Last Updated : 30 Apr, 2022 05:49 PM

 

Published : 30 Apr 2022 05:49 PM
Last Updated : 30 Apr 2022 05:49 PM

இந்திய தேர்தல் வெற்றிகளுக்கு 'பிரசாந்த் கிஷோர்'கள் அவசியம்தானா? - ஒரு பார்வை

இந்திய தேர்தல் களத்தை பிராசந்த் கிஷோருக்கு முன்னர், பிரசாந்த் கிஷோருக்கு பின்னர் என்று இரண்டு விதமாக பிரித்துக் கொள்ளலாம் என்ற அளவுக்கு தேர்தல் உத்திகளை வகுப்பதில் வித்தகராக அவர் இருப்பதாகவே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். ஆனால், அதேவேளையில் 'பிரசாந்த் கிஷோர்'கள் இருந்தால் மட்டும்தான் இனி இந்திய தேர்தல் களத்தில் வெற்றியும், தோல்வியும் நிர்ணயமாகுமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகின்றன.

யார் இந்த பிரசாந்த் கிஷோர்? - முதலில் பிரசாந்த் கிஷோர் யார் என்பதை சுருக்கமாகத் தெரிந்து கொள்வோம். பிஹார் மாநிலத்தில் பிறந்த பிரசாந்த் கிஷோர், ஐக்கிய நாடுகள் சபையில் பொது சுகாதார ஆய்வாளராக 8 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அதன் பின்னர் அவர் தாயகம் திரும்பினார்.

2012 குஜராத் தேர்தலில் மோடி வெற்றி பெறமாட்டார் என்று அடித்துச் சொல்லப்பட்டபோது தனது தேர்தல் உத்திகளால் மோடியை வெற்றியடையச் செய்தார். அந்த வெற்றியை அப்படியே மோடி அலை என்று மாற்றி 2014 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் பரப்புரையாக்கினார் பிகே என்றழைக்கப்படும் பிரசாந்த் கிஷோர்.

2014-ல் இந்திய நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் மோடி அலை என்ற பேச்சுகள் வருகின்றன. செல்லுமிடமெல்லாம் பாஜகவினர் மோடி அலை (Modi wave) என்று பேச ஆரம்பித்தனர். அந்த வார்த்தையை உருவாக்கிக் கொடுத்தவரே பிரசாந்த் கிஷோர்தான். சமூக வலைதள பிரச்சாரம், கூட்டணி, ரோட் ஷோ (Road Show) என பலவற்றையும் புள்ளிவிவரங்கள், தரவுகள் அடிப்படையில் வியூகங்கள் வகுத்துக் கொடுத்து பாஜகவிற்கு வெற்றி மேல் வெற்றி பெற்றுத் தந்தார்.

ஆனால், 2015-ல் பாஜகவுடனான பிகே நட்பில் பின்னடைவு ஏற்படுகிறது. பாஜகவைத் தாண்டி பல்வேறு அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் உத்திகளை வகுத்துக் கொடுக்க ஆரம்பித்தார். பிஹாரில் நிதிஷ் குமார், லாலு பிரசாத் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய மகா கூட்டணியால், மோடி அலையை சாய்க்கும்படி செய்தார். இதனால் பிகேவுக்கு நிதிஷ் குமாரின் ராஷ்டிரீய ஜனதா தள கட்சியின் துணைத் தலைவர் பதவியும் கூட வழங்கப்பட்டது. 2016-ல் பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி அமைய வியூகம் வகுத்தார். 2019-ல் ஆந்திராவில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்க வழிவகுத்தார்.

2017-ல் உத்தரப் பிரதேச தேர்தலில் காங்கிரஸுக்காகப் பணியாற்றினார். ஆனால், அந்தத் தேர்தலில் பாஜக பிரமாண்ட வெற்றி பெற்றது. இதுதான் பிகேவின் முதல் சரிவு என அறியப்படுகிறது. பின்னர் 2021-ல் நடந்த ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிகளுக்காக பிகே பணியாற்றினார். அந்தக் கட்சிகளுக்கு அவர் வகுத்துக்கொடுத்த பாதை வெற்றியையும் பெற்றுத் தந்தது. இப்போதும் கூட தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சியுடன் கைகோத்துள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சியில் இணைவார் எனப் பேசப்படதற்கு, 'இல்லவே இல்லை' என்று அவரே முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைத்துக் கட்சிகளுமே ஆயத்தமாகி வரும் இச்சூழலில் பிரசாந்த் கிஷோரின் பங்களிப்பு விவாதப் பொருளாகியுள்ளது.

