள்ள அடிப்படை உரிமைகளின்படி, எந்தவொரு அரசியல் அமைப்பிலும் தங்களை உறுப்பினராக இணைத்துக்கொள்ளவும் அவ்வமைப்பின் கருத்துகளை வாய்ப்புள்ள இடங்களில் பரப்புரை செய்யவும் அவர்கள் உரிமை பெற்றிருக்கிறார்கள்.
எனவே, மாணவர்களின் அரசியல் ஈடுபாடுகளைத் தரம் உயர்த்தக்கூடிய வாய்ப்புகளை உயர் கல்வி நிறுவனங்கள் மேற்கொள்வதே சரியான அணுகுமுறையாக இருக்க முடியும். பல்கலைக்கழக, கல்லூரி வளாகங்களில் மாணவர்கள் பங்கேற்கும்வகையில் அரசியல் விவாதங்களுக்கான வாய்ப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
அரசியல் அறிவியல் என்பது கலைப் பாடங்களில் ஒன்றாக மட்டும் சுருக்கப்பட்டுவிடக் கூடாது. தொடர்புடைய பிற துறை மாணவர்கள் மட்டுமின்றி அறிவியல், தொழில்நுட்ப மாணவர்களும் அவ்விவாதங்களில் பங்கெடுத்துக்கொள்ளும் சூழல் உருவாக வேண்டும்.
தொழில்நுட்பம் பயிலும் மாணவர்கள் பள்ளிப் பாடங்களுக்குப் பிறகு, அரசியல் குறித்தும் அரசமைப்பின் அடிப்படைக் கொள்கைகள் குறித்தும் தெரிந்துகொள்ளும் வாய்ப்புகளை முற்றிலுமாக இழந்துநிற்கிறார்கள். தொழில்நுட்பக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இக்காலத்தில், மாணவர்களில் பெருந்திரளானவர்களை அரசியல் விலக்கம் செய்வதென்பது உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பது ஆகாது.
நமது அருகமை மாநிலங்களில், மாறுபட்ட அரசியல் கருத்துடைய மாணவர்களிடையே அவ்வப்போது மோதல்கள் நடக்கும் அளவுக்கு நிலைமை மோசமாகிவிடுகிறது. தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்களிலோ, மாணவர் அமைப்புகளின் செயல்பாடு என்பது கல்விக் கட்டண உயர்வை எதிர்த்தும் அடிப்படை வசதிகளைக் கோரியும் வகுப்புகளைப் புறக்கணிக்கும் கவன ஈர்ப்புப் போராட்டங்களை நடத்துவதாக மட்டுமே இருக்கிறது.
அதையும்கூட, கல்வி நிறுவனங்களின் நிர்வாகங்கள் விரும்பவில்லை என்பதையே இச்சுற்றறிக்கை தெரிவிக்கிறது. பெரியார் பல்கலைக்கழகம் நடத்திவரும் தொலைதூரப் படிப்புகள் செல்லாது என்று பல்கலைக்கழக மானியக் குழு மாணவர்களை எச்சரித்துள்ள இந்நேரத்தில், அப்பல்கலையின் பதிவாளரிடமிருந்து இப்படியொரு சுற்றறிக்கை வந்திருப்பதும் அது திரும்பப் பெறப்பட்டிருப்பதும் மாணவர்களின் கவனத்தைக் கலைக்கும் முயற்சி என்று பொருள்கொள்ளவும் இடமளிக்கிறது.