இந்திய தேர்தல் களத்தில் பிரசாந்த் கிஷோர் அவ்வளவு முக்கியமானவரா? இந்தக் கேள்விக்கான விடையை முன்வைத்துள்ளார் தேர்ந்த அரசியல் பார்வையாளரும், விமர்சகருமான ஜாவேத் அன்சாரி. அவருடனான பேட்டியிலிருந்து சில துளிகள்:

இந்திய தேர்தல் களத்தில் பிரசாந்த் கிஷோர் அவ்வளவு முக்கியமானவரா?

"பிரசாந்த் கிஷோரின் அரசியல் உத்திகள் உண்மையிலேயே பாராட்டத்தக்கவைதான். அவர் சேகரிக்கும் தரவுகள் அத்தனையும் வாக்குகளாக மாறியிருக்கின்றனர். மோடி தொடங்கி கெஜ்ரிவால் வரை நிறைய பேரின் வெற்றியை அவர் நிர்ணயித்துள்ளார். அவருக்கு வெற்றி அடையாளம் இருக்கிறது. அதனால்தான் அவரைத் தாண்டி புதிதாக இன்னொரு பிரசாந்த் கிஷோர் உருவாக முடியவில்லை. இந்தியத் தேர்தல் களம் கடந்த சில ஆண்டுகளில் வெகுவாக மாறியுள்ளது. இப்போது ஒரு தேர்தலை எதிர்கொள்ள வாக்காளர்கள் பற்றிய தரவுகள் தேவைப்படுகின்றன, எண் விளையாட்டுக்கான உத்திகள் தேவைப்படுகின்றன. செய்தித் தொடர்பு நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். சமூக வலைதளங்கள் மூலம் விவாதத்தை உண்டாக்க நிபுணர்கள் தேவைப்படுகின்றனர். இவை எல்லாமே பிகே என்ற ஒரு குடையின் கீழ் கிடைப்பதால் தேர்தலில் பிரசாந்த் கிஷோர் அவசியமாகக் கருதப்படுகிறார். இப்போதைய் சூழலில் மாயாவதி, இடதுசாரிகள் தவிர எல்லோருமே ஒரு தேர்தல் உத்தியாளரின் பலம் தேவை என்ற முடிவுக்கு வந்துவிட்டனர்."

அப்படியென்றால் அரசியல் கட்சிகள் மக்களிடமிருந்து விலகிச் செல்கின்றனவா?

"நிச்சயமாக இல்லை. ஓர் அரசியல் கட்சிக்கும் மக்களுக்கும் உள்ள நேரடித் தொடர்பை எந்த ஒரு தேர்தல் உத்தி வகுப்பாளராலும் மாற்றாக மாறிவிட முடியாது. இவர்கள் வெறும் கூடுதல் மதிப்பீடு (add on) மட்டுமே. தேர்தல் களத்தில் அரசியல் தலைவர்களின் முகம்தான் மக்கள் முன் நிற்கும். கட்சியின் செயல்பாடுகளின் அடிப்படையில்தான் அவர்களின் வாக்குகள் முடிவாகும். மேற்கத்திய நாடுகளில் காலங்காலமாக இதுபோன்ற தேர்தல் உத்தியாளர்கள் உள்ளனர். ஆனால், இந்தியா இப்போதுதான் இவர்களை அறிந்துகொண்டு வருகிறது. அதனால் பெரிதாக தெரிகிறது. அவ்வளவே. மக்கள்தொகை அடிப்படையிலான சில புள்ளிவிவரங்களை கட்சிகள் புரிந்துகொள்ளவும், சில மக்கள் பிரச்சினைகளை அறிந்துகொள்ள உதவலாம், அவர்களின் தேவைகள், எதிர்பார்ப்புகளை தொகுத்து கொடுத்து உதவலாம், பிரச்சார உத்திகள் ஆகியனவற்றை தெரிந்துகொள்ள வேண்டுமானாலும் இந்தத் தேர்தல் உத்தியாளர்கள் உதவியாக இருக்கலாம்."

ஒருவேளை இந்திய தேர்தல்கள் தனிநபர் சாந்த களமாக மாறுகிறதோ என்ற சந்தேகம் எழுகிறது. 2014, 2019 நாடாளுமன்றத் தேர்தல்களில் மோடி முன்னிலைப்படுத்தப்பட்டதாக இருக்கட்டும். 2022-ல் உ.பி. தேர்தலில் யோகி, மோடி முன்னிலைப்படுத்தப்பட்டதாக இருக்கட்டும். இந்த சந்தேகத்தை வலுப்பெறச் செய்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

"ஒரு நபரின் அல்லது கட்சியின் பலத்தை மிகைப்படுத்தி தூக்கிக் காட்டுவது, ஒருபுறம் தோல்விகளை மூடி மறைப்பது, இன்னொரு புறம் என செயல்படுவதே தேர்தல் உத்தி வகுப்பாளர்களின் பிரதான தந்திரம். தனிநபர் அடையாளம் சார்ந்து தேர்தல் களம் இயங்குவது முன்பிருந்தே இருக்கிறது. உதாரணத்திற்கு காங்கிரஸை எடுத்துக் கொள்ளுங்கள். ஒருகாலகட்டத்தில் இந்திரா காந்தி மட்டுமே அதன் அடையாளமாக இருந்தார். அவர் மறைவுக்குப் பின்னர் ராஜீவ் காந்தி அந்தக் கட்சியின் அடையாளமாக இருந்தார். பாஜகவின் முதல் மத்திய ஆட்சிக் காலத்தில் வாஜ்பாய்தான் அவர்களின் அடையாளமாக இருந்தார். அதைத்தான் இப்போது மோடி விஷயத்திலும் பயன்படுத்துகின்றனர். மோடியை அனைத்து மாநில தேர்தலிலும் அடையாளமாக்குகின்றனர். காலங்காலமாகவே ஒரு முகம் அல்லது சில முகங்கள் இவ்வாறான அடையாளமாக இருந்துள்ளன. அதனால் பிரசாந்த் கிஷோரால் தனிநபர அடையாள அரசியல் உருவாகிறது என்று ஏற்கமுடியாது."

நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்கிறேன்... இருந்தாலும் இப்போது அந்த அடையாள பிம்பம் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டதாகத் தோன்றுகிறது. நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் பாஜகவினர் மொத்தமுள்ள 543 தொகுதிகளிலும் மோடிதான் வேட்பாளர் என்ற தோற்றம் உண்டாக்கப்படுகிறதே...

"இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி காலத்தில் வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் இல்லை. இன்று இருக்கும் அரசியல் தலைவர்களுக்கு இந்த பலன் இருக்கிறது. அதன் வாயிலாக அவர்கள் நாடு முழுவதும் சென்று சேர்கின்றனர். இது அரசியலில் ஓர் எதிர்பாராத நகர்வுதான். இப்போது ஒவ்வொரு அரசியல் மேடையும் ஒரு பிராண்ட் அறிமுக நிகழ்வு போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக பாஜக எல்லா மேடைகளிலும் பிராண்ட் மோடியை வளர்த்தெடுக்கிறது. அவர்கள் மோடியில் ஒரு பிராண்ட் மதிப்பீடு இருப்பதாக நம்புகிறார்கள். அதை எக்காரணம் கொண்டும் இழக்க அவர்கள் விரும்பவில்லை."

காங்கிரஸில் சேருமாறு அளிக்கப்பட்ட வாய்ப்பை பிகே ஏன் நிராகரித்தார் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

"பிரசாந்த் காங்கிரஸில் என்ன எதிர்பார்த்தாரோ அதைக் கொடுக்காமல் இருந்திருக்கலாம். அவர் விரும்பியது காங்கிரஸில் இல்லாமலும் இருந்திருக்கலாம்.
இரண்டாவது விஷயம். பிகே இதுவரை பணியாற்றிய கட்சிகளில் எல்லாமே அவர் ஒற்றைத் தலைமைக்கு மட்டும்தான் பதிலளிக்க வேண்டியதாக இருந்தது. ஆனால், காங்கிரஸில் அப்படியல்ல. இங்கு ஒரு பவர் கமிட்டி உள்ளது. அதில் 8, 9 பேர் உள்ளனர். உண்மையில் பிரசாந்த் கிஷோர் இந்த அமைப்பிலேயே மாற்றம் ஏற்பட வேண்டும் என்று பரிந்துரைத்தார். அதை ஏற்க காங்கிரஸ் தயாராக இல்லை. சோனியா காந்தி காங்கிரஸ் தலைமையை ஏற்றதில் இருந்தே அவர் பிக் பேங் தியரி மாடல் மாற்றங்களை விரும்பவில்லை. ஆனால் பிகே அப்படியொரு மாற்றத்தை கொண்டுவர விரும்பினார். இவைதான் பிகே காங்கிரஸில் சேருவதை புறக்கணிக்கக் காரணமாக இருக்க வேண்டும்."

தேர்தல் களத்தில் பாஜகவின் சேதி எல்லோருக்கும் சென்று சேருகிறது. ஆனால் காங்கிரஸின் கருத்துகள் பெரிதும் சென்று சேருவதில்லை. இது ஏன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?

"இது மிகவும் முக்கியமான கேள்வி. இது காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ள நிலை அல்ல. இது ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்கும் ஏற்பட்டுள்ள நிலை. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளுக்குமே இது புரியாத புதிராக இருக்கிறது. நாட்டில் உள்ள இந்த அலையை எப்படி எதிர்கொள்வது எனத் தெரியாமல் தவிக்கின்றனர். முன்பெல்லாம் அரசியல் கட்சி மேடைகளில் தலைவர்கள் மதச்சார்பின்மைக்கு குரல் கொடுப்பார்கள். சிறுபான்மை நலனுக்கு குரல் கொடுப்பார்கள். ஆனால் இப்போதைய நிலையை எண்ணிப் பாருங்கள். காங்கிரஸ் மட்டுமல்ல இடதுசாரிகளையும் ஒப்பிட்டுப்பாருங்கள். இப்போதெல்லாம் எல்லா அரசியல் கட்சிகளும் ஒரு முடிவை எடுப்பதற்கு முன்னதாக ஒன்றல்ல, மூன்று முறை தங்களைத் தாங்களே பரிசோதனை செய்கின்றனர். இது பெரும்பான்மை சமூகத்தை சீண்டுமா என யோசிக்கின்றனர்.

இதுபோன்ற மெஜாரிட்டேரியனிஸம் அலைக்கு யாரிடமும் பதிலில்லை. அதில் ஒரு விதிவிலக்கு ராகுல் காந்தி. ராகுல் நிறைய தவறுகள் செய்துள்ளார். ஆனால் அவரிடம் ஒரே ஒரு துணிச்சல் இருக்கிறது. அது இந்த மெஜாரிட்டேரியனிஸம் அலைக்கு எதிராக குரல் எழுப்பும் துணிச்சல். அவர் ஆர்எஸ்எஸ் பற்றி துணிச்சலாக கேள்வி எழுப்புகிறார். ஆனால் அவர் எழுப்பும் கேள்விகள் சரியாக எல்லோரிடமும் சென்று சேரவில்லை. ஏனெனில் நாடு முழுவதுமே மெஜாரிட்டேரியனிஸம் அல்லது இந்துத்துவா அலையின் அழுத்தத்தில் இருக்கிறது. இந்தச் சூழலில் யாருமே நல்லறிவுக்கு செவி சாய்க்கத் தயாராக இல்லை."

ஆனால், தமிழகத்தில் திமுக, ஆந்திராவில் ஒய்எஸ்ஆர், ஒடிசாவில் பிஜு ஜனதா தளம், மேற்கு வங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ், தெலங்கானாவில் டிஆர்எஸ் என நிறைய மாநிலக் கட்சிகள் உள்ளன. அவை பாஜகவை வீழ்த்த முடியாதா?

"ஆம், இருக்கின்றன. ஆனால் அவற்றால் தங்கள் மாநிலத்தில் மட்டுமே பாஜக சித்தாந்தத்தை எதிர்த்துப் போராட முடியும். உண்மையைச் செல்ல வேண்டுமானால் தேசிய அளவில் பாஜகவை வீழ்த்த எந்த ஒரு தனிக்கட்சிக்கும் திறன் இல்லை. ஒருவேளை இந்தக் கட்சிகள் எல்லாம் இணைந்து வேண்டுமானால் முயற்சிக்கலாம். நிறைய மாநிலங்களில் இந்துத்துவத்தை எதிர்த்து, இந்தியை எதிர்த்து குரல் எழுகின்றன.

ஆனால், மக்களவை தேர்தல் வந்துவிட்டால் இந்தி பேசும் மாநிலங்களின் பலம் எண்ணிக்கை அடிப்படையில் அதிகமாக இருக்கிறது அல்லவா. அதுதான் இரண்டு முறையும் பாஜகவை அதிகாரத்தில் அமரச் செய்துள்ளது. பிரசாந்த் கிஷோர் இங்குதான் ஒரு தெளிவான யோசனையைக் கூறியுள்ளார். அவர் காங்கிரஸின் கொள்கைகளை ஒரு டெய்லர் மேட் கொள்கையாக உருவாக்கி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் எனக் கூறுகிறார். காரணம், மெஜாரிட்டேரியனிஸம் அலை இருந்தாலும் எல்லா இந்துக்களும் பாஜக முன்னெடுக்கும் இந்துத்துவ அரசியலை விரும்புபவர்களாக இல்லை. பெரும்பான்மையில் இருக்கும் சிறுபான்மையிலும், சிறுபான்மையில் இருக்கும் பெரும்பான்மையிலும் அக்கறை செலுத்த வேண்டும் எனக் கூறுகிறார். அப்படிச் செய்தால் காங்கிரஸின் கொள்கைகளை பெரும்பான்மை சமூகத்தில் உள்ள பாஜகவை ஆதரிக்காத மக்களிடம் துல்லியமாக எடுத்துச் செல்லலாம் எனக் கூறுகிறார்.

இந்திய தேர்தல் களத்தில் கட்சிகளின் வெற்றிக்கு பிரசாந்த் கிஷோர் அவசியம் என்று சொல்ல முடியாது. ஆனால், பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து வெற்றியாளராக செயல்படுவார்."

நேர்காணல்: அமித் பரூவா - 'தி இந்து' (ஆங்கிலம்)

தமிழில் பாரதி ஆனந்த்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x